Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அர்த்தமுள்ள சித்திரை விஷு!

அர்த்தமுள்ள சித்திரை விஷு!

அர்த்தமுள்ள சித்திரை விஷு!

அர்த்தமுள்ள சித்திரை விஷு!

PUBLISHED ON : ஏப் 14, 2024


Google News
Latest Tamil News
ஏப்., 14 - தமிழ் புத்தாண்டு

உலகிற்கு ஒளி கொடுப்பவர், சூரியன். இவர் மட்டுமே கிரக மண்டலத்தில் நிலையாக ஓரிடத்தில் இருப்பவர்; ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சஞ்சரிப்பவர்.

தமிழ் ஆண்டுகள் 60 என்றனர், பஞ்சாங்கம் கணித்த முன்னோர். அந்தந்த ஆண்டு எப்படி அமையும் என்று வெண்பாக்களும் எழுதி வைத்தனர்.

ஒவ்வொரு முறை பிறக்கும் ஆண்டை, தமிழ் புத்தாண்டு என்று தமிழகத்திலும், விஷு என்று கேரளத்திலும் கூறினர். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் சித்திரை விஷு விழா கொண்டாடப்படுகிறது.

மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளில், 12 தமிழ் மாதங்களும் சஞ்சரிப்பார், சூரியன். இதில் முதல் ராசியான மேஷத்துக்கு வரும் நாளை, நாம் கொண்டாட வேண்டாமா என்ன! அதைத் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

பஞ்சாங்கங்களில் இதை, மேட மாதம் என குறித்திருப்பர். இது, தமிழில் சித்திரை ஆயிற்று. அதையும் பஞ்சாங்கத்தில் சேர்த்தனர். சூரியன், ரிஷபத்துக்கு மாறும்போது வைகாசி, மிதுனத்துக்கு மாறும் போது ஆனி.

இவ்வாறாக, 12 மாதங்களும் அந்தந்த ராசிகளின் பெயரைப் பெறுகின்றன. ஆறு மாதங்கள் கடந்து, ஏழாவது மாதமான ஐப்பசியில் துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். இதை துலா மாதம் என்பர். ஐப்பசி விஷு என்று, இதற்கும் விஷு பட்டம் உண்டு.

ஒரு ஆண்டின், 12 மாதங்களில் முதல் ஆறுக்கான விஷு சித்திரையிலும், அடுத்த ஆறு மாதங்களுக்கான விஷு ஐப்பசியிலும் துவங்குகிறது. இந்த மாதங்களுக்கு விஷு என, பெயர் வைத்த காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

விஷு என்றால், சமமாக என, பொருள். ஒரு தமிழ் ஆண்டு, சித்திரை முதல் புரட்டாசி வரை ஒரு பாகமாகவும், ஐப்பசி முதல் பங்குனி வரை ஒரு பாகமாகவும், சம பங்கு கொண்டது.

இது பருவ காலங்களின் துவக்கமாகவும் பார்க்கப்படுகிறது. சித்திரை கோடையின் துவக்கம். ஐப்பசி குளிரின் துவக்கம். அது மட்டுமல்ல, இந்த இரண்டு விஷு நாட்களிலுமே, புனித நீராடல் முக்கியமாக உள்ளது.

அகத்தியர், கமண்டலத்தில் எடுத்து வந்த நீரை, குடகு மலையில் வைத்திருந்த போது, காகம் வடிவில் வந்த விநாயகர், அதை தட்டி விட்டார். கமண்டலம் சரிந்து தண்ணீர் ஓடியது. அது காவிரி ஆறாகப் பெருகியது.

பாய்ந்து சென்று கமண்டலத்தை எடுத்தார், அகத்தியர். கொஞ்சம் நீர் மட்டும் மீதியிருந்தது. அதை பொதிகைக்கு வந்து உச்சியில் ஊற்ற, அது தாமிரபரணி ஆனதாக புராணக்கதை உண்டு.

இதில் எவ்வளவு அர்த்தம் புதைந்துள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று தாமிரபரணியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவர். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்ய, காவிரிக்கு செல்கின்றனர், பக்தர்கள். நமது முன்னோர் செய்கை ஒவ்வொன்றிலும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாண்டு, குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இது தமிழாண்டுகளில், 38வது ஆண்டு.

குரோதி தமிழ் புத்தாண்டு அனைத்து நன்மைகளையும் தர, அவரவர் குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.     

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us