Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நில வரி செலுத்தும் ஒரே கோவில்!

நில வரி செலுத்தும் ஒரே கோவில்!

நில வரி செலுத்தும் ஒரே கோவில்!

நில வரி செலுத்தும் ஒரே கோவில்!

PUBLISHED ON : மார் 16, 2025


Google News
Latest Tamil News
மகாபாரதத்தைப் படித்த ஞாபகம் இருந்தால், பஞ்ச பாண்டவர்கள், கவுரவர்கள் என, இரண்டு பெரும் கதாபாத்திரங்கள் உங்கள் நினைவுக்கு வரும். அந்த காவியத்தில் மிகவும் வெறுக்கப்படும் பாத்திரங்களில் ஒருவராக இருந்தாலும், துரியோதனன், புத்திசாலியான, கனிவான மற்றும் தைரியமான மனிதராகவும் கருதப்பட்டார். இந்தியாவில், துரியோதனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொருவாழி கிராமம், எடக்காடு எனுமிடத்தில் அமைந்திருக்கிறது, இந்த மலைக்கோவில்.

சிறிய படகுகள் தயாரிப்பதில் புகழ்பெற்ற கிராமமான, ஆலும்கடவுவிலிருந்து, 27 கி.மீ., துாரத்தில் உள்ளது, இக்கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும், கெத்துக்காட்சி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

பாண்டவர்கள், வனவாசத்தில் இருந்தபோது அவர்களைத் தேடி, துரியோதனன் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. கேரளாவின் தென்பகுதி காடுகளில் தேடிய போது, இந்த இடத்தை அடைந்தார். மிகவும் தாகமாக இருந்ததால், ஒரு குடிசை வீட்டில், தண்ணீர் கேட்டார், துரியோதனன்.

தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மூதாட்டி, குடிக்க தண்ணீர் இல்லாததால், 'கள்' எனும் போதை தரும் பானத்தை, துரியோதனனுக்கு வழங்கினார்.

மூதாட்டியின் விருந்தோம்பல், அவரை மிகவும் கவர்ந்தது. நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள ஒரு மலையில் அமர்ந்து, அந்த கிராமத்தில் வாழும் மக்கள் நலம் பெற, சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார், துரியோதனன். அதுமட்டுமின்றி, கிராம மக்களுக்கு அவர் கட்டுப்பாட்டில் இருந்த குறுநில மன்னனிடம் சொல்லி, விவசாய நிலத்தையும் கொடுத்தார்.

பின்னர், அவர் தியானம் செய்த அதே இடத்தில், கோவிலை கட்டினர், கிராம மக்கள். கோவில் நிலத்தை, துரியோதனன் பெயரில் பத்திரப்பதிவு செய்தனர். இதனால், கோவில் நிர்வாகம், துரியோதனன் பெயரில் ஒவ்வொரு ஆண்டும், அரசுக்கு சொத்து வரி செலுத்துகிறது.

இது, கிராம மக்களின் அன்பையும், மரியாதையையும் காட்டுகிறது. தனிச்சிறப்பாக, இது நில வரி முறை நிறுவப்பட்டதிலிருந்து தொடரும் வழக்கம். அதே போல், இன்றுவரை கோவிலின் பூசாரிகள், குரவ சமூகத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த கோவிலில் சிலை ஏதும் இல்லை. கோவிலின் உள்ளே சென்றால், பக்தர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யும் மண்டபம் அல்லது அல்தாரா என்று அழைக்கப்படும் உயரமான மேடையைக் காணலாம். பக்தர்கள், கல் மண்டபத்தில் நின்று, பிரார்த்தனை செய்யலாம்.

நாள் முழுவதும் திறந்திருக்கும் இந்த கோவிலுக்கு, அனைத்து ஜாதி, மத பக்தர்களும் வருகின்றனர். கோவிலில் தாந்த்ரீக மரபுகளைப் பின்பற்றுவதில்லை, சமஸ்கிருத மந்திரங்கள் எதுவும் இல்லை.

சிலைகளுக்குப் பதிலாக, துரியோதனனின் விருப்பமான ஆயுதம் மற்றும் அவரது இருப்பை மனதில் நினைத்து வணங்குகின்றனர். இங்கு தனித்துவமான சடங்குகளில் ஒன்று, மதுபானம் காணிக்கையாக வழங்குவது.

கோவிலில் நடைபெறும் முக்கியமான விழா நாட்களில், இந்தப் பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், துரியோதனனையே தங்களது குல தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர்.

வருடாந்திர உற்சவ விழா சிறப்பம்சங்களாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் காளை உருவம், குதிரை உருவம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட வண்டியுடன், வண்ணமயமான கெத்துக்காட்சி ஊர்வலம் நடக்கும். இந்த உருவங்களில் மிகப்பெரியது, 70 முதல் 80 அடி உயரம் கொண்டது.

இந்த உருவங்களை தோள்களில் சுமந்தும் அல்லது தேர்களில் வைத்தும் ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். இந்த கோவிலின் முக்கிய பிரசாதம், தென்னையில் இருந்து பிரித்தெடுக்கப்படும், கள் தான். கோவிலை சுற்றியுள்ள ஊர்களையும் ஈர்க்கும் வருடாந்திர திருவிழா, மார்ச் மாதம் நடத்தப்படும் ஒரு நாள் விழா ஆகும்.

கோவி. ராஜேந்திரன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us