Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/குற்றம் குற்றமே! (15)

குற்றம் குற்றமே! (15)

குற்றம் குற்றமே! (15)

குற்றம் குற்றமே! (15)

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
முன் கதை சுருக்கம்: கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளரான, கிருஷ்ணராஜ் கொடுத்த, இரண்டு, 'அசைன்மென்ட்'களையும், வெற்றிகரமாக முடித்து, அவரது பாராட்டை பெற்றான், தனஞ்ஜெயன்.

கிருஷ்ணராஜின் பங்குதாரரான தாமோதரும், அவரது மகனும், இரண்டு முறையும் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரத்துடன் இருந்தனர். மூன்றாவது, 'அசைன்மென்டை' எப்படியாவது தடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தனர்.

தனஞ்ஜெயனிடம், மூன்றாவது, 'அசைன்மென்டை' கிருஷ்ணராஜ் சொல்ல, அது, அவர் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த, 'மைக்ரோ போன்' மூலம், தாமோதருக்கு தெரிந்துவிட்டது.

தாமோதர் புன்னகைக்கும் போது, விவேக்கும் வந்து நின்று கவனித்தான்.

''என்னப்பா, மர்மமா ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்க. எனக்கு புரியல.''

''இந்த கிருஷ்ணராஜை நினைச்சேன், சிரிப்பு வந்துடுச்சு. எப்படியும் கொஞ்ச நாள்ல சாகப் போறான். சாகறதுக்குள்ள இன்னும் எவ்வளவு சம்பாதிக்கலாம்ன்னு யோசிக்காம, இப்படி முட்டாளா இருக்கானேன்னு நினைச்சேன். சிரிப்பு தானா வந்துடுச்சு.''

''உங்களுக்கு சிரிப்பு வருது. எனக்கோ எரிச்சல் தான் வருது. பாவம், புண்ணியம்ன்னு அந்த ஆள் கிறுக்குப் பிடிச்சு போய் கிடக்கறான். தெரியாம தான் கேட்கிறேன், இவன், இப்ப மகாத்மா ஆயிட்டா, பழைய பாவம்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆயிடுமா?''

''ஒரு வியாதிக்கு பத்து வியாதி வரவும் பயந்துட்டான்பா. அவ்வளவு தான் விஷயம். போகட்டும் அவன் மூணாவது, 'அசைன்மென்ட்' எதுன்னு தெரிஞ்சுடிச்சு. நம் கவனம் இனி அதன் மேல் தான் இருக்கணும்.

''இந்த தடவை அந்த தனஞ்ஜெயன், எதனாலயும் ஜெயிச்சிடக் கூடாது. அப்படி ஜெயிச்சா, நானும், நீயும் இந்த, 'அண்டர் கிரவுண்ட் பிசினஸ்' பண்றதுலயும் அர்த்தமே கிடையாது. நாம பேசமா தலையை மொட்டையடிச்சுட்டு, எதாவது கோவில் வாசல்ல போய் உட்கார்ந்துக்க வேண்டியது தான்.''

''என்னப்பா, நீங்களா இப்படி பேசறீங்க?''

''நான் பேசல, அந்த தனஞ்ஜெயன் பேச வெச்சுட்டான்.''

''அப்பா, அவன் ஒரு கஷ்டப்படும் மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு ஜீன்ஸ் பேன்ட் கூட வாங்க, வக்கில்லாம கிடந்தவன். எப்படியோ கஷ்டப்பட்டு டிகிரிய மட்டும் வாங்கிட்டான்.

''அம்மா, ஒரு அப்பளம் ஊறுகாய் கேசு. அக்கா, ஒரு தையல்காரி. போதாத குறைக்கு, இரண்டு தங்கச்சிங்க வேற. மொத்த குடும்பமும் ராத்திரி துாங்கிட்டு இருக்கும்போது, கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு, ஒரு தீக்குச்சிய கொளுத்திப் போட்டா போதும்.

''சிலிண்டர் வெடித்து, விபத்தில் ஒரு குடும்பம் அழிந்ததுன்னு, ஒருநாள் செய்தியோட முடிஞ்சு போயிடும். நீங்க, அவனை நினைச்சு இவ்வளவு வருத்தப்படறீங்களே?'' என, சூசகமாக பேசினான், விவேக்.

''விவேக்... இதை நீ செஞ்சுட்டு வந்து பேசியிருந்தா, நான் ஏன் இப்ப இப்படி பேசப் போறேன். ஒரு தடவைக்கு இரண்டு தடவை தோத்துட்டு, இப்ப கூட சரியா யோசிக்காம, அவசரக் குடுக்கையாட்டம் பேசறியே!''

''அதனால என்னப்பா... இன்னைக்கே அதை செய்துட்டா போச்சு.''

''நீ இப்படிதான் சொல்வேன்னு எனக்கு தெரியும். ஆனா, அதுக்கெல்லாம் இனி அவசியம் இல்ல. அந்த தனஞ்ஜெயனை பற்றி, இனி, நீ கவலைப்பட்டு அலட்டிக்காத. அவன், அவன் போக்குல போகட்டும். அவனுக்கு இப்ப மூணாவது, 'அசைன்மென்டை'யும் கொடுத்துட்டான், கிருஷ்ணராஜ்.

''அந்த, 'அசைன்மென்டை' ஒரு தப்பும் இல்லாம, அந்த தனஞ்ஜெயன் முடிக்கட்டும். பிறகு, பார் வேடிக்கையை...''

''முடிக்கட்டுமா. ஆமா, அந்த மூணாவது விஷயம் தெரிஞ்சுடிச்சாப்பா... எனக்கே தெரியாம யாருப்பா அதை உங்களுக்கு சொன்னது?''

''எப்பவும் பணத்துக்கு ஆசைப்படறவங்க சொல்லித்தான் எதுவும் தெரிய வரணுமா? இன்னிக்கு விஞ்ஞானம் நமக்கு நிறைய வழிகளை காட்டிகிட்டிருக்குப்பா.''

''மைக்ரோ ரிசீவர்?''

''குட்... வளவளன்னு பேசாம, கப்புன்னு பிடிச்சுட்ட. நேற்று, அவனை பார்க்க, நம் ஆடிட்டரை அனுப்பியிருந்தேன். அப்ப, அவன் கட்டிலுக்கு கீழ, மைக்ரோ போன் ரிசீவரை வெச்சுட்டு வரச் சொல்லியிருந்தேன். அவரும், கச்சிதமா காரியத்தை முடிச்சதுல, இப்ப அவன் திட்டம் என்னங்கிறது தெரிஞ்சு போச்சு.''

''அதை, அவங்களால வரப்போற நாட்கள்ல கண்டுபிடிக்க முடியாதா?''

''சந்தேகம்ன்னு வந்தா, நிச்சயம் அந்த தனஞ்ஜெயன் கண்டிபிடிச்சுடுவான். 'மொபைல் ஜாமரை' கிருஷ்ணராஜ் அறையில வைச்சா போதும். அது, 'சைலன்ட்' ஆயிடும். ஆனா, அதை பற்றி எல்லாம் இனி நாம கவலைப்பட வேண்டாம், விவேக்.''

''ஏம்ப்பா?''

''அவன் மூணாவது, 'அசைன்மென்ட்' தான் தெரிஞ்சுடிச்சே?''

''அது என்னப்பா?'' என, விவேக் கேட்க, தாமோதரும் சொல்லி முடித்தார்.

''ஐயோ அப்பா... அந்த கிருஷ்ணராஜ், இவ்வளவு ஜெகதால பிரதாபனா?''

''அவன், பல பெண்கள்கிட்ட படுத்திருக்கான். ஆனா, அதுல இந்த, சாரதாங்கறவ தான் கர்ப்பமானா. அதை வெச்சு அவன்கிட்ட பணத்தை கறக்காம, கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவனை கட்டாயப்படுத்தினா, பைத்தியக்காரி. கடைசியில அடையாறுல விழுந்து, செத்தே போனா.''

''அப்ப, இப்ப அந்த குழந்தை?''

''அப்பதான் அது குழந்தை. இப்ப அது, உன்னைப் போல ஒரு வாலிபன்.''

''அவனை எங்கேன்னு போய் கண்டுபிடிப்பாங்க?''

''அதைத்தான், நாம பொறுமையா துார இருந்து, பார்த்து ரசிக்கப் போறோம்.''

''ஐயோ... ஒருவேளை, அவன், அந்த பையனை கண்டுபிடிச்சுட்டா?''

''கண்டுபிடிச்சுட்டான்னு அதிராதே.... கண்டுபிடிக்கணும்ன்னு ஆசைப்படு.''

''என்னப்பா நீங்க, கவலைப்படாம ஆசைப்பட சொல்றீங்க?''

''எதனால நான் இப்படி சொல்றேன்னு உனக்கு இப்ப புரியாது. ஆனா, அவன் அந்த வாலிபனை நெருங்கும் போது தெரியும். நீ, செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். அந்த தனஞ்ஜெயனை எதுவுமே செய்யாத; துார இருந்து கவனிச்சுகிட்டே இரு; எனக்கும் தகவல் சொல்லு; இப்போதைக்கு அது போதும்.''

''அப்பா...''

''சொன்னதை மட்டும் செய், விவேக். ஒரு சதுரங்க விளையாட்டு துவங்கிடிச்சு. கடைசியில யார் ஜெயிக்கிறாங்கன்னு மட்டும் பார்,'' என, அழுத்தமாய் சொல்லி முடித்தார், தாமோதர்.

அது ஒரு தினசரி பத்திரிகை அலுவலகம்.

சப் - எடிட்டர் சண்முகம் என்பவர் முன் அமர்ந்திருந்தனர், தனஞ்ஜெயனும், குமாரும்.

கடந்த, 1997, டிசம்பர் மாத கடைசி வார இதழ்கள் அவ்வளவும், அவர்கள் முன் இருந்தது. அதில், டிசம்பர் 27ம் தேதி இதழில் தான், 'குப்பைத் தொட்டியில் குழந்தை!' என்ற அந்த செய்தியும் கண்ணில் பட்டது.

எப்படியோ, தேடி வந்த விஷயத்தின் ஆரம்பம் பிடிபட்டு விட்டது.

''ரொம்ப நன்றி சார். எங்களுக்காக ரொம்ப சிரமப்பட்டு, இந்த பேப்பரை கண்டுபிடிச்சு கொடுத்திட்டீங்க. எங்கே கிடைக்காம போயிடுமோன்னு பயந்துகிட்டே தான் வந்தோம்,'' என்று, துணை ஆசிரியரிடம், நன்றி கூறினான், தனஞ்ஜெயன்.

''வாஸ்தவம் தான் சார். இப்பல்லாம் எல்லாமே, 'டிஜிட்டல் காபி'யா தான் இருக்கு. இந்த மாதிரி, 'பேப்பர் பிரின்ட்சை' கரையான்கிட்டயிருந்து காப்பாத்தி, பாதுகாப்பா வெச்சுக்கிறதும் சவாலா இருக்கும். இந்த விஷயத்துல, நீங்க, நிச்சயமா அதிர்ஷ்டசாலி தான்.''

''எங்க அதிர்ஷ்டம் இந்த பேப்பர் கிடைக்கிறதுல இல்ல சார். இந்த செய்தியில இருக்கிற குப்பை தொட்டி குழந்தை, இப்ப கிடைக்கிறதுல தான் இருக்கு.''

''வெரி இன்ட்ரஸ்ட்டிங்... இந்த குழந்தை, 'ஐ மீன்' இப்ப நிச்சயம் வாலிபனா, உங்களை போல, 'யங்மேனா' தான் இருப்பான். இவனை, இப்ப எதுக்கு தேடறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?''

''அது ஒரு பெரிய கதை சார்... சுருக்கமா சொல்லிடறேன். இந்த குழந்தை, ஒரு தப்பான உறவுல பிறந்த ஒண்ணு. அந்த தப்பை, அன்னைக்கு செய்தவர், இன்றைக்கு திருந்தி, நல்ல மனுஷனா மாறிட்டார். குழந்தையையும் தேடி கண்டுபிடிச்சு, தன் கூட வெச்சுக்க விரும்பறார்.''

''அருமை சார்... ஆமா, யார் அவர்? நான் தெரிஞ்சுக்கலாமா?''

''ப்ளீஸ் சார். இதுக்கு மேல எதையும் கேட்காதீங்க. நானும் சொல்ல முடியாத நிலையில் இருக்கேன்.''

''புரியுது... இது ஒரு நல்ல விஷயம். அதுக்கு உதவினதுல எனக்கும் மகிழ்ச்சி. இது தொடர்பா வேற எந்த உதவின்னாலும் தயங்காம கேளுங்க. பொதுவா, இந்த மாதிரி விஷயங்கள் ஒரு கட்டுரையா வரும்போது, அது மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும்.

''எனவே, இந்த பையன் கிடைச்சு, எல்லாம் ஒண்ணு சேர்ந்த பிறகு, எனக்கு தகவல் கொடுங்க. நான் அதை, கட்டுரையா பண்றேன். அதுல, நிச்சயம் உங்க யார் பேரையும் போட மாட்டேன்.''

''ஆகட்டும் சார்... உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி,'' என்று கூறிவிட்டு, வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தான், தனஞ்ஜெயன். தன் மொபைல் போனில் படம் பிடித்திருந்த அந்த செய்தியை ஒருமுறை வாசித்தான்.

குப்பை தொட்டியில் குழந்தை!

நுங்கம்பாக்கம், லயோலா கல்லுாரி அருகே உள்ள குப்பை தொட்டி ஒன்றில், பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத ஒரு ஆண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டது. குப்பைகளை அள்ளுவதற்காக சென்ற மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி, சங்கரலிங்கம் என்பவர், குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின், அந்த குழந்தையை அருகில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தார்.

செய்தியை திரும்ப திரும்ப வாசித்தான்.

காரை ஓட்டிய குமாரைப் பார்த்து, ''காரை கார்ப்பரேஷன் ஆபீசுக்கு ஓட்டு. கமிஷனரை பார்த்து, இந்த சங்கரலிங்கம் யாருன்னு முதல்ல கண்டுபிடிப்போம்,'' என்றான்.

''ஏன்டா, இவரை பிடிச்சா தான் அந்த குழந்தைகள் காப்பகம் எதுன்னு தெரியுமா?''

''எக்ஸாக்ட்லி.''

''அந்த சங்கரலிங்கம் இன்னுமா சர்வீஸ்ல இருப்பார்ன்னு நீ நினைக்கறே?''

''நிச்சயம் வயசாகி இருக்கும். ஓய்வு கூட பெற்றிருக்கலாம். ஒருவேளை, வேலையில இருந்தா?''

''ஏன் இறந்துகூட போயிருக்கலாம் தானே?''

''ஏன்டா இப்படி, 'நெகட்டிவா' பேசற?''

''எல்லா கோணத்துலயும்தான யோசிக்கணும்?''

''நான், 'பாசிட்டிவா' மட்டுமே யோசிப்பேன். 'நெகட்டிவ் திங்கிங்' எந்த விஷயத்துலயும் வேண்டாம், குமார்.''

''இதை சொல்றது சுலபம், தனா. ஆனா, நினைக்கிறது கஷ்டம். இப்ப கூட பார், இந்த 'டிராபிக்ல' எவன் எப்படி வந்து உரசிடுவானோன்னு பயந்துகிட்டே தான், நான் வண்டியை ஓட்டிகிட்டிருக்கேன்.

''நம்பள மாதிரி கார் வெச்சுருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த, 'ரேடியல் பைக்'காரங்க தான் எமனுங்க. ஒருத்தன் கூட நேரா போக மாட்டேங்கிறான். பைக் மேல ஏறி உட்காரவுமே பாம்பு மாதிரி ஆயிடறாங்க. வளையாம, நெளியாம வண்டிய ஓட்டவே மாட்டேங்கிறாங்க.''

''நீ, புலம்பாம வண்டியை பார்த்து ஓட்டு. அந்த சங்கரலிங்கம் உயிரோட இருக்கணும்ன்னு நான் அந்த சாமிய வேண்டிக்கிறேன்.''

''தனா, உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்காடா?''

''இப்ப எதுக்குடா இந்த கேள்வி?''

''யூத்னா இடதுசாரியா இருக்கணும்கிறது தானே இப்ப ட்ரெண்ட்?''

''அது மட்டுமா, முளைப்பாரி மாதிரி, தலை முடி வெச்சுக்கணும். காதுல, வளையம் போட்டுக்கணும். சட்டையில, பட்டனையே போட்டுக்க கூடாது. உடம்பெல்லாம் பச்சை குத்திக்கிட்டிருக்கணும். 'ப்ரோ, ப்ரோ'ன்னு தான் பேசணும்.''

''எஸ் ப்ரோ. யூ ஆர் கரெக்ட்?''

''ஓ.கே., ப்ரோ, நீ மூடிகிட்டு வண்டியை ஒழுங்கா ஓட்டு.''

அவர்கள் சற்று ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டிருந்த நிலையில், கார்ப்பரேஷன் பில்டிங் கட்டடமும் வந்தது.



- தொடரும்.

இந்திரா சவுந்தர்ராஜன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us