Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அன்னதான திருநாள்!

அன்னதான திருநாள்!

அன்னதான திருநாள்!

அன்னதான திருநாள்!

PUBLISHED ON : மார் 03, 2024


Google News
Latest Tamil News
மார்ச் 08 - மகாசிவராத்திரி

ஒவ்வொரு தெய்வத்துக்கும், ஆண்டுக்கு சில திருநாள் வருவது வழக்கம்.

முருகனுக்கு வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம்; அம்பாளுக்கு நவராத்திரி, கேதார கவுரி விரதம்; லட்சுமிக்கு வரலட்சுமி விரதம்; பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி...

இப்படி குறிப்பிட்ட திருநாட்கள். சிவனுக்கு முக்கிய விழா என்றால், சிவராத்திரி தான். ஆனால், இதன் உண்மைப் பெயர், அன்னதான திருநாள்.

சிவராத்திரியன்று சாப்பிடாமல், இரவில் துாங்காமல் விரதம் இருக்கின்றனர். பணக்காரனுக்கு தினமும் பால், நெய், பலகாரம், அறுசுவை உணவு, பழவகைகள் கிடைத்து விடுகிறது. ஆனால், உலகில் பலர் பட்டினியும் கிடக்கின்றனர். பட்டினி கிடக்கும் போது, தலை சுற்றுகிறது, கண்கள் இருளுகிறது, மனம் சிந்திக்க மறுக்கிறது.

ஏழைகளின் இந்தக் கஷ்டத்தை புரிந்து, அவர்களுக்கும் உணவு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், தான் சிவராத்திரிக்கு மறுநாள், கோவில்களில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது.

நம் ஊர் கிராமங்களில் சிவராத்திரியன்று இரவில், குலதெய்வ வழிபாடு நடத்துகின்றனர். இதற்கான காரணம், சிவராத்திரிக்கு மறுநாள் ஏழைகளுக்கு உணவிட வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான்.

முதல்நாள் இரவே சமையலை முடித்து விடுவர். இரவில், சமைப்பதால் துாக்கம் வராது. இதனால், சிவராத்திரியன்று துாங்கக் கூடாது என்ற நோக்கமும் நிறைவேறும்.

'என்னால் பட்டினி கிடக்க முடியாது. இரவு, 9:00 மணிக்கே துாக்கம் வந்து விடும். எனக்கு சிவன் அருள் செய்ய மாட்டாரா?' என்று கேட்டால், அதற்கும் விடை வைத்திருக்கிறார், ஞான சம்பந்தர்.

விரதம் இருந்து உடலை நோகடிப்பதால் மட்டும் நீ, கடவுளைப் பார்த்து விட முடியாது. மனம் அவரோடு ஒன்ற வேண்டும். அதற்கு சிவதோத்திரங்களை வாயாரப் பாடி, மனதார நினைத்து வணங்க வேண்டும். பட்டினி விரதத்தை விட, மனதால் அனுஷ்டிக்கும் விரதமே உயர்ந்தது என்பது இதன் கருத்து.

எனக்கு மந்திரமும் தெரியாது. சிவன் பற்றிய பாடலும் தெரியாது என்பவர்களுக்கு, எளிய வழி இருக்கிறது. 'சிவசிவ' என்று மட்டும் சொல்லுங்கள். உங்களுக்கு சிவனருள் நிச்சயம்.

'சிவம்' என்ற சொல்லுக்கு சுகம் என்றும், உயிர் என்றும் பொருள்.

கிராமங்களில் ஒருவர் இறந்தால் 'அவருக்கு சீவம் போயிட்டுது...' என்பர். சிவம் என்பதின் நீட்டமே 'சீவம்!'

இது சுகமான ராத்திரி. இரவு முழுக்க கண்விழித்து சிவனுக்கு நடக்கும் அபிஷேகம், சிவதோத்திரங்களைக் கேட்டல் என்று, அந்த இரவு சுகமாக கழியும்.

அன்னதான விழாவான சிவராத்திரியில், உங்களால் முடிந்தளவு ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். உணவிட முடியாவிட்டால், தாகமென வந்தவருக்கு தண்ணீராவது கொடுங்கள். சிவனருள் பெறுவீர்கள்.     

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us