Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/கத்தரி, தக்காளி ஒட்டுரகக்கன்றுகள் விற்பனை

கத்தரி, தக்காளி ஒட்டுரகக்கன்றுகள் விற்பனை

கத்தரி, தக்காளி ஒட்டுரகக்கன்றுகள் விற்பனை

கத்தரி, தக்காளி ஒட்டுரகக்கன்றுகள் விற்பனை

PUBLISHED ON : மே 21, 2025


Google News
Latest Tamil News
அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் இந்தோ இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் 2012ல் ஆரம்பிக்கப்பட்ட காய்கறி மகத்துவ மையத்தில் நீண்ட கால அறுவடைக்கு பயன்படும் கத்தரி, தக்காளி ஒட்டு ரகக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிறார் மைய துணை இயக்குநர் திலீப்.

சுண்டைக்காய் வேர்ச்செடியின் மூலம் உருவாக்கப்படும் ஒட்டுக்கன்றுகள் குறித்து அவர் கூறியதாவது:

இந்த வளாகத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட பசுமை குடிலிலும், திறந்தவெளியிலும் காய்கறி சாகுபடி செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தக்காளி, கத்தரி, மிளகாய் பயிர்களில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குகிறோம்.

ஒட்டுக்கன்றுகள் விற்பனை

தற்போது கத்தரி மற்றும் தக்காளியில் ஒட்டுக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சாதாரண கத்தரி, தக்காளி நாற்றுகள் 3 முதல் 4 மாத காலம் பலன் தரும். அதன் பின் மீண்டும் விதையில் இருந்து மீண்டும் நாற்றுகள் தயாரித்து நடவு செய்ய வேண்டும். புதிய முறையில் சுண்டைக்காய் வேர்ச்செடியில் இருந்து தக்காளி, கத்தரி நாற்றுகள் ஒட்டு கட்டப்படுகிறது.

இம்முறையில் தக்காளி செடியை 10 மாதங்கள் வரையும் கத்தரி செடியை ஒன்றரை ஆண்டுகள் வரை பராமரிக்கலாம். அதிகபட்சம் 6 முறை அறுவடை செய்யலாம். வறட்சி, நோய், பூச்சி தாக்குதல் போன்ற சாதகமற்ற சூழ்நிலைகளை தாங்கி வளரும் வேர்ச்செடிகள் ஒட்டுச்செடிகளை தயார் செய்ய பயன்படுத்தப்படுவதால் பயிர்களின் தரமும் மகசூலும் அதிகரிக்கிறது.

இச்செடிகள் நீடித்த பயிர்காலம் கொண்டவை. இயல்பை விட ஒன்றரை மடங்கு அதிக மகசூல் தரும் திறனுள்ளவை. வாடல் நோய்க்கான எதிர்ப்புத்திறன், மண்ணில் உள்ள நுாற்புழுக்கள், தீங்கு விளைவிக்கும் மற்ற நுண்ணுயிர்களின் தாக்கத்தை தாங்கி வளரும் தன்மை கொண்டதாக இக்கன்றுகள் உள்ளன.

ரகத்திற்கு ஏற்ப நாற்றுகள்

கத்தரி, தக்காளியில் எந்த ரகத்தை வேண்டுமானாலும் இம்முறையில் சுண்டைக்காய் வேர்ச்செடியுடன் ஒட்டு கட்டலாம். விவசாயிகள் விரும்பும் ரகத்தை முன்கூட்டியே தேர்வு செய்து ஆர்டர் தர வேண்டும். அதன்பின் உற்பத்தி செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாகும். இரண்டு மாத ஒட்டுக்கன்று ரூ.10 வீதம் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது.

மேலும் விதைத் தொகுப்புகள், மாடிதோட்டத் தொகுப்பு, மண்புழு உரம், உயிரி உரங்கள், தேன், காளான், செடி வளர்ப்புத் தொட்டி, அதற்கான கலவை விற்கப்படுகிறது என்றார்.

அலைபேசி 63797 82987.

-எம்.எம்.ஜெயலட்சுமி மதுரை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us