Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : மே 05, 2024


Google News
Latest Tamil News
பா - கே

காலை நேரம்...

செய்தி கேட்கலாம் என்று, 'டிவி'யை, 'ஆன்' செய்தேன். வழக்கமாக நான் பார்க்கும் செய்தி சேனலை தேடி, 'ரிமோட்'டால், சேனல் எண்களை அழுத்திக் கொண்டிருந்தேன்.

இடையில் ஏதோ ஒரு ஆன்மிக சேனலில் பார்வை சென்றது. 'கருங்காலி மாலை' விளம்பரம் வந்து விடப்போகிறதே என்று, அவசரமாக சேனலை மாற்ற முனைந்தபோது, நல்லவேளையாக ஆன்மிக பெரியவர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டி, நகைச்சுவையுடன் பேசுபவர் என்பதால், அவர் சொல்வதைக் கேட்கலானேன்.

அவர் கூறியது:

மனுஷனுக்கு ஆயுள் நுாறு ஆண்டுகள்ன்னு சொல்றாங்க. ஆனாலும், ரொம்பப் பேர் பூரண ஆயுள் வாழறதா தெரியலையே, என்ற சந்தேகம் திருதராஷ்டிரனுக்கும் வந்தது.

உடனே, 'ஏன் இப்படி, யாருமே பூரண ஆயுள் வாழறதில்லை?' என்று, விதுரரிடம் கேட்டார்.

'ஆறு கூரிய வாள்கள், மனிதனுடைய ஆயுளை அழிக்குது...' என்றார், விதுரர்.

'அது என்ன, ஆறு கூரிய வாள்கள்?' என்றார், திருதராஷ்டிரன்.

'அதிக கர்வம், அதிகம் பேசறது, தியாக மனப்பான்மை இல்லாமை, கோபம், சுயநலம் மற்றும் நண்பர்களுக்கு துரோகம் செய்தல் ஆகியவை ஆயுளை வெட்டக் கூடிய வாள்கள்...' என்று பதிலளித்தார், விதுரர்.

இதில், அதிக கர்வம், ஒரு முக்கியமான வாள். நான் தான் நல்லவன், மத்தவன்லாம் கெட்டவன்னு நினைக்கிறப்போ, கர்வம் அதிகரிக்குது. இது, நம் அழிவுக்குக் காரணமாயிடும். அதனால, நல்ல குணங்களை பழகிக்கணும்.

ரெண்டாவது, அதிகம் பேசறவன், வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அது இடைஞ்சலை உண்டு பண்ணும்.

நம் பேச்சு எப்படி இருக்கணும்ன்னா, அதுல கடுமை இருக்கக் கூடாது. உண்மையானதா, பிரியமானதா, நன்மையை கருதியதாக இருக்கணும். அது தான் நல்ல பேச்சு.

மூணாவது விஷயம், எல்லாவற்றையும் நாம தான் அனுபவிக்கணும்ங்கிற ஆசை காரணமாத்தான், தியாக மனப்பான்மை ஏற்படறதில்ல. பிறருக்கு உதவறதுக்காகத் தான் நாம இந்த உலகத்துல பிறந்திருக்கோம்ன்னு உணர்ந்தவங்க, தியாக மனப்பான்மை உள்ளவங்க!

அடுத்தது, கோபம். மனுஷனுடைய முதல் எதிரி, இது தான்.

கோபத்தை வென்றவன், யோகி. அவன் தான் உலகில் சுகப்படுவான்ங்கிறது, பெரியவங்க வாக்கு.

கோபத்துல இருக்குறவனுக்கு தர்மம் எது, அதர்மம் எதுன்னு தெரியாது. தன் விவேகத்தை இழந்து, பாவம் செய்ய ஆரம்பிச்சுடுவான்.

அதனால, கோபப்படாம இருக்க பழகிக்கணும். அடுத்தவங்க கோபப்பட்டா, நாம் அதை சகிச்சுக்கிறதுக்கும் பழகிக்கணும்.

அடுத்தது, சுயநலம்.

சுயநலம் தான் எல்லா தீமைகளுக்கும் காரணம்.

தங்களுடைய காரியம், ஆகணும்ங்கிறதுக்காக, எந்த பாவத்தையும் செய்ய துணிஞ்சுடறாங்க பாருங்க, அவங்க தான் சுயநலவாதிகள்.

அடுத்தவங்க சந்தோஷத்தை பார்த்து, நாம சந்தோஷப்படணும்; அதேபோல், அடுத்தவங்க துன்பத்தை பார்த்து, நாம வருத்தப்படணும். இப்படி செஞ்சா, சுயநலம் போயிடும்ங்கிறது பெரியவங்க வாக்கு.

ஆறாவது விஷயம், நண்பர்களுக்கு துரோகம் செய்வது...

இந்த உலகத்துல, நல்ல நண்பர்கள் கிடைக்கிறது அபூர்வம். அப்படியிருக்கிறப்போ அவங்களுக்கு துரோகம் செய்ய நினைக்கிறது எவ்வளவு பெரிய அக்கிரமம்.

யாரிடமும் நமக்கு வெறுப்பு என்பதே இருக்கக் கூடாது. சிநேக மனப்பான்மை வேணும். கருணையோட பழகணும்.

பெரியவங்க சொல்ற இந்த, ஆறு விஷயங்கள் தான், ஆயுளை அழிக்கும் ஆறு வாள்கள்.

இந்த ஆறு விஷயத்துலயும், கொஞ்சம் கவனமா இருந்தா போதும், வெற்றிகரமான வாழ்க்கை நிச்சயம்!

- என்று சொல்லி முடித்தார். அலுவலகம் கிளம்ப நேரமானதால், அவர் கூறிய ஆறு வாள்கள் பற்றி அசைப்போட்டபடி, கிளம்பினேன்.

அலுவலகத்தினுள் நுழைந்ததும், 'மணி... இன்று பா.கே.ப., மேட்டர் எழுதணும்...' என்று உ.ஆசிரியை ஒருவர் நினைவுபடுத்த, ஆன்மிக பெரியவர் கூறியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். படித்து விட்டு, உங்கள் கருத்தை எனக்கு எழுதுங்களேன்!



இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமா சண்டை போட்டுக் கொள்வது, இயற்கை தான். இரண்டு கோழிகள் சண்டை போட்டால், ஆயுதமா பயன்படுத்தறது அதோட கால் நகங்கள் தான். இதன் பாதிப்பு நமக்கு தான். கோழிகள் சண்டை போடாமல் இருந்தா தான், நிறைய முட்டை இடுமாம்!

கோழிப் பண்ணை வச்சிருக்கிறவங்களுக்கு இது ஒரு பிரச்னை. பண்ணையில இருக்கிற கோழிகளுக்குள்ள அடிக்கடி சண்டை வந்துடும். அதனால, முட்டை உற்பத்தி குறைஞ்சுடும்.

பண்ணையில் போய் உட்கார்ந்துகிட்டு தினமும் பஞ்சாயத்து பேசிக்கிட்டிருக்க முடியுமா?

அமெரிக்காவில், கோழிப்பண்ணை வச்சுருக்கிற ஒருத்தர், இதுபற்றி யோசனை பண்ணி, ஒரு வழியையும் கண்டுபிடிச்சார்.

கோழிக்கெல்லாம் மூக்குக் கண்ணாடி மாட்டி விட்டுட்டா, அதுக்கு சண்டை போடற குணம் குறைஞ்சுடும்; முட்டை அதிகமா இடும். ஆனால், அந்த கண்ணாடியில் உள்ள, 'லென்ஸ்' சிவப்பு நிறத்துல இருக்கணும்.

இது, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம் தான்.

ஆனால், எல்லா கோழிக்கும் சிவப்பு மூக்குக் கண்ணாடிய எப்படி மாட்டி விடறது... அப்படியே மாட்டி விட்டாலும், அது நழுவாம இருக்கணுமே!

இதுக்கு, அவர் என்ன வழி கண்டுபிடிச்சார் தெரியுமா?

கோழிகளுக்கெல்லாம், மூக்குக் கண்ணாடிக்குப் பதிலா, 'கான்டாக்ட் லென்ஸ்' பொருத்திடலாம்ன்னு முடிவு பண்ணி, அதே மாதிரி செய்து பார்த்தார்; வெற்றி. அதுக்கப்புறம், கோழியெல்லாம் சண்டை போடல.

கோழிகளுக்கு, இயல்பாவே சண்டை போடற குணம் உண்டு.

ஆனா, அதோட கண்ணுக்குப் பார்க்கிற பொருள் எல்லாம் ரோஜா நிறத்திலயோ, அழுத்தமான சிவப்பு நிறத்திலயோ தெரிஞ்சுதுன்னா, சண்டை போடுற குணம் குறைஞ்சுடுதாம். அந்த சமயத்துல, அது அதிகமாகவும் முட்டையிட ஆரம்பிச்சுடுதாம்.

இது ஏன் இப்படி செய்யுதுங்கிறது, விஞ்ஞானிகளுக்கே இன்னமும் புரியல.

எப்படியோ அமெரிக்க கோழிகள்லாம், 'கான்டாக்ட் லென்ஸ்' பொருத்திக்க ஆரம்பிச்சாச்சு.

கோழி கழுத்தை பிடிச்சுக்கிட்டு ஒரு சில வினாடியில் அதை பொருத்திடறாங்களாம்; கோழியோட ஆயுள் முழுதும் அது அப்படியே இருக்குமாம்.

பண்ணையில் முட்டை உற்பத்தி குறைஞ்சா, இது மாதிரி விஞ்ஞான பூர்வமா பரிகாரம் தேடறது நல்லது.

இது எப்படி இருக்கு?

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us