Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

திண்ணை!

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
ஒருமுறை சட்டசபைக்கு செல்லும் போது, மாடியில் இருந்த அறைக்கு செல்வதற்காக, 'லிப்டில்' ஏறினார், காமராஜர்.

அப்போது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர், கண்ணீருடன், காமராஜரிடம் மனு ஒன்றை நீட்டினார். மனுவை வாங்கிப் பையில் வைத்து விட்டு, அவரிடம் என்னவென்று வினவினார்.

'தொழில் துறையிலிருந்து அரசாணை ஒன்று வந்திருக்கிறது. அதில், '10ம் வகுப்புக்கு குறைவாகப் படித்தவர்கள் 'லிப்ட் ஆபரேட்டர்'ஆக பணிபுரிய அனுமதியில்லை' என்று குறிப்பிட்டிருந்தது...' என்றார், அந்த இளைஞர்.

அவன் வலியறிந்த காமராஜர், சட்டசபையில் நுழைந்ததும், 'ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசாணையை பிறப்பித்தது யார்? 'லிப்டில்' பொத்தானை அழுத்தினால் மேலே போகிறது. பொத்தானை அழுத்தினால் கீழே வருகிறது. இதற்கு எதுக்கு, 10ம் வகுப்பு படிக்க வேண்டும்?

'அவனாவது, எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளான். ஆனால், நான் அதுகூட படிக்கவில்லையே. அப்படியென்றால் எனக்கு 'லிப்ட்' துடைக்கும் வேலை கூட கிடைக்காதே...' என்றார்.

அரசாணை பிறப்பித்தவர் வாயடைத்து நின்றார்.

  

சிவாஜி நடிப்பில் உருவான, வசந்த மாளிகை படத்தில், தான் எழுதிய, 'கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ...' என்ற பாடலை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார், கண்ணதாசன்.

அதை கவனித்த அவரின் மகன், அண்ணாதுரை, 'இந்த பாடலில் அப்படி என்ன விசேஷம்? அடிக்கடி இந்த பாடலைக் கேட்கிறீர்களே...' எனக் கேட்டார்.

'அது என்னைப் பற்றி நானே எழுதிக் கொண்டது. அதனால் தான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக் கிறேன். அதேபோல், அதே படத்தில் இடம் பெற்ற, 'இரண்டு மனம் வேண்டும்... இறைவனிடம் கேட்டேன்...' என்ற பாடலும், என்னைப் பற்றி நானே எழுதிக் கொண்டது...' என, சிரித்தபடி சொன்னார், கண்ணதாசன்.

  

'எல்லாரும் ஆயுதம் எடுத்து சண்டை போடும் போது, கத்தியின்றி ரத்தமின்றி சத்தியத்தின் வழியில், அகிம்சையில் போராட வேண்டுமென எப்படி தோன்றியது, பாபுஜி...' என, காந்திஜியிடம் கேட்டனர்.

அதற்கு, 'லியோ டால்ஸ்டாய் எழுதிய, 'போரும் அமைதியும்' என்ற புத்தகத்தை படித்த பின் தான், எனக்கு அகிம்சை முறையில் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது...' என்றார், காந்திஜி.

லியோ டால்ஸ்டாயிடம், 'உங்களுக்கு, 'போரும் அமைதியும்' என்ற புத்தகத்தை எழுதுவதற்கு துாண்டுகோலாய் இருந்தது எது?' என, கேட்டனர்.

'இந்தியா என, ஒரு நாடு இருக்கிறது. அங்கு தமிழகம் என, மாநிலம் இருக்கிறது. அங்கு, வள்ளுவன் என்ற புலவன் எழுதிய, திருக்குறள் என்ற புத்தகத்தை படித்தேன். அதன்பின் தான், எனக்கு, 'போரும் அமைதியும்' என்ற புத்தகத்தையும், உயிரினத்தை நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அன்பின் பெருமையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது...' என்றார்.

உலகத்திற்கே அன்பையும், அமைதியையும், அகிம்சையையும் கற்றுக் கொடுத்த மாபெரும் இனம், தமிழினம் என்பது புரிகிறதா!

- நடுத்தெரு நாராயணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us