Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/குற்றம் குற்றமே! (13)

குற்றம் குற்றமே! (13)

குற்றம் குற்றமே! (13)

குற்றம் குற்றமே! (13)

PUBLISHED ON : பிப் 25, 2024


Google News
Latest Tamil News
முன்கதை சுருக்கம்: கீழனுார் சென்று திரும்பிய தனஞ்ஜெயன், லிங்கத்தின் மீது பாம்பு படமெடுத்த விஷயத்தையும், இன்று இரவே நடராஜர் சிலையை கோவிலில் கொண்டு சேர்ப்பதாகவும் கார்த்திகாவிடம் தெரிவித்தான். விவேக்கிற்கு இந்த விஷயம் தெரிந்தால் விபரீதமாகிவிடும். முன்பு தன் வீட்டின் சமையல்கார மாமி கொல்லப்பட்ட விஷயத்தையும் கூறினாள், கார்த்திகா. சிலையை கோவிலில் சேர்ப்பதற்கான திட்டத்தை கார்த்திகாவிடம் கூறினான், தனஞ்ஜெயன்.

டிரைவர் உடையில் வந்த குமாரை, தனஞ்ஜெயனின் அக்கா மற்றும் தங்கைகள் கிண்டல் செய்தனர். சினிமாவுக்கு செல்வதாக கூறி, கார்த்திகா வீட்டிற்கு செல்ல, அவர்கள் ஏதோ தவறான வழியில் செல்வதாக சந்தேகப்பட்டாள், தனஞ்ஜெயனின் அக்கா.

திட்டமிட்டபடி, நடராஜர் சிலையை, வேன் ஒன்றில் கொண்டு செல்ல, விஷயம் அறிந்து, விவேக், வேன் சக்கரத்தைத் துப்பாக்கியால் சுட்டான்.

தன் படகு காரிலிருந்து இறங்கி வெளியே வந்தான், விவேக். அவன் காரின், 'ஹெட்லைட்' வெளிச்சம், மரத்தின் மேல் மோதி நின்ற, தனஞ்ஜெயனின் வேன் மேல் பாயத் துவங்கியது.

நல்ல வேளையாக இருவருக்கும் பெரிய காயமில்லை. தடுமாறியபடி, வேனை விட்டு வெளியே இறங்கி, விவேக்கையும் பார்த்தனர்.

''என்ன மிஸ்டர் தனஞ்ஜெயன், இந்த விபத்தை, நீ கொஞ்சம் கூட எதிர்பார்க்கலேல்ல?'' என்று கேட்டபடியே, ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான், விவேக்.

பதிலுக்கு, தனா, அவனை முறைக்க, ''ஓ... ஐ ஆம் சாரி... நான் தான் விவேக். உன் கூட போன்ல பேசின அதே விவேக். கிளாட் டு மீட் யூ...'' என்று குலுக்குவதற்காக, தன் வலது கையை நீட்டினான்.

வெறித்தான், தனஞ்ஜெயன். தன் தலையில் அடிபட்டு கசிந்த ரத்தத்துளிகளை தொட்டுப் பார்த்தபடியே உடன் அருகில் நின்றான், குமார்.

அந்த இடைவெளியில், விவேக்கின் காரிலிருந்து இறங்கிய இரண்டு பேர், விறுவிறுவென்று தனஞ்ஜெயன் வேனின் சகல பாகங்களையும் நோட்டமிட்டு, பின்புற கதவையும் திறந்து, நடராஜர் சிலை உள்ள அட்டை பெட்டியை பார்த்தனர்.

'சார்... அந்த பாக்ஸ் பின்னால் இருக்கு...' என்றனர்.

''முதல்ல, அதை நம்ப காருக்கு மாத்துங்க,'' என்றான், விவேக்.

தனஞ்ஜெயனும், குமாரும் பார்த்துக் கொண்டே இருக்க, அட்டை பெட்டியும் இடம் மாறியது.

சிரித்தபடியே, ''இந்த சிலையை, அந்த கோவில்ல இருந்து திருட நாங்க பட்டபாடு எனக்கு தான் தெரியும். இதோட விலை பல கோடி ரூபாய். அந்த கிருஷ்ணராஜுக்கு தான் கிறுக்கு பிடிச்சிருக்குன்னா, இந்த கால இளைஞனான உனக்குமா தனஞ்ஜெயன்?'' என்றும் கேட்டான்.

தனஞ்ஜெயனிடம் மவுனம் தொடர்ந்தது.

''என்ன பேச மாட்டேங்கிற? இங்க இப்படி நான் குறுக்க நுழைவேன்னு நீ எதிர்பார்க்கலேல்ல? பேசுய்யா, எதாவது பேசு. என்னை மீறி, நீ, அந்த கிருஷ்ணராஜுக்கும், கார்த்திகாவுக்கும் எந்த உதவியையும் செய்ய முடியாது.

''இன்னைக்கு இப்ப நடந்தது, உனக்கொரு பாடம். திரும்பவும் சொல்றேன், இந்த வேலைய விட்டுட்டு ஓடிடு. இல்ல, உனக்கு இன்னைக்கு காயம் தான் பட்டது. அடுத்த முறை உயிரே போகலாம். வரட்டுமா?'' என்று, மிரட்டலாக -பேசி விட்டு, தன் காரில் ஏறி புறப்பட்டான், விவேக்.

விதிர்த்துப் போயிருந்தான், குமார். தலையில் ரத்தம் கசிந்தபடியே இருந்தது. தனஞ்ஜெயனும், தன் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து கட்டு போட்டபடியே, ''என்னடா, ரொம்பவே பயந்துட்டியா?'' என்று, பேசத் துவங்கினான்.

''இது என்னடா கேள்வி. சினிமாவுலதான்டா இப்படி எல்லாம் நடந்து பார்த்திருக்கேன். இப்ப நிஜத்திலும் நடந்துடுடிச்சு. ஆமா, யாருடா இந்த விவேக்?''

''நான் தான் ஆரம்பத்துலயே சொன்னனே... விவேக்குன்னு ஒருத்தன், உனக்கும் போன் பண்ணி உன்னையும் மிரட்டுவான். இல்லேன்னா, உன்னை விலைக்கு வாங்க முயற்சி செய்வான்னு. அந்த வில்லன் தான் இவன்.''

''சரி, இவனுக்கு எப்படி தெரியும்... நாம் இப்படி இந்த வேன்ல சிலையோட வர்றது?''

''என்னை கண்காணிக்கவே பல பேரை வெச்சிருக்கான். போலீசோட, 'சைபர் கிரைம்'லயும் இவனுக்கு ஆட்கள் இருக்காங்க. என் மொபைல்போனை வெச்சே, நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிச்சு சொல்லிடுவாங்க.

''காலையில நாம கீழனுார் வந்து போனதுமே, தகவல் போயிருக்கும். இரவு புறப்படவும், அந்த தகவலும் போயிருக்கும். அதான் கச்சிதமா வந்து, டயரைச் சுட்டு, வேனை நிறுத்தி, சிலையையும் துாக்கிட்டு போயிட்டான்.''

''அப்ப இந்த சிலையை திருடினது உன்னோட பாஸ் கிருஷ்ணராஜா?''

''அவர் மட்டுமில்ல, இந்த விவேக்கோட அப்பனான தாமோதரன்கிறவனும் தான்.''

''இப்ப புரியுது... திருடின கிருஷ்ணராஜ் திருந்தப் பார்க்கிறார். ஆனா, இவன் விடமாட்டேங்கிறான்.''

''சரியா சொன்ன, அதே தான்.''

''போகட்டும். சிலையை துாக்கிட்டு போயிட்டானே, இப்ப என்ன பண்ணப் போறோம்?''

''வேடிக்கை பார். அவன் கிரிமினல்னா, நான் சூப்பர் கிரிமினல்.''

''இதுல வேடிக்கை பார்க்க என்ன இருக்கு... நாம வந்த வேனும் விபத்தாகி, இப்ப நடு ரோட்ல நின்னுட்டு இருக்கோம். இந்த இருட்டுல, எதை வேடிக்கை பார்க்கச் சொல்ற?''

குமார் கேட்ட அடுத்த நொடியே, அவர்கள் மேல், காரின், 'ஹெட்லைட்' வெளிச்சம் பட்டது. அந்த காரும், அருகில் வந்து தேங்கி நின்றது. உள்ளிருந்து இறங்கி வந்தாள், கார்த்திகா.

அவளைப் பார்த்ததும், ''வாங்க மேடம்... சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க,'' என்றான், தனா.

''ஓ... வேன், 'ஆக்சிடென்ட்' ஆயிடுச்சா. அதான் இங்கே நிக்கறீங்களா?''

''இந்த, 'ஆக்சிடென்டை' பண்ணினது அந்த விவேக். நான் நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்துச்சு. அவனும், வேன்ல நாங்க கொண்டு வந்த அந்த சிலையை, துாக்கிட்டு போயிட்டான். போகும்போது வழக்கம்போல, மிரட்டிட்டும் போயிட்டான்.''

''உங்க, 'கால்குலேஷனை' நானும் இப்ப பாராட்டுறேன், தனா. நாம இப்ப கீழனுார் போய் வந்த வேலையை நல்லபடியா முடிக்கலாம் தானே?''

''ஷ்யூர்... இந்த வேன் இப்படியே இருக்கட்டும். நாங்களும் இப்ப உங்க கூடவே வரோம். போகலாமா?'' என, தனா கேட்க, காரில் ஏறி அமர்ந்து, 'ஸ்டார்ட்' செய்தாள், கார்த்திகா.

திருதிருவென்று விழித்தபடியே அவனுடன் காரின் பின்னால் ஏறி அமர்ந்தான், குமார்.

அங்கிருந்து புறப்பட்டது, கார்.

''தனா, சிலையை தான் அவன் துாக்கிட்டு போயிட்டானே. நாம் அப்புறம் எதுக்கு கீழனுார் போறோம்?'' என்று கேட்டான், குமார்.

''சொல்றேன், நீ கொஞ்சம் அமைதியா இரு. மேடம், கார்ல, 'பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்' இருக்கா?''

''அந்த, 'டேஷ் போர்டை' திறந்து பாருங்க. ஒரு பெட்டி இருக்கும்,'' என்று கார்த்திகா சொல்லவும், காரின் முன்புற, 'டேஷ் போர்டை' திறந்தான்.

உள்ளே இருந்த முதலுதவிப் பெட்டி, சிகப்பு நிற கூட்டல் குறியோடு கண்ணில்பட்டது. அதை எடுத்து, அப்படியே அருகில் அமர்ந்திருந்த, குமாரின் தலை காயத்துக்கு மருந்து போடத் துவங்கினான், தனா.

''தனா... என் கேள்விக்கு பதில் சொல்லாம, கீழனுாருக்கு போனா என்னடா பிரயோஜனம்?''

''வார்த்தையால சொல்றதை விட செயல்ல காட்றது பெட்டர் இல்லையா?''

''செயல்லயா... அப்படி எதை காட்டப் போற? புரியல எனக்கு...''

''அமைதியா வா, போகப் போக புரியும்.''

குமாரின் வாயை அடைத்தபோது, கீழனுார் வந்து விட்டது. அதன் பின், அவன் வழிகாட்ட, கோவிலுக்கு பின்னால் உள்ள பாம்பு புற்று இருக்கும் இடத்தை அடைந்து நின்றது, கார். மூவரும் காரை விட்டு இறங்கினர். கார், 'ஹெட்லைட்' வெளிச்சம், பாம்பு புற்று மேல் அணையாமல் பட்டதில், புற்று பளிச்சென்று தெரிந்தது.

காரின், 'டிக்கி'யை திறந்தாள், கார்த்திகா. பின்னால், ஒரு சாக்கு மூட்டை.

சாக்கு மூட்டையை சிரமப்பட்டு வெளியே எடுத்து, புற்று அருகே கொண்டு வந்து வைத்து, அதை அவிழ்த்தான், தனா.

உள்ளே, அழகான அந்த நடராஜர் சிலை.

குமாருக்கு குப்பென்று வியர்த்தே விட்டது.

''தனா... இது என்ன, இன்னொரு சிலை?''

''இன்னொரு சிலை இல்ல. இது தான் திருடப்பட்ட ஒரிஜினல்.''

''அப்ப அந்த வேனிலிருந்து விவேக் துாக்கிப் போனது?''

''பிளாஸ்டர் ஆப் பாரிஸ்ல செய்த, பொம்மை சிலை!''

''ஓ... அவன் குறுக்க வந்து தடுப்பான்னு யூகிச்சு, அவனை அவன் போக்குல போய் ஏமாத்திட்டியா?''

''வேற வழி... ஆடற மாட்டை ஆடித்தானே கறக்கணும்?''

''அவனுக்கு உண்மை தெரிஞ்சா?''

''அது எப்படி தெரியாம போகும்? ஆனா, எந்த பிரயோஜனமும் இல்லை. நீ, இப்ப உன் மாமாவுக்கு போன் பண்ணு. அவர் வந்து, சிலையை பார்த்துட்டா போதும். நாம யார் கண்ணுலயும் படாம, 'எஸ்கேப்' ஆயிடுவோம்.

''போகும்போதே எல்லா, 'டிவி' சேனல்களுக்கும் தகவல் தந்துடுவோம். பொழுது விடியும்போது, ஊரே, இதோ இந்த இடத்துல தான் இருக்கணும். எல்லாரும் பார்த்துட்டா, 'டிவி'காராங்களும் வந்துட்டா, அப்புறம் ஒரு பிரச்னையும் இல்லை,'' தெம்பாக பேசினான், தனா.

மாமா சதாசிவத்துக்கு போன் செய்தான், குமார்.

''மாமா... பாம்பு புற்றுகிட்ட, காணாம போன நம்ம நடராஜர் சிலை கிடக்குதாமே? எனக்கு இப்ப, யாரோ போன் பண்ணி சொன்னாங்க. 'பப்ளிக் பூத்'லிருந்து பேசினதால நம்பர் தெரியல. நீங்க போய் பாருங்க, மாமா,'' என்று பேசிவிட்டு, 'கட்' செய்தான், குமார்.

அடுத்த பத்தாவது நிமிடம், தன் மொபட்டில், கோவில் குருக்களுடன் புற்றருகே வந்தார், சதாசிவம். கம்பீரமாக நின்றபடி இருந்த நடராஜர் சிலையை பார்க்கவும், அப்படியே இருவரும், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். கச்சிதமாக புற்றுக்குள்ளிருந்து பாம்பும் வெளியே வந்து, சிலை மேல் ஏறி, தலைக்கு மேல் படம் விரித்து, அமர்ந்து கொண்டது.

அவர்கள் வரப்போவது தெரிந்து, ஒளிந்திருந்து பார்த்த, கார்த்திகா, தனஞ்ஜெயன், குமார் ஆகிய மூவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

செய்தி வேகமாக பரவி, ஊரே திரளத் துவங்கவும், காரை கிளப்பி புறப்பட்டாள், கார்த்திகா. காருக்குள் தனஞ்ஜெயனும், குமாரும் நெகிழ்வோடு அமர்ந்திருந்தனர்.

''தனா... 'தேங்க்யூ சோ மச்!' ஒரு பெரிய காரியத்தை நாம நல்லபடியா சாதிச்சுட்டோம். இனிமே, அந்த விவேக்கால ஒண்ணுமே பண்ண முடியாது.''

''ஆமாம் மேடம், அவனை நல்லாவே திசை திருப்பிட்டோம். இருந்தாலும், பயங்கரமா,'ரீ - ஆக்ட்' பண்ணுவான்.''

''அப்படி பண்ணினா, எப்படி சமாளிப்பீங்க?''

''இப்ப எப்படி சமாளிச்சோம், அப்படியே தான். அதை, நாம இப்பவே நினைச்சு கவலைப்பட வேண்டாம் மேடம்,'' என்று, தனா சொல்லும்போதே, அவன் மொபைல் போனில் அழைப்பொலி. அழைத்தது, விவேக் தான்.

''டேய் தனா... போலி சிலையைக் கொடுத்து, என்னை திசை திருப்பிட்டியா? உன்னை சும்மாவே விட மாட்டேன்டா.''

''அது, எனக்கும் தெரியும், விவேக். நானும் ரெடியா தான் இருக்கேன்.''

''ஓ... உனக்குள்ள அவ்வளவு தைரியமா?''

''எனக்கு, லட்சத்துல சம்பளங்கிறதே அதுக்குதானே?''

''உன் தைரியத்துக்கு நான் வைக்கப் போறேன் ஆப்பு. அப்ப தெரியும் நான் யாருன்னு...'' குமுறி முடித்தான், விவேக்.

கார்த்திகாவுக்கு, வயிற்றில் அமிலம் சுரக்கத் துவங்கியது.

- தொடரும்

- இந்திரா சவுந்தர்ராஜன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us