Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/வைராக்கியத்தால், 'உயர்ந்த' டாக்டர் கணேஷ்!

வைராக்கியத்தால், 'உயர்ந்த' டாக்டர் கணேஷ்!

வைராக்கியத்தால், 'உயர்ந்த' டாக்டர் கணேஷ்!

வைராக்கியத்தால், 'உயர்ந்த' டாக்டர் கணேஷ்!

PUBLISHED ON : ஜூன் 02, 2024


Google News
Latest Tamil News
மூன்றடி உயரமும், 18 கிலோ எடையும் கொண்ட, உலகிலேயே உயரம் குறைந்த டாக்டராக வலம் வருகிறார், கணேஷ் பரையா, 23; உயரம் குறைந்தவர்களின் எழுச்சி நாயகன்.

குஜராத் மாநிலம், பாவ்நகர் கோர்க்கி கிராம விவசாய குடும்பத்தில் பிறந்த, கணேஷுக்கு ஆறு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். சகோதர, சகோதரிகள் அனைவரும் இயல்பான வளர்ச்சி பெற, ஒரு கட்டத்தில், இவர் மட்டும் உயரமும், எடையும் குறைந்தவராக அறியப்பட்டார்.

இவரது உயரம், கேலி போன்ற பாதகங்களை கொண்டு வந்தாலும், ஆசிரியர், நண்பர்கள், பெற்றோர் ஆகியோரின் அபரிமிதமான அன்பு என்ற சாதகங்களையும் உண்டு பண்ணியது.

பிளஸ் 2 தேர்விலும், 'நீட்' தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில், கணேஷ் பரையா, மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது.

ஆனால், 'இவரால் அவசர கேஸ்களை கவனிக்க முடியாது. ஆகவே, இவருக்கு டாக்டராகும் தகுதி கிடையாது...' என, குஜராத் மாநில அரசு, இவரை, மருத்துவம் படிக்க அனுமதி மறுத்தது.

எந்த தடை வந்தாலும், அதை உடைத்தே பழகிய கணேஷ், 'நான், அவசர கேஸ்களை கவனிக்க முடியாது என, எப்படி மருத்துவ கவுன்சில் முடிவு செய்யலாம்...' என்று, உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கும், இவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.

சோர்ந்து போகாத கணேஷ், உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். இவரது வாதத்தில் உள்ள நேர்மையை உணர்ந்து, மருத்துவம் படிக்க அனுமதிக்க உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

இதன் அடிப்படையில் ஐந்தாண்டு படிப்பை முடித்து, தற்போது, பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றுகிறார். தன் மன வலிமை மற்றும் விடா முயற்சியின் காரணமாக, தரமான மருத்துவராக, நோயாளிகளின் மதிப்பை பெற்றவராக, உயிரைக் காக்க, உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வலம் வருகிறார், கணேஷ்.

'நோயாளிகள், என்னைப் பார்த்ததும், முதலில் ஆச்சரியப்படுவர். நோய் பற்றிய பயம் போய் தன்னை அறியாமலேயே என்னைப் பார்த்து சிரிப்பர். அந்த சிரிப்பு ஒன்று போதும். நானும், நோயாளியும் சகஜமாகி, சட்டென நெருங்கி விடுவோம். இது, அவர்களது நோய் தீர்க்க மந்திரம் போல வேலை செய்கிறது.

'பல்வேறு நாட்டு தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை, என்னை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இருந்தாலும், என்னால் சிகிச்சை பெற்ற நோயாளி குணமடையும் போது, சந்தோஷமாய் சிந்தும் புன்னகையைத் தான் சிறந்த பாராட்டாக கருதுகிறேன்...' எனும், டாக்டர் கணேஷ் பரையாவிற்கு, நம் வாழ்த்துக்களை மனதார தெரிவிப்போம்.

எல். முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us