Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - வீரம்!

கவிதைச்சோலை - வீரம்!

கவிதைச்சோலை - வீரம்!

கவிதைச்சோலை - வீரம்!

PUBLISHED ON : பிப் 04, 2024


Google News
Latest Tamil News
ஜல்லிக்கட்டு காளையை

அடக்குவது மட்டுமல்ல...

அடங்க மறுக்கும்

மனதை அடக்குவதும்

வீரம் தான்!

இளவட்டக் கல்லை

தோளுக்கு மேல் சுழற்றி

வீசுவது மட்டுமல்ல...

இலகுவான வார்த்தைகளை

இதமாக பேசுவதும்

வீரம் தான்!

குத்துச் சண்டையில்

எதிராளியை குத்து விட்டு

வீழ்த்துவது மட்டுமல்ல...

குடும்பச் சண்டையில்

பங்காளியை மன்னித்து

வாழ்த்துவதும்

ஒரு வகை வீரம் தான்!

பிரச்னைகள்

பாம்பைப் போல்

படமெடுத்து ஆடும்போது

பொறுமை எனும்

மகுடியால் அடக்குவதும்

வீரம் தான்!

கோபம்

எரிமலை போல்

குமுறும்போது

வெடித்துச் சிதறாமல்

அமைதி காப்பதும்

வீரம் தான்!

ஆத்திரம்

ஆற்று வெள்ளம் போல்

அடங்காமல் வரும்போது

அணை கட்டி தடுப்பதும்

வீரம் தான்!

லஞ்சம் வாங்க

மன விரல்கள் நீளும்போது

கையை தடுத்து

கையூட்டு வாங்காமல்

கடமையை செய்வதும்

வீரம் தான்!

சிகரத்தில் ஏறி

கொடி நாட்டுவது மட்டுமல்ல

வீட்டுக்கொரு

மரம் நட்டு வளர்ப்பதும்

மனிதனுக்கு

வீரம் தான்!

தன் பலத்தை

வெளிச்சம் போட்டு

காட்டுவதல்ல...

மனித நேயமுள்ள

மனிதனாய் - தன்னை

காத்துக் கொள்வதும்

வீரம் தான்!

— என். ஆசைத்தம்பி, சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us