Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (5)

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (5)

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (5)

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (5)

PUBLISHED ON : ஏப் 28, 2024


Google News
Latest Tamil News
ஏ.பி.நாகராஜனை சந்தித்து, திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார், எம்.ஆர்.ராதா.

'நான் யார்கிட்டயும் போய், இதுவரை நடிக்க, எனக்கு வாய்ப்பு குடுங்கன்னு கேட்டதில்லை. ஆனாலும், நீங்க, நமக்கு நல்லா தெரிஞ்ச பசங்க. அதனால, உங்ககிட்ட வந்து சந்தர்ப்பம் கேட்கிறேன்...' என்றார், எம்.ஆர்.ராதா.

'அவரே வந்து நடிக்க சந்தர்ப்பம் கேட்கிறார். அவர் நடித்தால் சிறப்பாக தான் இருக்கும். ஆனால், எம்.ஆர்.ராதாவிடம், ரொம்ப கறாராக பேசுங்க. ரொம்ப குறைஞ்ச முதலீட்டில் எடுக்கிற திரைப்படம்.

'நாம் கொடுக்கும் தொகையை வாங்கிக் கொள்வாரா என்று தெளிவாக கேட்டுக் கொள்ளுங்கள். அதேபோல், குறுகிய காலத்தில் எடுக்கும் படம் என்பதால், ஒழுங்காக படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்பதையும் சொல்லி விடுங்கள்...' என்று, வி.கே.ஆரிடம் சொன்னார், நாகராஜன்.

எம்.ஆர்.ராதாவிடம் இதை கூறியபோது, 'நீங்க கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறேன். நீங்க சொன்னபடி வந்து, ஒழுங்கா நடித்து கொடுக்கிறேன். என்னால, உங்களுக்கு ஒரு தொந்தரவும் வராது என்று உறுதி அளிக்கிறேன்...' என்றார்.

அத்துடன், அத்திரைப்படத்தில் நடிப்பதற்காக சிறிய தொகையை முன் பணமாக பெற்றுச் சென்றார், எம்.ஆர்.ராதா.

சொன்னபடி, நல்ல இடத்து சம்பந்தம் திரைப்படத்தில், ரொம்பவும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார், எம்.ஆர்.ராதா. இதைக் கேள்விப்பட்ட மற்ற திரைப்பட நிறுவனத்தினர் பலரும், ராதாவை அணுகி, நடிக்க கோரினர்.

அடுத்தடுத்து, திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, ஏ.பி.என்., மற்றும் வி.கே.ஆருக்கும், ரொம்ப நன்றி சொன்னார், எம்.ஆர்.ராதா. மேலும், தனக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்க சந்தர்ப்பம் வருவதால், தனக்கென தனி ஒப்பனை கலைஞரை வைத்துக் கொள்வதற்காக, யாராவது இருந்தால் சொல்லும்படி கேட்டார், ராதா.

நல்ல இடத்து சம்பந்தம் திரைப்படத்தில் வேலை செய்த ஒப்பனை கலைஞர் கஜபதியை அவருடன் அனுப்பினார், வி.கே.ஆர்., அவர் தான், ராதாவிடம் வெகு நாட்கள் பணிபுரிந்தார்.

சமூக கதைகளையும் இயக்க கூடியவர் தான், ஏ.பி.நாகராஜன். ஆனாலும், அவரது அடி மனதில் புராண படங்களை எடுத்து, அதில் ஒரு முத்திரை பதித்த இயக்குனராக மாற வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. அதன் துவக்கமாக அமைந்தது, அவர் கதை, வசனம் எழுதிய, சம்பூர்ண ராமாயணம் திரைப்படம். அதை தயாரித்தவர், எம்.ஏ.வேணு.

அப்படத்தில், தன் நாடக ஆசான்களில் ஒருவரான, டி.கே.பகவதியை, ராவணனாகவும், ராமர் வேடத்துக்கு மிகவும் பொருத்தமானவராக, என்.டி.ராமாராவை தேர்ந்தெடுத்தார், நாகராஜன்.

இப்படத்துக்கு பிறகு, என்.டி.ராமாராவ், ராமராகவும், கிருஷ்ணராகவும், தெய்வமாகவும் மக்களால் பார்க்கப்பட்டார், வணங்கப்பட்டார் என்றே சொல்லலாம்.

சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் தயாரிக்கும்போது, ராமாயணத்துக்கு எதிரான மற்றும் ஆதரவான பிரத்யேகமான சூழ்நிலை, தமிழகத்தில் நிலவியது. ஈ.வெ.ரா., ராமனின் படத்தை செருப்பால் அடிக்கும் நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. அண்ணாதுரையும் பகுத்தறிவுவாதி தான். ஆனால், அவரது பகுத்தறிவுப் பிரசாரம், ஈ.வெ.ரா.,விடமிருந்து சற்று வேறுபட்டது.

கம்ப ராமாயணத்தில் உள்ள காதல் ரசமான பாடல்களை தொகுத்து, 'கம்பரசம்' என்ற நுாலை எழுதி, இப்படிப்பட்ட காதல் ரசம் நிறைந்த ராமாயணம் ஒரு தெய்வீக நுாலா என்று, வாதித்துக் கொண்டிருந்தார். எப்போதும், தன் வாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், நியாயங்களை எடுத்து வைப்பார், அண்ணாதுரை.

தன் பிரசார மேடையை வழக்காடு மன்றமாக்கி, வாதங்களை, மக்கள் முன் எடுத்து வைப்பார். மக்களிடம் கேள்வி கேட்டு, அவர்களை நீதிபதிகளாக்குவார். மற்றொரு புறம், எம்.ஆர்.ராதா, ராமாயணத்துக்கு எதிரான பிரசாரத்தில், தன் பாணியில் ஈடுபட்டார்.

ராவணனை கதாநாயகனாவும், ராமனை வில்லனாகவும் சித்தரித்து, 'கீமாயணம்' என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். இதெல்லாம், ராமாயணத்துக்கு எதிரான சூழ்நிலை நிலவியது.

அதே நேரம், ராமாயணத்தை, 'சக்கரவர்த்தி திருமகன்' என்ற பெயரில், கல்கி இதழில் எழுதிக் கொண்டிருந்தார், ராஜகோபாலாச்சாரியார். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

அதை அடுத்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த, தோழர் ஜீவானந்தம், ராமாயணத்தின் பெருமைகளை மட்டுமே சீர்துாக்கிப் பிடித்து, அதன் நேர்மறையான அம்சங்களை, மிக தீவிரமாக பிரசாரம் செய்தார். அது, அண்ணாதுரையின் பிரசாரத்துக்கு எதிராகவே இருக்கும்.

இந்த சூழ்நிலையில் தான், ராமாயணத்தை, சம்பூர்ண ராமாயணம் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க துணிந்தார், வேணு.

ராமாயண கதையின்படி, ராமன், வனவாசம் செல்வது கதையின் முக்கிய அம்சம். அதன்படி, படப்பிடிப்பு அரங்கமைத்து, அங்கு நடத்தாமல், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காட்டில் இயற்கையாக நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. ஒகேனக்கல் பகுதியில் ஒரே ஒரு தங்கும் விடுதி தான் இருந்தது.

ஆனால், படப்பிடிப்பில் சுமார், 200 கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், காட்டுக்குள்ளேயே கலைஞர்களை தங்க வைக்க முடிவு செய்தனர். அதனால், 100 கயிற்றுக் கட்டில் வாங்கப்பட்டது.

அந்த கட்டிலில் நட்டநடுக் காட்டில், கலைஞர்கள் இரவில் படுத்து உறங்கினர். காட்டில், அவர்களின் பாதுகாப்பு கருதி, கையில் விளக்குடன், வேணுவும், ஏ.பி.நாகராஜனும் ரோந்து வந்தனர்.

புராண படங்கள் மட்டுமல்லாமல், எழுத்தாளர்களின் நாவல்களையும் படமாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார், ஏ.பி.என்., அதன்படி அவர் எடுத்த படம்...

— தொடரும்.

நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.



என்.டி.ராமாராவ். அவருக்கு வேஷப் பொருத்தம் கனக்கச்சிதம். அவர் தெலுங்குக்காரர் என்பதால், தமிழ் தான் கொஞ்சம் தகராறு. அதை உணர்ந்து, ராமருக்கு பெரிய அளவு கரடுமுரடான வசனம் எழுதாமல், சின்ன, சின்ன வாக்கியமாக எழுதினார், ஏ.பி.என்., அதையும், பெரிய எழுத்துக்களில் அக்காட்டில் உள்ள பாறைகளில் எழுதி வைத்து, ஒளிப்பதிவு கருவியின் கண்களுக்கு படாமல் படமாக்கினார். ஆனால், சீதையாக நடிக்கும் நடிகை பத்மினி, வேண்டுமென்றே ராமாராவுக்கு வசனம் தெரியாதவாறு, தன் சேலையால் மறைத்துக் கொள்வாராம். உடனே, ஏ.பி.என்.,னை பார்த்து, 'நாகராஜன்காரு, என் வசனத்தை, சேலையால, பப்பி வேணும்ன்னு மறைக்குது. கொஞ்சம் மறைக்க வேண்டாம்ன்னு செப்பண்டி...' என்பாராம், என்.டி.ராமாராவ்.சம்பூர்ண ராமாயணம் படம், ஏப்ரல் 14, 1958ல் வெளிவந்தது. திரைப்படமே பார்க்காத, ராஜாஜி, அத்திரைப்படத்தை பார்த்து பாராட்டினார்.    

கார்த்திகேயன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us