Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : ஜன 14, 2024


Google News
Latest Tamil News
பா - கே

அன்று காலை, 11:00 மணி ஆகியும், அலுவலகத்துக்கு வரவில்லை, லென்ஸ் மாமா.

'மாமாவுக்கு என்னாச்சு...' என்று நினைத்தபடி, அவருக்கு போன் செய்தேன். மாமி தான் எடுத்தார். அவரிடம் விசாரிக்க, 'வயிறு சரியில்லைன்னு படுத்துட்டு இருக்கார். டாக்டரிடம் போகலாம் என்றால், வர மறுக்கிறார். மணி... நீ சாயந்திரம் வந்து, டாக்டரிடம் கூட்டிட்டு போறியா?' என்றார்.

'சரி மாமி... நொய் கஞ்சியும், நாரத்தங்காய் ஊறுகாய் அல்லது இஞ்சி துவையல் செய்து சாப்பிட கொடுங்க. சாப்பிட்டு, 'ரெஸ்ட்' எடுக்கட்டும். நான் சாயந்திரம் வருகிறேன்...' என்று கூறி, போனை, 'கட்' செய்தேன்.

மாலை, சற்று முன்னதாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பி, லென்ஸ் மாமா வீட்டுக்கு சென்றேன். சோர்வாக படுத்திருந்தவரிடம், 'மாமா... என்ன ஆச்சு?' என்றேன்.

'என்னமோ தெரியல... பசியில்லை, வயிறு மந்தமா இருக்கு. புளிச்ச ஏப்பமா வருது...' என்றார், மாமா.

'நேற்று என்ன சாப்பிட்டீர்?' என்று நான் கேட்டு முடிப்பதற்குள், இடையில் புகுந்து, 'அதை ஏன் கேட்கற மணி... நேற்று யாரோ ஒரு பழைய பிரண்டை பார்க்க போவதாக சொல்லிட்டு, ஹோட்டலுக்கு போயிருக்கிறார். மூச்சு முட்ட சரக்கடிச்சுட்டு, கண்டதையும் தின்னுட்டு வந்திருக்கிறார். இதோ காலையில், அதன் வேலையை காட்டி விட்டது...' என்று அலுத்துக் கொண்டார், மாமி.

'வாங்க மாமா, டாக்டரிடம் போய் வருவோம்...' என்று கூறி, கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றேன்.

மாமாவை சோதித்துக் கொண்டிருந்த டாக்டரிடம், 'டாக்டர்கிட்ட போகாம, வாழறதுக்கு வழி ஏதாவது இருந்தா சொல்லுங்க...' என்று கேட்டார், மாமா.

'உமக்கு ரொம்ப தான், லொள்ளு...' என்ற டாக்டர், சுலபமான ஒரு வழியைச் சொன்னார்.

'பசி எடுத்ததுக்கு அப்புறம் கையை வாய்கிட்ட கொண்டு போகணும். பசி அடங்கறதுக்கு முன்னாடியே கையை வாயை விட்டு எடுத்துடணும். இப்படி செய்யறவன் நோய் வாய்ப்பட மாட்டான்...' என்றார், டாக்டர்.

'இதுக்கு என்ன அர்த்தம்?' என்றேன்.

'பசி எடுப்பதற்கு முன் சாப்பிடக் கூடாது. பசி முழுசா அடங்கற வரைக்கும் வயிறு முட்ட சாப்பிட்டுக்கிட்டு இருக்கக் கூடாது. பசி எடுத்து, அதுக்கப்புறம் அளவா சாப்பிடறவனுக்கு நோய் நொடி வர்றதில்ல.

'செரிமானக்கோளாறு இல்லாம பார்த்துக்கணும். இப்படிப் பார்த்துக்கிட்டாலே பலவிதமான நோய்களிலிருந்து நாம தப்பிச்சுடலாம்...' என்றார்.

'அஜீரணம் ஏன் வருது?' என்றேன்.

'உடம்புல மட்டுமல்ல, மனசுல கோளாறு இருந்தாலும் வரும். காலம் தவறி சாப்பிடறது. காரம், புளிப்பு, அதிகமா இருக்கிற ஆகாரங்களைச் சாப்பிடறது. வெறும் வயித்துல மது அருந்துவது, இதனால் எல்லாம் அஜீரணம் ஏற்படும்.

'அதே மாதிரி, அளவுக்கு மீறின சோகம், வருத்தம், மன உளைச்சல் இதனாலயும் அஜீரணம் ஏற்படும்.

'சில சமயம் வேற வேற நோய்களுக்காக சாப்பிடற மருந்து மாத்திரை கூட, வயிற்றுக் கோளாறை உண்டாக்கிடும். அடிக்கடி காபி, டீ சாப்பிடறது, புகைப்பிடிக்கிறது இதெல்லாம் அஜீரணத்தை இன்னும் அதிகமாக்கிடும். சரியா துாங்கலேன்னாலும், உடற்பயிற்சி செய்யலேன்னாலும், இந்தக் கோளாறு வரும்.

'ஆக, அஜீரணம் ஏற்பட பல காரணங்கள் உண்டு. அதனால, காரணத்தைக் கண்டுபிடிச்சு அதை சரி பண்ணனும்...'

'இதெல்லாம் இருக்கட்டும், செரிமானக் கோளாறு வராம இருக்கறதுக்கு நாம் எப்படி நடந்துக்கணும்?' என்றார், மாமா.

'இதுக்கு சுலபமா ஒரு நாலஞ்சு வழிகள் இருக்கு. அதாவது, மூன்று வேளையும், குறிப்பிட்ட நேரத்துல ஒழுங்கா சாப்பிட்டுடணும். சாப்பாட்டுக்குப் பிறகு குறைஞ்சது, 15 நிமிஷமாவது ஓய்வு எடுக்கணும்.

'சாப்பிடறப்போ அவசரமோ, பதட்டமோ கூடாது. நிதானமா சாப்பிடணும். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, நம் மனசு மகிழ்ச்சியா, அமைதியா இருக்கணும்.

'எண்ணெயில் பொறிச்சது, வறுத்தது மாதிரியான ஆகாரங்களை கூடுமான வரைக்கும் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு, வயிற்றுல அமிலத்தன்மை அதிகமா இருக்கும். வயிற்றுப் புண்ணுக்கான அறிகுறி இருக்கும்.

'இப்படிப் பட்டவங்கள்லாம் வயிறை காலியா இருக்க விடக்கூடாது. இப்படி சில வழிகளைக் கடைப்பிடிச்சாலே போதும். வயிறு உங்களுக்குத் தொந்தரவு கொடுக்காது...' என்று கூறிய டாக்டர், சில மாத்திரைகளை கொடுத்து, 'இதை சாப்பிட்டு, ரசம் சாதம் மட்டும் சாப்பிடுங்க. நாளை சரியாகிடும்...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.

மாமாவை வீட்டுக்கு அழைத்து வந்து, மாமியிடம், ரசம் சாதம் மட்டும் கொடுக்க சொல்லி, 'மாத்திரை சாப்பிட்டு படுங்க மாமா. நாளைக்கு வந்து பார்க்கிறேன்...' என்று கூறி, விடைபெற்றேன்.



ஒரு பெரிய மனிதருக்கு, திடீர் நெஞ்சுவலி. அவரை அறைக்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு, டாக்டருக்கு போன் செய்தனர்.

கொஞ்ச நேரத்தில் வந்தார், டாக்டர். அவர் கையில் ஒரு பெரிய மருத்துவப் பெட்டி.

'நோயாளி எங்கே?'

'அதோ அந்த அறையில் படுக்க வைத்திருக்கிறோம், டாக்டர்...'

'சரி... நான் அங்கே போறேன். வேற யாரும் உள்ளே வரக்கூடாது. கொஞ்சம் ஒத்துழையுங்க, அப்பதான் சரியான முறையில் சிகிச்சை கொடுக்க முடியும்...'

'சரிங்க டாக்டர்...'

அவசரமாக அந்த அறைக்குள் சென்று, கதவை மூடிக்கொண்டார், டாக்டர்.

உறவினர்கள் கவலையுடன் அமர்ந்திருந்தனர்.

கொஞ்ச நேரத்தில், அவசரமாக கதவு திறக்கப்படும் சத்தம். எல்லாரும் நிமிர்ந்து பார்த்தனர்.

எட்டிப் பார்த்தார், டாக்டர். அவர் முகத்தில் வியர்வை அரும்புகள்.

'ஒரு ஆணி இருந்தா கொடுங்களேன்...'

ஒருவர் எழுந்து ஓடிப் போய், இரண்டு அங்குல ஆணி ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிய டாக்டர், கதவை மூடிக் கொண்டார்.

உள்ளே ஏதோ கடாமுடா சத்தம்.

இதற்குள் மறுபடி கதவு திறக்கப்பட்டது. டாக்டரின் முகம் தெரிந்தது. முன்பைக் காட்டிலும் அதிக வியர்வை.

'சுத்தியல் இருந்தா கொண்டு வாங்க...'

மறுபடியும் ஒருவர் ஓடி, சுத்தியலை எடுத்து வந்து தந்தார். அவசரமாக அதை வாங்கிக் கொண்டு, மீண்டும் கதவை மூடிக் கொண்டார், டாக்டர்.

உள்ளே ஏதோ உடைபடும் சத்தம்.

சிறிது நேரத்தில், சிரித்தபடியே வெளியே வந்தார், டாக்டர்.

'சக்சஸ்... எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இனிமே ஒண்ணும் கவலை இல்லை...'

'என்ன சொல்றீங்க டாக்டர்?'

'நான் எடுத்துட்டு வந்த மருந்துப் பெட்டியைத் திறந்துட்டேன். இனிமே சிகிச்சையை ஆரம்பிச்சுடலாம்...' என சொல்லி, இந்த முறை கதவை திறந்து வைத்தபடி உள்ளே சென்றார்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us