Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை சமாளிப்பது எப்படி

நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை சமாளிப்பது எப்படி

நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை சமாளிப்பது எப்படி

நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை சமாளிப்பது எப்படி

PUBLISHED ON : டிச 27, 2023


Google News
Latest Tamil News
ஒரு ஏக்கருக்கு நெற்பயிருக்கு மேலுரமாக20 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ் தேவைப்படும்.

விவசாயிகள் நெற்பயிரின் தேவைக்கு மேலாகயூரியா உரமிடுவதால் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. சித்திரைக்கார், ஜோதி மட்டை ரகங்களில் தாக்குதல் குறைவாகவும், உயர் விளைச்சல் ரகங்களில் தாக்குதல் அதிகமாகவும் உள்ளது.

பெண் அந்துப் பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் 10 முதல் 15 முட்டைகளை ஒரே தொகுதியாக, வரிசையாக இடும். முட்டைகள் நீள்வட்ட வடிவில் மஞ்சள் கலந்த வெண்மை நிறமாக இருக்கும். 4 முதல் 7 நாட்களில் இளம்புழுக்கள் வெளிவரும். புழுப் பருவம் 15 முதல் 20 நாட்கள் நீடிக்கும். முழு வளர்ச்சியடைந்த பச்சைநிற புழு, இலைகளின் மடிப்பிற்குள்ளேயே கூண்டுப்புழுவாக மாறி 6 முதல் 8 நாட்களில் அந்துப்பூச்சிகள் வெளிவரும்.

தாக்குதல் அறிகுறிகள்

இளம் புழு உமிழ்நீர் மூலம்நுால் போன்ற இழைகளை வெளியிட்டு இலைகளின் இருபுற விளிம்புகளைஇணைத்தோ அல்லது இலையின் நுனிப்பகுதியை அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து பாதுகாப்பாக இருக்கும். உள்ளிருந்து கொண்டே பச்சையத்தை சுரண்டி உண்ணும்.

இந்த இலைகள் வெண்மையாக மாறுவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு பயிர் வளர்ச்சி குன்றி மணிகள் பிடிப்பதும் பாதிக்கப்படுகிறது. அதிகளவில் தாக்கப்பட்ட வயலில் இலைகளில் பச்சையம் அதிக அளவில் சுரண்டப்பட்டு வெண்மையான திட்டுகளுடன் வயல் முழுவதும் காணப்படும். இதனால் மகசூல் அதிகம் குறைய வாய்ப்புள்ளது.

நிர்வாக முறைகள்

வயல் வெளிகளை களைகள் இன்றி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பூக்கும் பருவத்தில் அதிகதழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தை பயிரின் வளர்ச்சிக்கேற்ப பிரித்து இடவேண்டும்.

அந்துப்பூச்சிகளின் நடமாட்டம் தென்பட்டவுடன் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 40ஆயிரம் வீதம் ஒரு வார இடைவெளிகளில் மூன்று முறை வெளியிட வேண்டும். வளர் பருவத்தில் 10 சதவீதம் வரை இலை சேதம், பூக்கும் பருவத்தில் 5 சதவீதம் வரை கண்ணாடி இலை சேதம் என பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் ஏக்கருக்கு அசாடிராக்டின் 0.03 சதவீதம் அதாவது 400 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதவீதம் எஸ். பி. 400 கிராம் அல்லது குளோர்ஆன்ரனிலிபுரோல் 18.5 சதவீதம் எஸ். சி. 60 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.



- வள்ளல் கண்ணண் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் - சரஸ்வதிஇணை இயக்குநர் வேளாண் துறை - உதவி இயக்குநர்கள் ராம்குமார், நாகராஜன் அமர்லால்ராமநாதபுரம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us