Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - கசகசா!

நம்மிடமே இருக்கு மருந்து - கசகசா!

நம்மிடமே இருக்கு மருந்து - கசகசா!

நம்மிடமே இருக்கு மருந்து - கசகசா!

PUBLISHED ON : ஏப் 21, 2024


Google News
Latest Tamil News
பெண்களின் நலன் காக்கும் ஒரு பொருள், கசகசா. 'பாப்பி' எனும் செடியில் விதைகளை தாங்கி நிற்கும் விதைப்பை முற்றி காய்ந்து காணப்படுவது தான், கசகசா. விதை முற்றாமல் இருக்கும்போது அதன் விதைப்பையை கீறி பாலை எடுத்து தயாரிப்பது தான், போதைப் பொருள், அபின்.

கசகசாவில், 50 சதவீதம் எண்ணெய் தன்மை இருக்கிறது. இந்த எண்ணெய் கொழுப்பு தான் உடலுக்கு நன்மை செய்கிறது.

கசகசா விதைகளில், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும், இது வைட்டமின் பி வகைகள், காப்பர், துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கார்போஹைட்ரேட், கால்ஷியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றின் வளமான மூலமாகவும் உள்ளது.

வயிற்றில் உள்ள பூச்சி, தோல் நோய்களால் உண்டாகும் நமைச்சல், சீதகழிச்சல், ரத்தக்கழிச்சல், தலைபாரம் மற்றும் துாக்கமின்மை போன்றவைகளை நீக்கும் சக்தி கசகசாவில் உள்ளது.

அரைத்த கசகசா விழுதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து அரிப்பு, நமைச்சல் மற்றும் தீக்காயங்கள் மீது பூச, நிவாரணம் கிடைக்கும்.

கசகசாவை ஊற வைத்து அரைத்து, அதில் தேங்காய் பால் அல்லது பால் சேர்த்து சாப்பிட, 'மெனோபாஸ்' காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் வறட்சி சரியாகும். பெண்கள் பூப்பெய்திய துவக்க காலத்தில் மற்றும் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி ஏற்படும்போது, மேற்கண்ட மருந்தை மாதவிடாய்க்கு, 10 நாட்களுக்கு முன் சாப்பிட வேண்டும்.

பெண்களின் ஆரோக்கியமான கருவுறுதலுக்கு, கசகசா உதவுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கசகசாவையும், பாலையும் கலந்து சாப்பிடுவதால், தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. இரண்டு தேக்கரண்டி கசகசாவை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பாக குடித்து வந்தால், ஆண்மை சக்தியை அதிகரிக்கிறது.

இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை அம்மியில் வைத்து அரைத்த விழுதை, 200 மில்லி மாதுளம் பழ சாற்றில் கலந்து சாப்பிட, இரவில் நிம்மதியான துாக்கம் கிடைக்கும்.

ஹைப்பர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அமைதிப்படுத்த, 2 கிராம் கசகசாவை அரைத்து, பாலில் கலந்து கொதிக்க வைத்து கொடுக்கலாம். நரம்பு தளர்ச்சி மற்றும் விந்தணு குறைபாடு உள்ளவர்கள், கசகசா பாலை இரவில் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

சரும பிரச்னைகளுக்கு கசகசாவை தேங்காயுடன் சேர்த்து அரைத்து பூசி வர சரியாகும்.

ஊற வைத்த கசகசாவை தயிருடன் சேர்த்து கலந்து, வறண்ட சருமப்பிரச்னை உள்ள முகத்தில், 'மாஸ்க்' போல் போட்டு, 15 நிமிடங்கள் காய வைத்து முகம் கழுவலாம். இதனால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் பொலிவு பெறும். மேலும், வடுக்கள் கூட நாளடைவில் மறையும்.

தயிர், மிளகு துாள் கலந்த கசகசா விழுதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி மற்றும் பொடுகு பிரச்னைகள் வராது.

கசகசாவில் உள்ள ஓதிக் மற்றும் லினோலிக் அமிலங்கள், இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய், பெருங்குடல், புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுவதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பால் அவதிப்படுவோருக்கு, கசகசா ஒரு சஞ்சீவியாக இருக்கும். ஏனெனில், அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் எடையைக் குறைக்க உதவுகின்றன.

கசகசாவில் நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கசகசாவில் ஆல்கலாய்டுகள் அதிகம் உள்ளது. எனவே, வறுத்து அல்லது தண்ணீரில் நன்கு ஊற வைத்தே பயன்படுத்த வேண்டும். கசகசாவை அளவாக பயன்படுத்துவது நல்லது.

கோவீ.ராஜேந்திரன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us