PUBLISHED ON : ஜன 28, 2024

எப்போது கிழக்கில் கீற்று தெரியும் என்று காத்திருந்தாள், பவானி.
சில் வண்டுகள் சத்தம் குறைந்து, நடுச்சாம நாய்களின் ஆரவாரம் அடங்கி, நள்ளிரவுக்குள் ஊர் புகுந்தபோது தான், கொஞ்சம் துாக்கம் வந்தது. ஒரே மணி நேரத்தில் விழிப்பும் வந்து விட்டது. ஆனால், வெளியில் கடும் இருட்டு. இந்நேரத்தில் எழுந்து போய் பல் துலக்கி, கன்றுக்குட்டிக்கு புல் வைக்கப் போனால் முணுமுணுப்பான், செந்தில்.
'என்னம்மா இது, இன்னும் விடியல. நானே துாக்கம் இல்லாம புரண்டுட்டு, இப்பதான் கொஞ்சம் அசந்தேன். இப்புடி எழுப்பி வுடறியே... போம்மா...' என, சோர்ந்த குரலில் அவன் சொல்வதைக் கேட்டால், அவளுக்கு உடனே நெஞ்சு கரைந்து விடும்.
பாவம், மகன்.
ஆர்வமாகத்தான் ஐ.டி.ஐ., படித்தான். அறிவாளி தான். எந்த இரண்டு சக்கர வாகனமானாலும் பிரித்து மேய்ந்து விடுவான். இரண்டு ஆண்டுகள், ஹோண்டா கம்பெனியில் சேர்ந்து, வேலை கற்றுக் கொண்டான். சொந்தமாக, 'ஒர்க் ஷாப்' வைக்க ஆசை.
ஏழு ஆண்டுகளாக அதற்காகத்தான் நடையாய் நடக்கிறான். ஒரு பலனும் இல்லை.
நகர்ப்புற வங்கி, கிராமத்து வங்கி, பிசினஸ் லோன், சிறு தொழில் கடன் என, எவ்வளவோ முயற்சிகள் செய்து விட்டான். வட்டி விகிதம் அதிகம் கேட்கின்றனர். வரி கட்டிய மூன்று ஆண்டு ஆவணம் கேட்கின்றனர். ஏதோ ஒரு சொத்து அடமானம் கேட்கின்றனர்.
எங்கே போவான் குழந்தை... அவள் தான் எங்கே போவாள்? புருஷன்காரன் போய் சேர்ந்த, 20 ஆண்டுகளில், பெற்ற பிள்ளையை பட்டினி போடாமல், பள்ளிக்கு அனுப்புவதே பெரிய சவாலாக இருந்தது.
தனி ஆளாக காடு, கரை என்று சுற்றி, மில்லில் முதுகு ஒடிய அரிசி மூட்டை சுமந்து, மானத்துடன் வாழ்வதே பெரிய சாகசமாக இருந்தது.
இருக்கும் இந்த குச்சி வீடு, மாமியார் காலத்து இடம். அதுவும் மானாவாரி பூமி. ஏதோ கையகல வீடு. பட்டா சிட்டா என்று பழைய கந்தல் காகிதம் ஒன்று, எரவானில் இருக்கிறது. அதைக் கொண்டு போய் காட்டினால், கேலியாக சிரிக்கின்றனர்.
'முதலில், வீட்டை உன் பேருக்கோ, மகன் பேருக்கோ மாத்திக்கிட்டு வாம்மா. பிறகு பார்க்கலாம்...' என்று, கண்டிப்பாக சொல்லி விடுவர்.
கிழக்கில் பளீரென விடியல் வந்து விட்டது.
இது முக்கியமான நாள்.
ஏதோ மத்திய அரசின் சுயதொழில் பிரிவுத் துறையாம். கிராமங்களில் வங்கிகள் திறந்து, 30 வயதுக்குக் கீழே இருக்கிற டெக்னிக்கல் படித்த இளைஞர்களுக்கு, கடன் தரப் போகின்றனராம். மூன்று மாதமாய் செயல்படுகிறது, புது வங்கி. ஊரில், மூன்று, நான்கு பேர், கடன் வாங்கி, வேலை செய்யத் துவங்கி விட்டனர்.
செந்திலும் மிக ஆர்வமாக போய், மனு எல்லாம் கொடுத்தான். அவர்கள் கேட்ட ஆவணங்கள் எல்லாம் கொண்டு கொடுத்தான். ஏதோ ப்ளூ பிரின்ட்டாம். புது தொழில் துவங்குவதற்கான திட்டமாம்.
மதுரைக்குப் போய், ஏதோ ஒரு இன்ஜினியரிங் அலுவலகம் மூலம் அதை செய்து கொண்டு வந்து ஒப்படைத்தான். ஆனாலும், இதோ அதோ என்று இழுத்தடிக்கின்றனர்.
எப்படியும் ஒருநாள், கடன் தொகை வந்து விடும். அதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. மலையனுார் மாரியம்மா கை விட மாட்டாள். குல தெய்வம் சங்கிலியப்பனும், கை கொடுப்பான்.
கவலை எல்லாம் செந்தில் பற்றியது தான்.
அவன் பழையபடி இல்லை. துவண்டு விட்டான். ஏழு ஆண்டு அலைச்சலும், தோல்விகளும் அவனை குப்புறத் தள்ளி விட்டன. வயது ஏறிக் கொண்டிருக்கும் கவலை அரித்துக் கொண்டிருந்தது. காணும் கனவுக்கு, தான் தகுதியானவன் இல்லையோ என்ற மன அழுத்தம், அவனைக் குடைந்து கொண்டிருந்தது.
அதுதான் அவளை பாடாய் படுத்தியது.
ராஜா மாதிரி கம்பீரமாக இருப்பான், செந்தில்.
'அம்மா, இந்த நிலைமை மாறும். நான் மாத்துவேன். என் பட்டறை மெல்ல வளர்ந்து பெரிதாகும். நாலு பேரை வேலைக்கு வைத்து, அருமையாகப் பார்ப்பேன். நீ பெருமைப்படுகிற அளவுக்கு வருவேன் அம்மா...' என்று, சிரித்தபடியே சொல்வான்.
அப்படியே கண்கள் தாரையாகப்பொழியும் அவளுக்கு. நம் வயிற்றில் இப்படி ஒரு முத்து வந்து பிறந்ததே என்று, நெகிழும்.
யார் கண்பட்டதோ, எந்த சொல் சுட்டதோ... இப்படி ஈரத்துணியாய் துவண்டு கிடக்கிறான். இன்று எப்படியும் கடன் தொகை வழங்கப்பட்டு விடும் என்று வங்கியில் சொல்லி அனுப்பி இருக்கின்றனர். ஆனால், துள்ளி எழ வேண்டியவன், இப்படி மோட்டு வளையை பார்த்துக் கொண்டு கிடக்கிறான்.
''தம்பி, எந்திரிப்பா... 10:00 மணிக்கெல்லாம் வரச் சொன்னாங்கல்ல, அதுக்குள்ள டிபன், காபி சாப்பிட்டு ரெடி ஆயிடுப்பா,'' என்று எழுப்பினாள்.
முனகலாக, ''ம்... மெதுவா போய்க்கலாம்மா. அவசரம் இல்ல,'' என்றான்.
''ஏம்பா அப்படி சொல்ற? நீ, இத்தினி வருஷமா பட்ட பாட்டுக்கெல்லாம் பலன் கிடைக்கப் போகுது ராசா... சந்தோஷமா போய் வா,'' என்றாள்.
''நீ வேற, எனக்கு வெறுத்துப் போச்சும்மா... எவ்வளவோ ஆர்வமா, எத்தினி வங்கி ஏறி இறங்கியிருப்பேன்... எவ்வளவு சொசைட்டிங்க படியில நின்னிருப்பேன்... 'இல்லை இல்லை இல்லை' என்ற பதில் தான், நான் கேட்டதெல்லாம். உனக்கு தெரியாதா என்ன?''
வாசலில் பக்கத்து வீட்டு வள்ளி அக்கா அழைப்பது கேட்க, போய் பார்த்து விட்டு வந்தாள், பவானி.
''தம்பி... இங்க சோலமலை மண்டபத்துல, குறி சொல்லுற சாமியாடி வந்திருக்காராம். அவரு இமயமலைல தான் எப்பவும் இருப்பாராம். இப்ப நம்மூருக்கு வந்திருக்கார். வள்ளி அக்கா போகலாம்ன்னு ஆர்வமா கூப்பிடுது. நான் போய் பாத்துட்டு வரேன். நீ குளிச்சு ரெடியா இரு,'' என்றாள், பவானி.
''சரிம்மா, சீக்கிரம் வா!''
விரைந்தாள், பவானி.
கண்ணாடி முன் நின்றான், செந்தில். சீப்பை எடுத்து தலை வாரவே மனம் வரவில்லை. ஒரே பாரமாக நெஞ்சு வலித்தது. இதே போல எத்தனை இடங்களுக்கு ஓடி ஓடி போயிருக்கிறான்?
மலையையே புரட்டி விடும் அளவுக்கு உற்சாகம் இருந்ததே. நிலவைப் பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை இருந்ததே. இன்று எல்லாம் எங்கே, ஏன் போயின? யாரோ வேண்டுமென்றே முதுகில் குத்தியது போல, இத்தனை சம்பவங்கள் ஏன் தோல்வியைத் தந்தன?
கதவை வேகமாகத் திறந்து ஓடி வந்தாள், பவானி.
''கண்ணு, எங்கே மொகத்த காட்டு. திருநீரு பூசி விடறேன். இனிமே ஒரு கவலையும் இல்ல கண்ணு... ஒன்னைய பிடிச்ச சனி, இந்த வாரத்தோட போயிடுதாம். எல்லாம் இனி நல்ல காலம் தானாம்,'' என்று நெகிழ்ந்து, கண்ணீர் விட்டாள்.
''என்னம்மா சொல்ற... நீ பேசறதெல்லாம் புதுசா இருக்கு. சனி அது இதுன்னு...''
''ஆமா ராசா... சாமியாடி சாமியார்கிட்ட உன்னைய பத்தி சொன்னேன். தம்பி நல்ல படிப்பாளி, திறமைசாலி இன்னும் சரியான கதவு திறக்கலேன்னு அழுதேன். அவரு, உன் பிறந்த தேதி, ஊரு, பேரு எல்லாம் கேட்டாரு. சொன்னேன்.
''கண் மூடி அஞ்சு நிமிஷம் ஏதோ கணக்கு போட்டுட்டு, 'உனக்கு ஏழரை நாட்டு சனி பிடிச்சுருக்காம். இதோ இந்த வாரத்தோட முடியுதாம். போகிறப்போ நல்லது செஞ்சுட்டு போகுமாம். கவலைப்படாதேன்'னு சொன்னாரு.
''எனக்கு சிலிர்த்துப் போச்சு. தம்பி, காரணம் புரிஞ்சுதா... அந்த சனி உன்னை பிடிச்சிருந்ததால தான், தொட்டதெல்லாம் விளங்காம போயிருக்கு. இப்ப அது விலகிப் போயிடுச்சு. ஏழரை நாட்டு சனி. பாரு இன்னிக்கு உனக்கு தொகை கிடைக்கப் போகுது. இனி உனக்கு எல்லாம் வெற்றி தான்,'' என்றாள், பவானி.
முதலில் திகைத்தான். பிறகு சிரித்தான், செந்தில்.
தலையை வாரி, உற்சாகமாகக் கிளம்பினான்.
''பட்டறைக்கு புது பேர் வைக்கப் போறேம்மா. பவானி அம்மன் பட்டறை, உன் பேர் தான். வரேம்மா,'' என்றவன் குரலில், மான்கள் துள்ளின.
''என்ன பவானி... என்னென்னவோ சொல்லிட்ட, நாம பாத்தவரு வெறும் சாமியார் தானே... குறி சொல்லுகிறவரோ, ஜாதகம் பார்க்கிறவரோ இல்லையே... இத்தினி வருஷத்துல நீ, காடு, கரைன்னு போயி மல்லுக்கட்டுவே. நாளு கிழமைன்னா, மாரியாத்தாளுக்கு பொங்கல் படையல் வைப்ப. அவ்வளவுதானே?'' என்றாள், வள்ளி அக்கா.
''ஆமாக்கா... மகன் இப்படி தொவண்டு கெடக்கானேன்னு, மனசுல ஒரே கவலையா இருந்துச்சு. நாட்டுப்புறக் கதையில கேட்டிருக்கோம்ல, மனுஷன் எதை இழந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாதுன்னு...
''அதை மகனுக்கு மீட்டுக் கொடுக்க, இந்த சனிப்பெயர்ச்சியை பயன்படுத்திக்கிட்டேன், அக்கா. அவன் முழுமையா நம்பறானோ இல்லையோ, ஏதோ ஒரு ஆறுதல் கிடைச்சிருக்கும்; சமாதானம் ஆகியிருக்கும்.
''மனசுதானே அக்கா எல்லாம்? இப்ப அது வலிமையாகி அவனை உற்சாகமா வேலை பார்க்க வைக்கும் அக்கா,'' என்றாள், பவானி.
வியப்புடன் சிரித்தாள், வள்ளியம்மா.
வி. உஷா