Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: மந்தாரமலை மகிமை!

விசேஷம் இது வித்தியாசம்: மந்தாரமலை மகிமை!

விசேஷம் இது வித்தியாசம்: மந்தாரமலை மகிமை!

விசேஷம் இது வித்தியாசம்: மந்தாரமலை மகிமை!

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
ஜூன் 22 - கூர்ம ஜெயந்தி

கூர்மம் என்றால், ஆமை. திருமாலின் பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரம், இது.

தான் சயனித்திருக்கும் பாற்கடலைக் கடைந்து, அதில் கிடைக்கும் அமிர்தத்தை மற்றவர்களுக்கு அளிப்பது, இந்த அவதாரத்தின் நோக்கம். யார் அருந்தினரோ, அவர்களுக்கு சாகா சக்தியளிப்பது, அமிர்தம். இதை பெற தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். தேவர்கள் ஜெயித்தனர். அதற்கு காரணம் திருமால்.

தன்னை ஒரு ஆமையாக சுருக்கி, அதன் ஓட்டின் மேல், மந்தார மலையை மத்தாக வைத்து, தான் படுத்திருக்கும் ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி பாம்பை கயிறாக கொண்டு, பாற்கடலை கடைய இடமளித்தார், விஷ்ணு.

இதில், மத்தாக இருந்தது, மந்தார மலை. இந்த மலைக்கு பெருமை தாங்கவில்லையாம். ஏனெனில், உலகமே திருமாலின் திருவடிகளை தாங்க தயாராக இருக்கும் போது, தன்னை திருமால் தாங்கப் போகிறார் என, அதற்கு பெருமை.

அது மட்டுமல்ல! அது மற்ற மலைகளை நோக்கி, 'சகோதரர்களே! எதிர்காலத்தில், திருமால் பல அவதாரங்களை எடுப்பார். அவரையும், அவரது பக்தர்களையும் என்னை போல் நீங்களும் தாங்க வேண்டும்...' என்றதாம்.

மற்றொரு யுகத்தில், திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தார். அவரது பக்தன், பிரகலாதன். தன்னை வணங்காத காரணத்தால், மலையிலிருந்து உருட்டி விடச் சொன்னான், பிரகலாதனின் தந்தை இரண்யன். பிரகலாதனும் உருட்டப்பட்டான்.

அந்த மலை அப்போது நினைத்ததாம், 'நம் மூதாதையரான மந்தார மலைக்கு, தன் முதுகை இருப்பிடமாக கொடுத்தார், திருமால். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது பக்தனை காப்பது, நம் கடமை என கருதி, பாறைகளில் அடிபடாமல் அடிவாரம் வந்து சேரும் வகையில் பாதுகாத்ததாம்.

திருமால், கண்ணனாக அவதாரம் எடுத்த போது, இந்திரன் தந்த மழையை தடுக்க, ஆயர்பாடியில் இருந்த மலை, குடை போல எடை குறைந்து, கண்ணனின் விரல்களில் ஒட்டிக் கொண்டதாம். நம்மை பெருமை படுத்தியவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்பதே, கூர்ம அவதாரம் நமக்கு உணர்த்தும் பாடம்.

கடலை கடைந்த மந்தார மலை, இன்றும் இருப்பது அதிசயம். பீகார் மாநிலம் பாகல்பூர்- - தும்கா நெடுஞ்சாலையில், 50 கி.மீ., துாரத்திலுள்ள, போன்சி கிராமத்தில், இந்த மலை உள்ளது. 700 அடி உயரமான இந்த மலை அடிவாரத்தில் ஹிந்து கோவில்களும், உச்சியில் சமணர் கோவில்களும் உள்ளன. பக்தர்கள் மலை ஏற அனுமதியுண்டு.

சென்னையில் இருந்து பாட்னாவுக்கு, விமானத்தில் சென்று, அங்கிருந்து, 241 கி.மீ., துாரத்திலுள்ள பாகல்பூர் செல்லலாம். ரயிலில், முசாபர்பூர் சென்று, சாலை வழியில், 240 கி.மீ., கடந்து, பாகல்பூர் செல்லலாம். பாகல்பூரில் இருந்து, 50 கி.மீ., துாரத்தில், போன்சி கிராமம் உள்ளது.

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us