Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/குற்றம் குற்றமே! (16)

குற்றம் குற்றமே! (16)

குற்றம் குற்றமே! (16)

குற்றம் குற்றமே! (16)

PUBLISHED ON : மார் 17, 2024


Google News
Latest Tamil News
முன்கதை சுருக்கம்: கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர், கிருஷ்ணராஜ், மூன்றாவது, 'அசைன்மென்டை' தனஞ்ஜெயனிடம் கூறினார். இதை, ஒட்டுக் கேட்கும் கருவி மூலம், பங்குதாரரான தாமோதரும் கேட்டார். இதில், தனஞ்ஜெயனை வெற்றிப் பெற முடியாதபடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

மூன்றாவது, 'அசைன்மென்ட்'படி, கிருஷ்ணராஜின் குழந்தை, இப்போது வளர்ந்து வாலிபனாக இருக்கும் நிலையில், தேடி கண்டுபிடிக்க, முதலில் விளம்பரம் வெளியான நாளிதழ் அலுவலகத்துக்கு சென்று விபரம் சேகரித்தான், தன்ஞ்ஜெயன்.

தனஞ்ஜெயன் மற்றும் குமார் இருவரையும், புருவங்களில் அரிவாள் வளைவோடு தான் பார்த்தார், அந்த மாநகராட்சி மேலதிகாரி.

தனஞ்ஜெயனும், ''என்ன சார், அப்படி பார்க்கறீங்க?''

''இல்ல, குழாய்ல தண்ணி வரல, பல ஆண்டா ரோடு போடலேன்னு, புகார் பண்ண தான் எல்லாரும் வருவாங்க. 'ரிடயர்ட்' ஆகிட்ட ஒருத்தரை தேடிக்கிட்டு வந்தவங்களை, இப்ப தான் பார்க்கிறேன்.''

''ஓ... அப்ப அந்த, சங்கரலிங்கம், 'ரிடயர்ட்' ஆயிட்டாரா?''

''இங்க வேலைலிருந்து மட்டுமில்ல. உலகத்தை விட்டே, 'ரிடயர்ட்' ஆகிட்டார்.''

மேலதிகாரியின் பதிலால், சற்று இடிந்து போனான், தனஞ்ஜெயன்.

நான் அப்பவே சொல்லல என்பது போல பார்த்தான், குமார்.

ஒரு பைலை மூடிய படி, ''ஆமா, அவரை இப்ப எதுக்கு தேடறீங்க?'' எனக் கேட்டார், மேலதிகாரி.

குப்பைத் தொட்டியில் ஆரம்பித்து, சகலத்தையும் சொல்லி முடித்தான், தனஞ்ஜெயன்.

அவர், எல்லாவற்றையும் கேட்டு விட்டு ஏளனமாய் சிரிக்கத் துவங்கினார்.

''என்ன சார், கேலியா சிரிக்கிற மாதிரி இருக்குதே?''

''எனக்கு, 'யங் ஏஜ்'ல பார்த்த, ஹிந்தி படங்கள் தான் ஞாபகம் வருது. அதுல தான், சின்ன வயசுல குழந்தையா காணாம போய், பின்னால, பெரிய ஆளா வருவாங்க. குடும்பப் பாட்டுன்னு ஒண்ணு இருக்கும். அதை பாடி, ஒண்ணா சேருவாங்க.''

''சார், இது ரொம்ப சீரியசான விஷயம். தப்பு செய்துட்ட ஒருத்தர், திருந்தி நல்லது பண்ண நினைக்கிறார். நீங்க, 'என்கரேஜ்' பண்ணலேன்னாலும் பரவாயில்ல. இந்த ஹிந்தி சினிமா கதையை எல்லாம் சொல்லி, 'டிஸ்கரேஜ்' பண்ணாதீங்க, ப்ளீஸ்...''

''ஐ ஆம் சாரி. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். மாசம் ஒரு குழந்தையாவது, இப்ப குப்பைத் தொட்டியில் கிடக்குது. எப்ப, 'இன்டர்நெட்'டுன்னு ஒரு விஷயம் வந்துச்சோ, அப்பவே ஒழுக்க கேடுகளும் ஆரம்பமாகிடுச்சு.

''மொபைல் போனையே எடுத்துக்குங்க. தகவல் பரிமாற்றத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் இது. இன்னைக்கு அரட்டை ஆயுதமா மாறிடிச்சு. கூடவே, அதுக்குள்ள கண்ட தகவல்கள். அதுல, 'செக்ஸ்' விஷயங்களும் அடக்கம்.

''அதை பார்த்துட்டு கெட்டுப் போற விடலைங்க, கள்ள உறவுகளுக்குள்ள சிக்கி, கடைசியில, அது கர்ப்பத்துல வந்து முடியுது. அப்படி கள்ள உறவுல பிறக்குற குழந்தைகளை கொஞ்சம் கூட தயங்காம, குப்பைத் தொட்டியில் தான் துாக்கிப் போடறாங்க. நேற்று கூட, பெருங்குடியில, ஒரு குழந்தை மீட்கப்பட்டு, 'சைல்ட் ஹோம்'ல சேர்க்கப்பட்டிருக்கு.''

அந்த மேலதிகாரியின் பேச்சிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்தது.

''சார், எங்க வரையில அந்த குழந்தை எந்த, 'ஹோம்'ல அன்னைக்கு சேர்க்கப்பட்டதுன்னு தெரிஞ்சா போதும் சார். மிச்சத்தை நாங்க பார்த்துப்போம்,'' இடையிட்டு பேசினான், குமார்.

''வெரி சாரி சார். நான், 'சார்ஜ்' எடுத்தே, மூன்று ஆண்டு தான் ஆகுது. நீங்க சொல்ற விஷயம் நடந்ததோ, 1997ல். அதாவது, 27 ஆண்டுகளுக்கு முன். அந்த சங்கரலிங்கம், எந்த, 'ஹோம்'ல கொண்டு போய் குழந்தையை கொடுத்தாரோ?''

''சார், அவர் குடும்பத்துல யாரையாவது கேட்டா தெரியுமா?''

''அது எப்படி எனக்கு தெரியும்?''

''நாங்க கேட்டுப் பார்க்கிறோம். அவர் விலாசம் கிடைக்குமா?''

''அதை வேணா நான், 'ரிடயர்ட்மென்ட் லிஸ்ட்'டை பார்த்து தேடி எடுத்து தரேன். நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க. அப்படியே, சென்னை கார்ப்பரேஷன் லிமிட்ல இருக்குற, 'சைல்ட் ஹோம்ஸ்' பத்தின தகவலையும் சேகரிங்க.

''அதுல, 27 ஆண்டுக்கும் மேலா எவ்வளவு இருக்குன்னு, 'பில்டர்' பண்ணுங்க. நிச்சயம் ஒரு அஞ்சாறு தேறும். அங்கெல்லாம் சென்று விசாரிங்க. டிசம்பர், 1997ம் ஆண்டு, கடைசி வாரம் என்ற புள்ளி விபரம் கையில இருக்கிறதால, அவங்க தங்களோட, 'ரெக்கார்ட்சை' பார்த்து சொல்றதும் கொஞ்சம் சுலபமா இருக்கும்.

''அந்த வாரத்துல பல ஆண் குழந்தைகள் கிடைச்சிருந்தா தான் சிக்கல். அதுல, நீங்க தேடற குழந்தை எதுங்கிறதுல குழப்பம் வரும்.''

''நோ சார்... அந்த மாதிரி, 10 பேர் இருந்தாலும், 'ஜீன் டெஸ்ட்' பண்ணித்தான் முடிவுக்கு வருவோம்.''

''ஓ... இப்ப அப்படி ஒரு வசதி இருக்குல்ல? அப்புறமென்ன, நல்லா தேடுங்க. வாழ்த்துகள்.''

''சார், அந்த விலாசம்?''

''உங்க போன் நம்பரை கொடுத்துட்டு போங்க. நான் தேடிக் கண்டுபிடிச்சு அனுப்பி வைக்கிறேன்.''

''சார், நாங்க போன பிறகு, மறந்துட மாட்டீங்களே?''

''நோ நோ... நீங்க வித்தியாசமான நல்ல காரியத்தை பண்ணிகிட்டு இருக்கீங்க. அதுக்கு உதவுறதுல எனக்கு மகிழ்ச்சி தான்.''

அந்த மேலதிகாரியின், பேச்சும், புன்னகையும் அவர்களுக்கு நம்பிக்கையை தந்தது. கை குலுக்கி, வெளியே வந்து, காரை கிளப்பினான், குமார்.

காருக்குள்-

''தனா, உனக்கு நம்பிக்கை இருக்காடா?'' என்றான், குமார்.

''ஆரம்பிச்சுட்டியா?''

''என்ன ஆரம்பிச்சுட்டியா. 'பிராக்டிக்கலா' யோசிப்போம் டா. அந்த, மேலதிகாரி சொன்ன மாதிரி எனக்கென்னமோ நம்ப மேட்டர், சினிமா, 'ஸ்கிரிப்ட்' மாதிரி தான் இருக்கு.''

''வாழ்க்கையில இருந்துதானேடா, 'ஸ்கிரிப்டே' உருவாகுது?''

''அதெல்லாம் சும்மா. வாழ்க்கையில நீ எப்படா, 'டூயட்' பாடியிருக்க; இல்ல, யாராவது பாடியாவது பார்த்துருப்போமா? இதுல, கூட ஆட பத்து பேர்.

''அந்த, 10 பேரும் கதாநாயகனோ, கதாநாயகியோ கஷ்டப்படும் போதோ, இல்ல, 'கேஷுவலா' இருக்கும் போதோ எட்டிக்கூட பார்க்க மாட்டங்க. கரெக்டா, 'டூயட்' பாடும்போது மட்டும் வந்து, மிலிட்டரி, 'ஆர்டர்'ல ஆடிட்டு காணாம போயிடுவாங்க.

''சண்டை காட்சியும் அப்படி தானே? 10 பேர் வந்தாலும், 'ஹீரோ'வை அடிக்க வரும்போது மட்டும் ஒவ்வொருத்தனா வருவாங்க? அப்பவாவது, 10 பேர்.

''சமீபத்துல, ஒரு தெலுங்கு படம் பார்த்தேன். ஒரு, 'ஹீரோ' பறக்குற, ஹெலிகாப்டரையே சங்கிலியை வீசி பிடிச்சு அதை கீழ விழ வைக்கிறார். எல்லாரும், காதுல பூ வெச்சா, அவங்க, காதுக்கு ஒரு பூ வளையத்தையே வைக்குறாங்க.''

குமார், ஜாலியான பேச்சோடு காரை ஓட்ட, அவனை சற்று முறைத்து பார்த்தான், தனஞ்ஜெயன்.

''என்னடா, என் பேச்சு, 'டிஸ்கரேஜிங்'கா இருக்கா?''

''பின்ன... இது, சினிமாவை பற்றி ஆராய்ச்சி பண்ற நேரமா?''

''தோணிச்சு, சொன்னேன். நான் சொன்னதுல என்ன தப்பு?''

''டேய், வாய மூடிக்கிட்டு வண்டியை ஓட்டுடா. உனக்கு எதாவது தோணுனா உன்னோட வெச்சுக்க.''

''அப்ப, அந்த மேலதிகாரி விலாசத்தை அனுப்பினதும், நாம அங்க போய் விசாரிக்க போறோம். அதானே?''

''அதே தான்.''

தனஞ்ஜெயன் சொல்லி வாய் மூடவும், அவன் போனில் அழைப்பொலி. திரையில், அவன் அம்மா பெயர்.

''அம்மா.''

''தனா, எங்கப்பா இருக்கே?''

''ஆபிஸ்ல தான், ஏம்மா?''

''நடுவுல கொஞ்சம் வந்துட்டு போக முடியுமா?''

''என்ன விஷயம், எதாவது பிரச்னையாம்மா?''

''சேச்சே, நல்ல விஷயம் தான்ப்பா. கல்யாண புரோக்கர் வையாபுரி, நம்ப சாந்தி கல்யாண விஷயமா, ஒரு நல்ல வரனோட வந்திருக்கார்.''

''விபரத்தை கேட்டு வைங்க. நான், மதியம் சாப்பிட வரும்போது பேசிக்கலாமே?''

''சரிப்பா, ஆனா, ஒண்ணு, 10 நாளைக்குள்ள கல்யாணம் நடந்தாகணுமாம். நிதானமா யோசிக்க எல்லாம் நேரமில்லப்பா.''

''அப்படி என்னம்மா அவசரம்?''

''மாப்பிள்ளை அமெரிக்காவுல இருக்காராம். ஒரு மாசம், 'லீவு' போட்டுட்டு வந்திருக்காரு. ஏற்கனவே, ஒரு இடம் முடிவாகி, போன வாரம் கல்யாணமும் நடந்திருக்கணும்.

''ஆனா, கடைசி நிமிஷத்துல அந்த கல்யாணப் பொண்ணு, 'நான் காதலிக்கிறவனை தான் கட்டிக்குவேன்'னு ஓடிப் போயிட்டாளாம். மாப்பிள்ளைக்கு தலையில இடி விழுந்த மாதிரி ஆயிடிச்சு. அதான் வந்த, 'லீவு'ல கல்யாணம் முடிக்காம போகக் கூடாதுன்னு அவங்க, அப்பா - அம்மா, புரோக்கர்கிட்ட சொல்லியிருக்காங்க.''

''என்னம்மா, நீ சொல்ற எதுவுமே நல்லா இல்லையே.''

''அந்த பொண்ணு ஓடிப்போனதுக்கு, பையன் என்னப்பா பண்ணுவான்? இந்த காலத்துல எந்த பொண்ணு அப்பா - அம்மா பேச்சை கேட்டு நடக்குதுங்க?''

''சரி, சாந்தி என்ன சொல்றா?''

''அவ எல்லாத்தையும் உன்கிட்ட விட்டுட்டா. நீ பார்த்து எது சொன்னாலும் சரிங்கிறா.''

''அப்படியா?''

''ஆமாம்பா. கொஞ்சம் வேகமா வாப்பா. உட்கார்ந்து பேசி, ஒரு நல்ல முடிவெடுத்துடலாம்.''

''சரிம்மா. நேர்ல பேசுவோம்,'' என்று போனை, 'கட்' செய்தவனை, காரை ஓட்டியபடியே, திரும்பிப் பார்த்தான், குமார்.

''டேய், பார்த்து காரை ஓட்டுடா. என்னை எதுக்கு பார்க்கிற?''

''கல்யாணம்ன்னு ஏதோ காதுல விழுந்துச்சு?''

''ஆமாம்டா, சாந்திக்கு ஒரு வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை அமெரிக்கா.''

''அப்படிப்போடு, நல்ல விஷயம் தானே?''

''என்ன நல்ல விஷயம்? அந்த மாப்பிள்ளைக்கு பார்த்து நிச்சயம் பண்ண பொண்ணு, எவன் கூடவே ஓடிட்டாளாம். அதனால, அவசர அவரசமா ஒரு பொண்ணை பார்த்து, 10 நாள்ல கல்யாணம் பண்ண ஆசைப்படறாங்க.''

''அதை, நீ தப்பா நினைக்கிறியா?''

''நீ என்ன, ஆஹா அமெரிக்கா வரன்னதும், சரின்னு சொல்லச் சொல்றியா?''

''நான் அப்படி சொல்லல. அதே சமயம், நல்ல வாய்ப்பை நாம தவற விட்டுடவும் கூடாதுல்ல?''

''அதுக்கு தான், அம்மா உடனே வீட்டுக்கு வரச் சொன்னாங்க.''

''அப்ப, காரை வீட்டுக்கு விடவா?''

''நோ நோ... ஆபீசுக்கு போ; மேடம் காத்திருப்பாங்க. அவங்ககிட்ட நாம் தேடிப் போன விஷயங்களை பற்றி உடனே சொல்லணும்.''

''அதைவிட இந்த கல்யாண விஷயம் பெருசுடா.''

''நீ இப்ப என்ன சொல்ற?''

''தேடி வர்ற நல்ல விஷயத்தை விட்டுவிட வேண்டாம். நாம தேடற அந்த வாலிபன் கொஞ்சம் காத்திருக்கட்டும்,'' உரிமையோடு சொன்னான், குமார்.

தனஞ்ஜெயனும், அரைமனதோடு தலையை ஆட்ட, தனாவின், 'அபார்ட்மென்ட்' நோக்கி திரும்பத் துவங்கியது, கார்.

ஹாலில், சோபாவில் அமர்ந்திருந்தார், புரோக்கர் வையாபுரி. தனஞ்ஜெயன் வரவும், வணங்கி புன்னகைத்தார். எதிரில் அமர்ந்திருந்தாள், அம்மா சுசீலா. சாந்தி தனி அறை ஒன்றில், இதமான, 'ஏசி' குளிருக்கு நடுவில், தங்கைகள் ஸ்ருதி, கீர்த்தியோடு வெட்கத்தோடு அமர்ந்திருந்தாள்.

ஹாலில் வந்தமர்ந்து, ''என்னண்ணே, 10 நாளைக்குள்ள கல்யாணம்ங்கிற நிபந்தனையோட, எங்களையும் கொஞ்சம் குழப்பிட்டீங்க?'' என்று பேச்சை துவங்கினான், தனா.

''சூழ்நிலை அப்படி தம்பி. கல்யாணம்ன்னு வந்துட்டு அது நடக்காம போறத, பையனோட அப்பா, அம்மா விரும்பல. பையனுக்கு, ஐ.டி., கம்பெனியில் பெரிய வேலை. மாசம், 10 ஆயிரம் டாலர் சம்பளம், சொந்த வீடு, காருன்னு ஒரு குறையுமில்லை.

''பையனும், ராஜா மாதிரி இருக்கான். போட்டோவை பாருங்க. நீங்க சரின்னா, இன்னைக்கு சாயந்தரமே நம்ப வீட்டுக்கு, பையனை குடும்பத்தோட கூட்டிட்டு வந்துடறேன்.''

மாப்பிள்ளை போட்டோவை வாங்கி பார்த்தான், தனா.

அப்போது புரோக்கர் போனுக்கு அழைப்பொலி. புரோக்கரும் எழுந்து ஒதுங்கிச் சென்று பேச்செடுத்தார்.

மறுமுனையில், கிருஷ்ணராஜின் தொழில் விரோதியான, தாமோதர்.

''என்னய்யா, மீன் துாண்டில்ல மாட்டிச்சா, இல்லையா?'' என்ற கேள்வி அவரிடம்.



- தொடரும்.- இந்திரா சவுந்தர்ராஜன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us