Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/பயத்தில் ஒளியும் கடன்கார சுவாமி!

பயத்தில் ஒளியும் கடன்கார சுவாமி!

பயத்தில் ஒளியும் கடன்கார சுவாமி!

பயத்தில் ஒளியும் கடன்கார சுவாமி!

PUBLISHED ON : மார் 17, 2024


Google News
Latest Tamil News
இந்தியாவின் மிகப்பெரிய வருமானமுள்ள கோவில்களில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இங்கே கோடி கோடியாய் கொண்டு வந்து உண்டியலில் கொட்டுகின்றனர், பக்தர்கள். ஆனால், இங்குள்ள மூலவர் வெங்கடாசலபதியோ பெரும் கடன்காரர்.

செல்வ சீமாட்டியான, பத்மாவதியை கல்யாணம் செய்யும் ஆசையில், குபேரனிடம் ஏகமாய் கடன் வாங்கி, கலியுகம் முடியும் வரை வட்டியும், இறுதிநாளில் அசலையும் அடைப்பதாக ஒப்பந்தம் போட்டிருப்பவர். தினமும் மண்சட்டியில் தான், தயிர்சாதம் நைவேத்யம் செய்கின்றனர். நமக்கு, லட்டு தரும் அவர் சாப்பிடுவதோ, இந்த எளிய உணவு தான்.

அது மட்டுமா! இவர் குபேரனிடம் வாங்கிய கடன் போதாதென்று, ஒரு ஏழை மூதாட்டியிடமும் கடன் வாங்கி, நிம்மதியாக வீதி உலா வர முடியாமல் உள்ள தகவல் உங்களுக்கு தெரியுமா?

திருப்பதி திருமலையில் தெற்குமாட வீதி உள்ளது. இதை, அஸ்வ சாலை என்பர். விழாக்காலங்களில், இந்த வீதி வழியே வெங்கடாசலபதி பவனி வருவார். இந்த வீதிப்பக்கம் வந்தாலே, வெங்கடாசலபதி இன்றும் நடுக்கம் காண்கிறார்.

இதற்கான காரணம் இது தான்:

திருப்பதி அடிவாரத்தில், கங்கம்மா என்ற மூதாட்டி, சுண்டல் விற்று பிழைத்தாள். இதில் அவளுக்கு சொற்ப வருமானமே கிடைக்கும். ஒருமுறை பக்தர் ஒருவரிடம், 'தினமும் இவ்வழியில் ஏராளமானோர் மலை ஏறுகிறீர்களே... அங்கே என்ன தான் இருக்கிறது?' என்றாள், அப்பாவியாக.

'அட பாட்டி! திருப்பதிவாசியான உனக்கு இது கூட தெரியாதா? அங்கே தான் ஏழுமலையான் இருக்கிறார். அவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. நீயும் அவரை வணங்கு. பிறக்கவும் வேண்டாம். இப்படி சுண்டல் விற்று கஷ்டப்படவும் வேண்டாம்...' என்றார்.

உண்மையில், கங்கம்மாவுக்கு இப்படி ஒரு கோவில் இருக்கும் விஷயமே அன்று தான் தெரிந்தது. அவளும் சுண்டல் கூடையுடன் மலையேறி, ஏழுமலையானை வணங்கி, பிறப்பில்லா வரம் கேட்டாள்.

அன்று ஒரு முதியவர், அஸ்வசாலையில் அமர்ந்திருந்த அவளிடம், சுண்டல் வாங்கி சாப்பிட்டார்.

'பாட்டி பசியில் சாப்பிட்டு விட்டேன். நான் ஒரு கடன்காரன். கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே காசு தீர்ந்து விட்டது. நாளை தந்து விடுகிறேன். என்னை மன்னித்து விடு...' என்றார்.

வந்தது ஏழுமலையான் என்பதை அறியாத பாட்டியும் இரக்கப்பட்டு, 'சரி..சரி.. நாளை தந்து விடுங்கள்...' என்றாள்.

மறுநாள் அவர் வரவில்லை.

'அடப்பாவி ஏமாற்றி விட்டானே...' என்று வருந்தினாள், பாட்டி.

சில மாதங்களில் அவள் இறந்து போனாள். அவள் கண் விழித்தது வைகுண்டத்தில். சுண்டல் காசுக்கு பதிலாக, அவளுக்கு வைகுண்டமே தந்து விட்டார், ஏழுமலையான்.

இருப்பினும், மனிதனாகப் பிறந்து ஏமாற்றியது குற்றம் தானே! இப்போதும், விழாக்காலங்களில் அஸ்வசாலையில் பவனி வரும் போது, பாட்டி சுண்டல் விற்ற இடத்தில் மேள தாளத்தை நிறுத்தி விடுவர். பாட்டிக்குப் பயந்து, சுவாமி ஒளிந்து செல்வதாக கூறுவர்.

கடவுளாக இருந்தாலும், யாரையாவது ஏமாற்றினால், நிம்மதியாக இருக்க முடியாது என்பதை, தன் வாழ்க்கை வரலாறு மூலம் தெளிவுபடுத்தியுள்ளார், ஏழுமலையான்.     

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us