Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஏப் 07, 2024


Google News
Latest Tamil News
பெண்களை மதிப்பவனே, உண்மையான வீரன்!

நண்பர் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு நபர், சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது என, மனைவிக்கு, வீட்டு வேலைகளில் எல்லா உதவிகளையும் செய்வார். உடல் நலம் இன்மையால் மனைவி, காலையில் எழ தாமதமானால், அவரே வாசல் தெளித்து, கோலமும் போட்டு விடுவார்.

இருவரும் வேலைக்கு செல்வதால், சில சமயங்களில், மனைவியின் சேலையை துவைத்து, மொட்டை மாடியில் காயப் போடுவார். அக்கம் பக்கத்தில் உள்ளோர், அவரை பார்த்து, நமுட்டுச்சிரிப்பு சிரித்து, 'பொண்டாட்டிதாசன், மனைவிக்கு பயந்தவன்...' என்று, பலவாறு, அவர் காதுபட கேலி பேசி, சிரிப்பது வழக்கம்.

அதையெல்லாம், கண்டு கொள்ள மாட்டார், நண்பர். அண்மையில் ஒருநாள், பட்டப் பகலில், அந்த தெருவில் வசித்து வரும் ஒரு இளம் பெண்ணை, ஒரு தலையாக காதலித்து வந்த ரவுடி, கத்தியை காட்டி மிரட்டி, பலவந்தமாக, அவளை ஆட்டோவில் கடத்திச் செல்ல முற்பட்டான்.அந்தப் பெண்ணின் கூச்சல் கேட்டு, அனைவரும் ஓடி வந்தனர். ஆனால், அந்த ரவுடி கத்தியை காட்டி பயமுறுத்த, அனைவரும், பின் வாங்கினர். அதேசமயம், அனைவராலும் பொண்டாட்டி தாசன் என்று கேலி செய்யப்பட்ட அந்த நபர், துணிச்சலாக அவன் கையிலிருந்த கத்தியைத் தட்டி விட்டு, அவனை மடக்கிப் பிடித்து, அடித்தார். அதன்பின், அனைவரும் சேர்ந்து, அவனை, போலீசில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அந்த தெருவில் உள்ள அனைவரும் அவரின் துணிச்சலை பாராட்டியதுடன், இதுவரை தாங்கள், அவரை கேலி பேசியதற்கு மன்னிப்பும் கேட்டனர். 'மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பவர், கோழை அல்ல என்பதை இன்றாவது புரிந்து கொண்டீர்களே... என்னைப் பொறுத்தவரை, பெண்களை மதிப்பவன் தான் உண்மையான வீரன். 'கணவனுக்காக உடல், பொருள் ஆவியனைத்தையும் அர்ப்பணித்த மனைவிக்கு, வீட்டு வேலைகளில் உதவி செய்வது கேவலமல்ல. இனியாவது, மனைவியின் கஷ்டத்தை புரிந்து, நடந்து கொள்ளுங்கள்...' என்று, வேண்டுகோள் விடுத்தார்.

-மு.க.இப்ராஹிம், வேம்பார்.





கோடை, பறவைகளுக்கும் தான்!

சமீபத்தில், ஒருநாள் மாலை, எங்கள் பகுதியிலுள்ள சிறுவர், சிறுமியர் சிலர், குடியிருப்பு வாசிகளிடமிருந்து, தேங்காய் சிரட்டைகளை சேகரித்து சென்றனர்.அவர்களிடம், அதுபற்றி விசாரித்தேன்.'வெயில் காலம் துவங்கி விட்டது. நாமே, தண்ணீருக்கு தவியாய் தவிக்கிறோம். பாவம், பறவைகள், தங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள என்ன செய்யும்?

'நாங்கள் சேகரிக்கும் இந்த தேங்காய் சிரட்டைகளில் துளையிட்டு, கயிறு கட்டி, ஊஞ்சல் போல, எங்கள் வீட்டு முகப்பிலும், தோட்டம் மற்றும் மாடியிலும் தொங்க விடுவோம். அதில், பறவைகளுக்காகத் தண்ணீரை நிரப்பி வைப்போம்...' என்றனர்.

அதைக் கேட்டதும், அவர்களின் இரக்க குணத்தை, மனதார பாராட்டினேன். என் வீட்டிலும், பறவைகளுக்கு தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்வதாக, உறுதியும் அளித்தேன்.வாசகர்களே... கொளுத்தும் கோடை காலத்தில், நாய், பூனை, அணில், பறவைகள் என, நம்மை அண்டியுள்ள பிற உயிர்களையும் கொஞ்சம் எண்ணிப் பார்த்து, நீங்களும் உதவுங்கள்!

-வி.சங்கர், சென்னை.



உழைப்பு கைவிடாது!

எங்கள் தெருவில் வசிக்கும், 70 வயதை கடந்த பாட்டி ஒருவர், கணவனை இழந்தவர். குழந்தைகள் ஏதும் இல்லாததால், தனித்து விடப்பட்டார்.ஆனால், அதற்காக வருந்தாமல், அவர் வீட்டு முன், இட்லி கடை வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அவர் கடையின் இட்லி, மிருதுவாக இருக்கும். அதுமட்டுமல்ல, சாம்பாரும், பலவகை சட்னிகளும் ருசியில் அள்ளும். எங்கள் பகுதியிலுள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு, காலை டிபன் செய்வதிலிருந்து ஓய்வு கொடுத்து உதவுவது, பாட்டியின் இட்லி கடை தான்.வயதின் பொருட்டு, அவரால் முழு நேர கடையாக நடத்த முடியாது என்பதால், காலையில் மட்டுமே நடத்தி வருகிறார்.

என்ன தான் வீட்டில் மாவு அரைத்தாலும், பாட்டியின் பக்குவத்திலும், தரத்திலும் மாவு அரைக்க முடிவதில்லை. ஒருநாள் அந்த பாட்டியிடம், 'மாலையில் இட்லி கடை வைக்காவிட்டாலும், கூடுதலாக அரிசியை ஊற வைத்து, இட்லி மாவு அரைத்து, விற்பனை செய்யலாமே...' என்று, கோரிக்கை வைத்தேன். சரியென சம்மதித்து, துணைக்கு இரண்டு பெண்களை அமர்த்தி, மாலையில், இட்லி மாவு விற்பனையை துவக்கினார்.

இப்போது, அதற்கும் கிராக்கி அதிகமாகி விட்டது. மற்ற பகுதியினரும், தேடி வந்து மாவு வாங்கிச் செல்கின்றனர். உழைப்பை மட்டுமே நம்பிய பாட்டி, இன்று மகிழ்ச்சியாக இருப்பதோடு, இரண்டு ஏழை பெண்களுக்கும் ஊதியம் கொடுத்து, உதவியும் செய்கிறார். உழைப்பு கைவிடாது என்பதற்கு உதாரணமாகவும், திகழ்ந்து வருகிறார்!

—எஸ். நாகராணி, மதுரை.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us