Dinamalar-Logo
Dinamalar Logo


கருணை!

கருணை!

கருணை!

PUBLISHED ON : பிப் 18, 2024


Google News
Latest Tamil News
பெரிய ஞானி ஒருவர் இருந்தார். அவருக்கு கோபமே வராது. அந்த நிலையெல்லாம் அவர் கடந்து விட்டதாக, அனைவரும் கூறினர்.

இதைப் பார்த்த ஒருவனுக்கு, 'அது எப்படி, ஒருத்தருக்கு கோபம் வராமல் இருக்க முடியும்?' என, சந்தேகம் எழுந்தது.

'எப்படியாவது இவருக்கு கோபத்தை உண்டாக்கிப் பார்க்க வேண்டும்...' என, ஆசைப்பட்டான்.

உடனே, அவரிடம் போய், வாய்க்கு வந்தபடி கன்னாபின்னா என, திட்டினான்.

அவருக்கு கோபம் வரவில்லை. அதுமட்டுமில்ல, அவர் முகத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

ஆச்சரியம் அடைந்த அவன், 'ஏங்க, நான் இவ்வளவு துாரம் உங்களை கண்டபடி திட்டியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட கோபமே வரலையே... உங்களால எப்படி இந்த அளவுக்கு பொறுமையாக இருக்க முடியுது?' என, கேட்டான்.

புன்னகைத்த அந்த ஞானி, 'உன்கிட்டே காசு இருக்குதா?' என, கேட்டார்.

இவனுக்கு இன்னும் ஆச்சரியம்.

'இவருக்கு கோபம் தான் வரவில்லையே தவிர, காசு மீதான ஆசை இருக்கும் போல் உள்ளது. சே... இவ்வளவுதானா?' என, நினைத்தபடி, ஒரு பவுன் காசை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

அதை வாங்கியவர், மறுபடியும் அவனிடமே திருப்பிக் கொடுத்தார்.

'ஏன், இது போதாதா... இன்னமும் வேணுமா?' என, கேட்டான்.

'இதோ பாருப்பா... இந்த பவுன் காசு, உனக்கு முக்கியமாக தெரியலாம். இதனால், எனக்கு ஒண்ணும் பிரயோஜனமில்ல. அதனால், அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. உன்னிடமே திருப்பி கொடுத்துட்டேன்.

'அதே மாதிரி, இவ்வளவு நேரமாக நீ திட்டின வார்த்தைகள் எதுவுமே, எனக்குப் பொருந்தாது. ரொம்ப சிரமப்பட்டு அந்த வார்த்தைகளை எல்லாம், நீ சேகரம் பண்ணி வச்சிருக்கே. அது வீணாக போகாது. அதனால், அதையெல்லாம் நீயே வச்சுக்க...' எனச் சொல்லி, சிரித்தபடியே போய் விட்டார்.

பெரியவர்களால் தான், இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியும். அந்த நிலைமைக்கு போய் சேர முடியவில்லை என்றாலும், கொஞ்சம் முயற்சியாவது செய்யலாமே... அதற்காகத்தான் அப்படிப்பட்டவர்களை அடிக்கடி நினைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கின்றனர்.     

பி. என். பி.,

அறிவோம் ஆன்மிகம்!

திங்கள் கிழமை அமாவாசை வந்தால், அன்று அரச மரத்தை பிரதட்சணம் செய்ய வேண்டும். பிரம்ம, விஷ்ணு, ருத்ர ரூபியான அரச மரத்தை வலம் வருவது, சிறப்பு பலனை தரும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us