Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/தங்கம் டீச்சர்!

தங்கம் டீச்சர்!

தங்கம் டீச்சர்!

தங்கம் டீச்சர்!

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
வேலைக்குக் கிளம்பினார், சின்னசாமி. தோள்பட்டையில் வலி கொஞ்சம் குறைந்திருந்தது. ராத்திரி, மனைவி பவுனு, எண்ணெய் தேய்த்ததில் பரவாயில்லை. அவளுடைய முட்டி வலிக்கு வாங்கிய, நாராயணி தைலமோ என்னவோ சொன்னாள். பாவம் அவளும் தானே அரிசி மில்லில் முதுகு ஒடிய புடைத்துக் கொண்டே இருக்கிறாள்.

''மதியத்துக்கு வெங்காய காரக்குழம்பு வெச்சிருக்கேன். எடுத்து தானம் பண்ணிட்டு, வெறும் மோர் சோத்தை முழுங்கிட்டு இருக்காதீங்க. கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு, வேலை செய்யுங்க. 'ஓவர்டயம்' தரேன்னு சூப்பர்வைசர் சொன்னா, உடனே சரின்னு சொல்லிடாதீங்க. உடம்புல பலமே இல்ல. அப்புறம் பார்த்துக்கலாம், சரியா?''

மனைவியின் அக்கறை, அவர் முகத்தில் குளுமையை உண்டாக்கியது.

''சரி பவுனம்மா. பாபு, பள்ளிக் கூடத்துக்கு கிளம்பிட்டானா?''

''இதோ கிளம்பிட்டே இருக்கான். உங்ககிட்ட கூட ஏதோ பேசணும்ன்னு சொன்னான்.''

'திக்'கென்றது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான், பாபு. பள்ளிக்கூடத்தில் அவனுக்கு நல்ல பெயர். 20 கி.மீ., துாரத்தில் இருந்தது பள்ளிக்கூடம். அரசுப் பேருந்தில் போய் வருவான். வாத்தியார்கள், இவன் மேல் தனி கவனம் வைத்து, பாடம் சொல்லித் தருவதாக அடிக்கடி சொல்வான்.

இந்த ஆண்டு புதிதாக, தங்கம் என்று ஒரு டீச்சர் வந்திருக்கிறாராம். அந்தம்மா வந்ததிலிருந்து புது பிரச்னை ஒன்று ஏற்பட்டிருக்கிறது.

மாணவர்கள், மாதம் ஒரு இடம் போய் வர வேண்டுமாம். பார்த்த இடம் பற்றி, கட்டுரை எழுத வேண்டுமாம். நல்ல கட்டுரைகளை பள்ளி பத்திரிகையில் போடுவராம். காமன் பிரேயரோ என்னவோ சொன்னான். அதில், வாசிக்க வைப்பார்களாம்; பரிசு கூட உண்டாம்.

அவரவர் ஊர், சிறப்பு இடம், ஏதாவது ஒன்றுக்கு போய் பார்த்து, தகவல்கள் எழுதச் சொன்னார்.

மலைக்குகைக்கு போய், சமணப் பலகை, குகை ஓவியங்கள் என்று, நுணுக்கமாகப் பார்த்து கட்டுரை எழுதினான், பாபு.

அடுத்து, நீர்நிலை ஏதாவது ஒன்றுக்கு போகச் சொன்னார், தங்கம் டீச்சர். இவனும் பக்கத்து ஊர் தாமிரபரணி கண்மாய்க்கு போய் செடி கொடிகள், மீன், நாரை என்று, கவனித்து எழுதினான்.

அதற்கடுத்து பழங்கால கோவில்களுக்குப் போகச் சொன்னார். செஞ்சோழக் கோவிலுக்குப் போனான். புரவி எடுப்பு, எல்லைக் காவல் அய்யனார் என்று தீர விசாரித்து, பெரிய கட்டுரை எழுதி விட்டான்.

தரிசு நிலங்களுக்குப் போகச் சொல்லி, நஞ்சை பாசனம் செய்யப்படும் வயல்கள், தென்னந்தோப்பு, எண்ணெய் எடுக்கும் ஆலை, இப்படி, மாதம் ஒரு இடம்.

போன முறை மதுரைக்குப் போகும்படி ஆகி விட்டது.

மீனாட்சி கோவில் அல்லது தெப்பக்குளம் என்று, ஒரு இடம், 'விசிட்'டாம். கட்டப்பட்ட காலம், கட்டிய மன்னன், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்று முடிந்தவரை அலசி ஆராயச் சொன்னார், தங்கம் டீச்சர்.

போக வர பஸ் செலவே, 200 ரூபாய் ஆகிவிட்டது. அங்கே, இரண்டு வேளை உணவு, காபி செலவு என்று அதற்கொரு, 100 ரூபாய்.

எதிர்பாராத செலவில் அவர் தடுமாறிப் போனார். வள்ளிக்குட்டிக்கு கொலுசு வாங்கித் தருவதற்காக, சீட்டுப் பணம் கட்டியிருந்தார். அதில் தான், கை வைக்க வேண்டியதாகி விட்டது. சின்ன சீட்டு என்பதால், அதோடு போய் விட்டது.

அடுத்த முறை மேலுாரில் முகாமிட்டிருந்த, 'சர்க்கஸ்' போய் பாருங்கள் என்று, சொல்லி விட்டார், தங்கம் டீச்சர்.

'மனிதன், பணத்துக்காக எப்படி அந்தரத்தில் ஆடுகிறான். சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை எப்படி, 'ரிங் மாஸ்டர்' ஆட்டி வைக்கிறான் என்று பார்த்து வந்து, கட்டுரை எழுதுங்கள்...' என, சொல்லி விட்டார்.

அவருக்கு, 400 ரூபாய் பழுத்து விட்டது.

அந்த ஆசிரியர் மேல், கோபம் வந்தது. அரசுப் பள்ளி மாணவர்கள் என்று தெரியாதா, அந்த டீச்சருக்கு? வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டித்தான், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர், பெற்றோர்.

இவன் தான், முதல் தலைமுறையாக பள்ளிக்கு வருபவன். அக்கறையாகப் படித்து, ஒழுங்காக முடித்து, நல்ல வேலைக்குப் போகும் நாளுக்காக குடும்பமே காத்துக் கிடக்கிறது. இது எதுவும் தெரியாமல், அடுத்தடுத்து செலவு வைக்கிறார், அந்த ஆசிரியர் என்று நினைத்துக் கொண்டார்.

''அப்பா, எனக்கு, 500 ரூபாய் பணம் வேணும்பா,'' என்றபடி வந்தான், பாபு.

''என்னப்பா தம்பி சொல்லுற, 500 ரூபாவா?'' திடுக்கிட்டுப் போனார்.

''ஆமாம்பா, 'ஸ்டடி டூர்' போறோம். 'காகித தொழிற்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலை, 'ஆப்செட் பிரின்டிங்'ன்னு, எட்டு பேக்டரி விசிட். 'சர்டிபிகேட்' கிடைக்கும். உங்க எல்லாருக்கும் எதிர்காலம் பற்றி ஒரு ஐடியா கிடைக்கும்'ன்னு, சொன்னாங்க, தங்கம் டீச்சர்.

''எனக்கு ஆசையாக இருக்குப்பா. அவசரம் இல்லை, மூணு மாசம் டைம் இருக்கு. முன்பே சொல்லிட்டா வீட்டுல, காசு சேர்க்க சுலபமா இருக்கும்ன்னு டீச்சர் தான் சொன்னாங்க.''

''தம்பி, இருந்தாலும், 500 ரூபாங்கிறது, நம் குடும்பத்துக்கு அதிகம். உனக்கு, தம்பி, தங்கச்சி இருக்காங்க. செலவு எகிறுது. சரிப்பா, முயற்சி செய்யுறேன்,'' என்றார்.

''ஓ.கே., நன்றி; வரேன்,'' என, சின்னதாகப் புன்னகைத்தபடி ஓடினான், பாபு.

பெருமூச்சுடன் வேலைக்குக் கிளம்பினார், சின்னசாமி.

இரவு, இன்று அடர்த்தியாக இருந்தது. நாளை அமாவாசை என்பதை கறுத்த வானம் சொல்லியது. எங்கோ தொலைவில் அக்கா குருவிகள் கத்திக் கொண்டிருந்தன.

கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து வேப்ப மரத்தடியில் போட்டு, அவர் உட்கார்ந்தபோது, பாபு வந்து நின்றான்.

''அப்பா...'' என்றான்.

குரல் அவ்வளவு தாழ்ந்திருந்தது.

''வா தம்பி, உட்காரு. சாப்பிட்டியா?''

''இனிமேத்தான்ப்பா.''

''அம்மா இன்னைக்கு, கேப்பை அடை சுட்டிருக்கா. அருமையா இருக்குது, சூடா சாப்பிடு.''

''அப்பா, எனக்கு, 'பீல்ட் ட்ரிப்' வேணாம்பா. டீச்சர்கிட்ட நான் சொல்லிக்கிறேன், ஒண்ணும் சொல்ல மாட்டாங்கப்பா.''

''ஏன்டா தம்பி, இன்னும் நாள் இருக்குல்ல, பார்த்துக்கலாம். கவலைப்படாத,'' என்றார்.

''இல்லப்பா, டீச்சர் நல்லவங்க தான்; வற்புறுத்த மாட்டாங்க.''

''அட அதுக்கில்லப்பா.''

''டீச்சரால தான், இன்னைக்கு ஒரு உண்மையை நான் தெரிஞ்சுகிட்டேம்பா,'' என்றான். தலை, தரையைப் பார்த்து விட்டு நிமிர்ந்தது.

மகனை புரியாமல் பார்த்தார், சின்னசாமி.

''இந்த மாச கட்டுரை தலைப்பு என்ன தெரியுமாப்பா? ஒவ்வொரு மாணவனும் அவங்கப்பா வேலை செய்யுற இடத்தைப் போய் பார்க்கிறது தான். அப்பா, நீங்க வேலை செய்யுற இடத்துக்கு நானும் வந்து பார்த்தேன்.

''கல் குவாரியில் நீங்க கல் உடைக்கிறதை, தலையில் சுமக்கிறதை, குண்டு வெச்சு தகர்க்கிற பாறைகள் சில்லு சில்லா தெறிச்சி விழுகிறதை, ஆபத்தோடவே எப்பவும் வேலை செய்யுறதை பார்த்தேன்,'' என்றான், அவன்.

பேச்சற்றுப் போயிருந்தார், சின்னசாமி.

''இடைவெளியே இல்லாமல் உழைப்பு. மதிய உணவுக்குப் பிறகும், உடனே வேலை. கொஞ்சமும் ஓய்வு இல்லாத முழுநாள் வேலை. சுட்டெரிக்கிற வெயில், காத்தே கொதிக்குதுப்பா அங்க. தவிர, அந்த சூப்பர்வைசர் உங்களை விரட்டுகிற அதிகாரம். விரட்டி விரட்டி வேலை வாங்குகிற வேகம்... அப்பா,'' பாபுவின் குரல் நெகிழ்ந்து, உருகி, விம்மியது.

சுதாரித்தபடி, ''டீச்சர், சொல்லலேன்னா நான் குவாரிக்கு வந்திருக்க மாட்டேன். ஏன்னா, நீங்க எப்பவுமே உங்க கஷ்டத்தை எங்களிடம் சொன்னதே இல்லப்பா. ஒவ்வொரு காசும் உங்க ரத்தத்தால உருவாக்கப் பட்டதுன்னு சொன்னதே இல்லப்பா.

''இன்னைக்கு நேரில் பார்த்து வேதனைப்பட்டேன். இன்னும் கருத்தா படிச்சு, மேலே வருவேம்பா. இது, எங்க டீச்சர் பெயரில், நான் எடுக்கும் உறுதிமொழி அப்பா.''

''பாபு, என் ராசா...'' என்று, அவர் கைகளை நீட்ட, வந்து அவர் கையை பற்றி, கால்களின் கீழ் உட்கார்ந்தான்.

இருட்டிலிருந்து, ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும், 'பளீரென' கண் சிமிட்டி, சிரித்தது.

வி. உஷா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us