Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
பா -கே

வங்கியில் பணிபுரியும் நண்பர் ஒருவர், சமீபத்தில் மதுரையில் இருந்து, சென்னை கிளைக்கு, 'டிரான்ஸ்பர்' ஆகி வந்திருந்தார். தன் மகனை, 8ம் வகுப்பில் சேர்க்க, நல்ல பள்ளியில், 'அட்மிஷன்' வாங்கி தர வேண்டினார்.

'பள்ளிகள் திறந்து இவ்வளவு நாட்களுக்கு பின் கேட்கிறீர்களே...' என்றேன்.

'என்னப்பா செய்யறது. திடீர்ன்னு, 'டிரான்ஸ்பர்' செஞ்சுட்டாங்க. பேமிலியோடு வர வேண்டியதாயிற்று...' என்றார், நண்பர்.

அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியை ஒருவர் நினைவுக்கு வந்தார். என் தீவிர வாசகியுமான அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று, நண்பரிடம், பள்ளியின் பெயரை குறிப்பிட்டு, 'அங்கு சேர்க்க விருப்பமா?' என்றேன். சம்மதித்தார்.

மறுநாள் காலை, நண்பரை அழைத்துக்கொண்டு அப்பள்ளிக்கு சென்றேன். நாங்கள் சென்றபோது, பள்ளி கிரவுண்டில், 'பிரேயர்' நடந்து கொண்டிருந்தது.

துாரத்திலிருந்தே எங்களைப் பார்த்த தலைமையாசிரியை, தன் உதவியாளரை அழைத்து, எங்களைச் சுட்டிக்காட்டி, ஏதோ சொல்லி அனுப்பினார். உதவியாளர் எங்களை அணுகி, 'பிரையர்' முடியும் வரை, அவரது அறையில் அமர சொல்லியதாக கூறி, அழைத்துச் சென்றார்.

தலைமையாசிரியை அறையிலிருந்து பார்த்தால், 'பிரேயர்' நடக்கும் இடம் தெரிந்தது. நன்றாக பாடக்கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர், 'மைக்' முன் நின்று, கடவுள் வாழ்த்து பாடல் பாட, அவர்களுடன் சேர்ந்து மற்ற மாணவர்கள் கோரஸாக பாடிக் கொண்டிருந்தனர்.

கடவுள் வாழ்த்து, அதைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடி முடிந்ததும், பேச ஆரம்பித்தார், தலைமையாசிரியை. குறள் ஒன்றை கூறி, அதற்கு விளக்கம் அளித்தார். அதையடுத்து, நீதிக் கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். கதை சொல்லி முடித்தபின் தான் வருவார் என்று புரிந்து, நாங்களும் கதைக் கேட்க ஆரம்பித்தோம். அது:

சாலை ஓரமாக அழுதபடி, உட்கார்ந்து இருந்தான், இளைஞன் ஒருவன்.

அப்போது, அந்த பக்கமாக, ஒருத்தன் வந்தான்.

'ஏன் அழுதுகிட்டிருக்கே?' என்று கேட்டான்.

'என் கிட்டே ஒண்ணுமே இல்லை. இந்த உலகத்துல நான் இருந்து, என்ன பிரயோஜனம். அதுதான் அழறேன்...' என்றான், அவன்.

'உன்கிட்ட மறைஞ்சிருக்கற புதையல், என் கண்ணுக்குத் தெரியுது. அதை விற்கறதுக்கு நீ தயாரா?' என்று கேட்டான், அந்த ஆசாமி.

இளைஞனுக்கு ஆச்சரியம்.

'என்கிட்டே எதுவுமே இல்லையே. அப்படி இருக்கறப்போ புதையல் எங்கேயிருந்து வந்தது?'

'இப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க. நீ, என் கூட வா. நம்ம ஊர் ராஜாகிட்டே போவோம். உன்கிட்டே இருக்கிற புதையலை அவர் நல்ல விலைக்கு வாங்கிப்பார்...'

'அது எப்படி உனக்குத் தெரியும்?'

'இதுக்கு முன்னாடியும் இது மாதிரி, பல பேரை ராஜாவிடம் அழைச்சிக்கிட்டுப் போயிருக்கேன். அதனாலதான், உன்னையும் கூப்பிடறேன்...' என்றான்.

இவனுக்கு ஒண்ணும் புரியலை. நம்மகிட்டே என்ன இருக்கு என யோசிச்சான்.

'என்ன யோசிக்கிறே. உனக்குப் பணம் வேணும்ன்னா என்னோட வா...'

'சரி இங்கே உட்கார்ந்துக்கிட்டிருக்கறதை விட, அங்கே போய் பார்ப்போம்...' என, புறப்பட்டான்.

போகும் வழியில், 'இதோ பாரு, முன்கூட்டியே சில விஷயங்களை நாம பேசிக்க வேண்டியிருக்கு, சரியா. தெளிவா முடிவு எடுத்துக்கிட்டு அதுக்கப்புறம் ராஜாகிட்டே போகணும். அங்கே போய், அது முடியாது, இது முடியாதுன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்கக் கூடாது.

'ராஜாவுக்கு விலையைப் பற்றி கவலையே இல்லை. எவ்வளவு சொன்னாலும், பணம் கிடைக்கும். ஆனா, அதுக்கப்புறம், நான் இதை விற்கறதுக்குத் தயார் இல்லைன்னு சொல்லக் கூடாது.

'அதனால், புதையலை விற்கறதா, இல்லையாங்கறதை இங்கேயே தெளிவா முடிவு செஞ்சுக்கணும்!'

என்கிட்ட புதையலா! ஒண்ணும் புரியாமல், மேலும் குழம்பினான், அந்த இளைஞன்.

'இப்ப உதாரணத்துக்கு உன்னுடைய கண்களை எடுத்துக்கோ. நான் அதுக்கு ராஜாகிட்டேயிருந்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கித்தர முடியும்.

'இதயத்தை கொடுக்கறீயா. 20 லட்சம் ரூபாய் வாங்கித் தர்றேன்.

'மூளையைக் கொடுக்கறீயா. 30 லட்சம் ரூபாய் வாங்கித் தர்றேன்...'

இதைக்கேட்டு அந்த இளைஞனுக்கு கோபம் வந்தது.

'என்ன உளர்றே? உனக்கு என்ன பைத்தியமா? இதையெல்லாம் யாராவது விற்பாங்களா? என்ன விலை கொடுத்தாலும், அதையெல்லாம் நான் விற்க மாட்டேன். நான் மட்டுமல்ல; யாருமே விற்க மாட்டாங்க...' என்றான், இளைஞன்.

வாய்விட்டு சிரிச்சான், அந்த ஆசாமி.

'பைத்தியம் நானா, நீயா? லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை உன்கிட்டேயே வச்சிக்கிட்டு, 'நான் ஏழை, என்கிட்டே ஒண்ணுமே இல்லை'ன்னு மரத்தடியிலே உட்கார்ந்து அழுதுகிட்டிருக்கியே...' என்றான்.

அப்போதுதான், அந்த இளைஞனுக்கு புரிந்தது.

கையிலுள்ள, 10 விரல்களும் மூலதனம் என்று இதைத்தான் சொல்றாங்க. எனவே, நம்மிடம் எதுவும் இல்லை, என்று சோர்ந்து போகாமல், திறமையை வளர்த்து, வாழ்வில் முன்னேறணும்...

- இவ்வாறு கூறி முடித்தார், தலைமையாசிரியை.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும், நண்பருக்கும், இவரிடம் பாடம் படிக்கும் பிள்ளைகள், நிச்சயம் வாழ்க்கையில் சாதிப்பர் என்ற நம்பிக்கை வந்தது.

தலைமையாசிரியையை சந்தித்து, நண்பரின் மகனுக்கு, 'அட்மிஷன்' கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு திரும்பினேன்.



விமான நிலையத்துல ஒரு பணியாளர்கிட்டே ரொம்ப கோபமா சண்டை போட்டுக்கிட்டிருந்தார், ஒரு பயணி. ஜப்பான் போக வேண்டியவர், அவர்.

பயணிகள் கொண்டு வர்ற பெட்டிகளையெல்லாம் வாங்கி ஒழுங்குபடுத்தி விமானத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியவர், அந்த பணியாளர். இவரைத்தான் வாய்க்கு வந்தபடி திட்டிக்கிட்டிருந்தார், அந்த பயணி.

இவரு பதிலுக்கு கோபப்படாமல், ரொம்ப பொறுமையா, புன்முறுவலோட அவருக்குப் பதில் சொல்லிக்கிட்டிருந்தார்.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க அங்கிருந்தவர்கள். கொஞ்ச நேரத்துல விமானம் வந்தது. பயணியும் புறப்பட்டு போயிட்டார்.

'ஏங்க, அந்த ஆளு அவ்வளவு கோவமா திட்டினார். உங்களால எப்படி சிரிச்சிக்கிட்டே பதில் சொல்ல முடியுது? உங்களுக்கு கோபமே வராதா?' என்று, அந்த பணியாளரிடம் கேட்டார், ஒருவர்.

'என்னுடைய சினத்தை நான் வெளியிலே காட்டிக்க மாட்டேன்; அதைக் கையாள்ற விதமே தனி...' என்றார், அந்த பணியாளர்.

'எப்படி?' என்றார், இவர்.

'இப்ப அந்த பயணி ஜப்பானுக்கு போயிக்கிட்டிருக்கார். அவருடைய பெட்டி படுக்கையெல்லாம், அமெரிக்காவுக்கு போய்க்கிட்டிருக்கு...' நிதானமா பதில் சொல்லி சென்றார், அந்த பணியாளர்.

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us