Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : மார் 31, 2024


Google News
Latest Tamil News
பா - கே

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், தேர்தல் கள நிலவரங்களை சீரியசாக விவாதித்துக் கொண்டிருந்தனர், செய்தி பிரிவினர். அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'அது ஒரு பக்கம் இருக்கட்டும் மணி... தமிழகத்தில், முதலிடத்தில் உள்ள பணக்கார மாவட்டம் எது தெரியுமா?' என்று கேட்டார்.

'முதலிடத்தில் சென்னை அல்லது கோவை மாவட்டம் இருக்கலாம்...' என்றேன், நான்.

'சாரி மணி... தமிழகத்தின் முதல் ஐந்து பணக்கார மாவட்டங்களின் பட்டியலில், இந்த இரண்டு மாவட்டங்களும் இல்லை. வேறு எந்தெந்த மாவட்டங்கள், 'டாப்-10'ல் இருக்கின்றன என்று பார்ப்போம்...' என்று, கூற ஆரம்பித்தார் மாமா:

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகம் ஒரு வளமான மாநிலமாக இருப்பதற்கு, தொழில் துறை, ஏற்றுமதி மற்றும் விவசாயம் என, அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவது தான், காரணம்.

ஆனால், இந்த நற்பெயர் எல்லாமே தமிழகத்தின் மாவட்டங்களை தான் சேரும். தொழில்துறை, உற்பத்தி, ஆலைகள், ஏற்றுமதி மற்றும் விவசாயம் என, மாவட்டத்தின் வருமானம் கணக்கிடப்படுகிறது.

மொத்த வருவாயையும் ஒன்று கூட்டி, அதை, அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை கொண்டு வகுத்தால், சராசரி தனி நபர் வருமானம் தெரிந்து விடும். அதில், எது அதிகமாக இருக்கிறதோ, அதுவே பணக்கார மாவட்டமாகும்.

பல்வேறு தொழில் துறை நிறுவனங்களும், உற்பத்தி ஆலைகளும், மேலை நாட்டு கலாசாரத்துடன், அதிக சம்பளம் பெற்று வாழும் மக்கள், சென்னையில் தான் அதிகம் இருக்கின்றனரே... சென்னை முதலிடத்தில் ஏன் வரவில்லை என, கேட்கலாம்.

சென்னை, எந்த அளவிற்கு வளமான மக்களை கொண்டுள்ளதோ, அதே அளவிற்கு, ஏழை, நடுத்தர மக்களும் உள்ளனர். அதிகப்படியான மக்கள் இங்கு வாழ்வதால், தனி நபர் வருமானம் குறைகிறது.

தமிழகத்தின் பணக்கார மாவட்டங்களில் முதல் இடம் வகிப்பது, கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் தான், அதிக வசதியுடன் வாழ்கின்றனர்.

தமிழகத்தில் அரசு பணிகளில் அதிகம் இருப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். அதே மாதிரி, கேரள அரசு பணிகளிலும் இந்த மாவட்ட மக்கள், நிறைய பேர் உள்ளனர். தமிழகத்திலிருந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பதும், இந்த ஊர் மக்கள் தான் அதிகம்.

ரப்பர் ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதுடன், மீன் வளம், விவசாயம் மற்றும் சுற்றுலா என, எல்லாவற்றிலும் கன்னியாகுமரி கலக்கி வருகிறது. கன்னியாகுமரியின் தனி நபர் வருமானம், 81 ஆயிரத்து 94 ரூபாய். இதுதான், தமிழகத்திலேயே முதல் இடத்தில் உள்ள மாவட்ட தனி நபர் வருமானம்.

இரண்டாம் இடத்தில் இருப்பது, 'டாலர் நகரம்' என்று பிரபலமாக அறியப்படும், திருப்பூர். இந்தியாவின் பின்னலாடை தொழில் மையமாக உள்ளது, இது.

இந்தியாவின் இந்த பின்னலாடை தலைநகரில், இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த, ஐந்து லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன், சிறிய கிராமங்களால் சூழப்பட்ட சிறு நகரமாக இருந்த திருப்பூர், இப்போது, இரண்டாவது பணக்கார மாவட்டமாக வளர்ந்துள்ளது. திருப்பூரின் தனி நபர் வருமானம், 72 ஆயிரத்து, 479 ரூபாய்.

மூன்றாவது இடத்தில் இருப்பது, திருவள்ளூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை நம்பியே உள்ளது.

இந்த மாவட்டத்தின் மொத்த தொழிலாளர்களில், சுமார், 47 சதவீதம் பேர், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அது மட்டுமே திருவள்ளூரின் வாழ்வாதாரம் இல்லை.

ஆவடி, அம்பத்துார் தொழிற்பேட்டைகளில் இருக்கும், மெட்ராஸ் ரிபைனரீஸ், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல், அசோக் லைலேண்ட், பிரிட்டானியா மற்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்றவை, திருவள்ளூர் மாவட்டத்தை, மூன்றாவது பணக்கார மாவட்டமாக மாற்றியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானம், 70 ஆயிரத்து 778 ரூபாய்.

தமிழகத்தின் நான்காவது பணக்கார மாவட்டமாக, விருதுநகர், 70 ஆயிரத்து 689 ரூபாய் தனி நபர் வருமானத்தை கொண்டுள்ளது. ஆயில், காபி, தானியங்கள் மற்றும் மிளகாய் உற்பத்தி செய்வதுடன், ஸ்பின்னிங் மில்கள், கைத்தறி ஆலைகளுடன், விருதுநகர், நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

ஐந்தாம் இடத்தில் இருப்பது, காஞ்சிபுரம். சுமார் ஆயிரம் கோவில்களை தன்னகத்தே கொண்டு, இந்தியாவின் புனித நகரமாக, கருதப்படுகிறது. மெதுவாக அது, வணிக தலமாகவும் மாறி வருகிறது.

முக்கியமாக, விவசாயம் மற்றும் பட்டு தொழில் துறைகள் காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. காஞ்சிபுரத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் மற்றொரு முக்கிய தொழில், சுற்றுலா துறை. காஞ்சிபுரத்தின் தனிநபர் வருமானம், 70 ஆயிரத்து 667 ரூபாய்.

ஆறாம் இடம், கோவை - 65 ஆயிரத்து 781 ரூபாய்.

ஏழாம் இடம், திருச்சி - 65 ஆயிரத்து 11 ரூபாய்.

எட்டாம் இடம், துாத்துக்குடி - 63 ஆயிரத்து 467 ரூபாய்.

9ம் இடம், ஜவுளி நகரம் ஈரோடு, 61 ஆயிரத்து, 631 ரூபாய்.

10ம் இடம், கைத்தறி நகரமான கரூர் -61 ஆயிரத்து 181 ரூபாய்.

11ம் இடம், நாமக்கல் - 58 ஆயிரத்து 133 ரூபாய்.

தலைநகர் சென்னை, 57 ஆயிரத்து 706 ரூபாய் தனி நபர் வருமானத்துடன், 12ம் இடத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

பிற மாவட்டங்கள் முன்னும் பின்னும் அல்லாடிக் கொண்டுள்ளன.

மாவட்டங்கள் வளமாக இருக்கட்டும். ஆனால், அனைத்து மக்களும் சமமான வருமானத்துடன் வளமாக வாழ்கின்றனரா என்றால், பெரிய கேள்விக்குறியாகதான் உள்ளது.

இப்படி கூறி முடித்தார், லென்ஸ் மாமா.

'ஆஹா... இவ்வளவு தகவல்களை எங்கிருந்து, சுட்டாரோ...' என்று நினைத்து, 'எப்படி மாமா, இவ்வளவு தகவல்களை சேகரித்தீர்?' என்றேன்.

அருகிலிருந்த, உ.ஆ., ஒருவர், 'அவர் கூறியதற்கான ஆதாரத்தை பிறகு சொல்கிறேன்...' என்ற அர்த்தத்தில், கண் ஜாடை காட்டினார்.

மையமாக தலையாட்டிய மாமா, 'விஷயம் முக்கியமா அல்லது நதிமூலம், ரிஷிமூலம் ஆராய்வது முக்கியமா?' என்று கூறியவாறு, இடத்தை காலி செய்தார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us