Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/புதுமணம்!

புதுமணம்!

புதுமணம்!

புதுமணம்!

PUBLISHED ON : ஜன 19, 2025


Google News
Latest Tamil News
அன்று வெள்ளிக் கிழமை. அம்மா சண்முகக்கனியுடன் கோவிலுக்குள் புறப்பட்டாள், மகேஸ்வரி. தலை நிறைய மல்லிகை, கனகாம்பரம்.

மகேஸ்வரி மனம் ஒரு நிலையில் இல்லை. முன்பு, கல்லுாரி விட்டு வரும் போதெல்லாம் தங்கமுத்து சீண்டியது நினைவுக்கு வந்தது. ஏன் தான் அழகாக பிறந்தோமோ என்று, தன் மீதே வெறுப்பு ஏற்பட்டது.

தலையைக் குனிந்தவாறு அம்மாவோடு நடந்து சென்ற மகேஸ்வரிக்கு, மதில் சுவரில் சாய்ந்தபடி, தங்கமுத்து இருப்பது தெரிந்தது.

சாதாரண ஆள் இல்லை, தங்கமுத்து. தாத்தா சம்பாதித்த சொத்தே மூன்று தலைமுறைக்குப் போதும். இதில், தந்தை சம்பாதித்த சொத்து வேறு. பல தலைமுறைகளுக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்.

சரியாக படிப்பு ஏறாமல், ஊரை சுற்றி வந்தான். தங்கமுத்து நினைத்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வலையில் சிக்க வைக்கலாம். தங்கமுத்துவின் பார்வை நம்மீது படாதா என உள்ளுர் பெண்கள் பலர், ஏங்கித் தவிப்பதும் உண்டு.

தங்கமுத்துக்கோ மகேஸ்வரியின் அழகு கண்ணை உறுத்தியது. மகேஸ்வரியின் அழகில் பல இளவட்டங்கள் மயங்கி, அவள் கண் பார்வைக்காக காத்து கிடந்தனர்.ஆனால், மகேஸ்வரியை தங்கமுத்து நோட்டம் விடுவதைப் பார்த்து, ஒதுங்கிக் கொண்டன, மற்ற இளவட்டங்கள்.

காரணம், தங்கமுத்துவிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால், தங்கமுத்துவின் சொல்லுக்கு அடி பணியும் கூட்டம் அவனிடம் இருந்தது. அந்த அடியாள் கூட்டத்தைப் பார்த்து, மற்றவர்கள் மிரண்டனர்.

மகேஸ்வரியின் அழகில் கதி கலங்கி மெய்மறந்து நின்றான், தங்கமுத்து; அவளை எப்படியாவது தன் வலையில் வீழ்த்தி விடவேண்டும் என துடியாய் துடித்தான். மகேஸ்வரியோ பாரா முகமாய் தலையைக் குனிந்தவாறு சென்று விடுவாள்.

தங்கமுத்துவும், கோவிலுக்குள் சென்று, சாமி தரிசனம் செய்தான்.

பூஜை முடிந்து பிரசாதம் வாங்கும் போது, மகேஸ்வரியின் அம்மா சண்முகக்கனி அருகில் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அவளை விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான், தங்கமுத்து.

மகேஸ்வரிக்கு சங்கடமாக இருந்தது. மகேஸ்வரியின் அம்மாவோ நடுக்கத்தில், ஏதும் பேச முடியாமல் தவித்தார்.

பூஜை முடிந்து வெளியே வந்த பின் மகேஸ்வரியும், அவள் அம்மாவும் விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தனர்.

தங்கமுத்துவைக் கண்டதும், ''கிளி, உனக்கு கிடைக்குமா... இல்ல, இலவு காத்த கிளி கதை தானா,'' என, கிண்டலாக கேட்டான், நண்பர்களில் ஒருவன்.

''கிளி, என்னிடம் அகப்படும். என் சொல் பேச்சு கேட்கும். வேறு எங்கும் அதைப் பறக்க விட மாட்டேன்,'' என்றான், தங்கமுத்து.

''தங்கமுத்து, உன்கிட்ட கோடிக் கணக்குல பணம் இருக்கு. எத்தனையோ இளம் பெண்கள், உன் கடைக்கண் பார்வை நம்மீது படாதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனா, மகேஸ்வரியையே நீ சுத்தி சுத்தி வர்றியே...'' என்றான், இன்னொரு நண்பன்.

''மகேஸ்வரி மீது எனக்கு ஆசை இருக்கு. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல. மகேஸ்வரியைத் தான் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் திருமணம் செய்யாமல் காலம் பூராவும் சன்னியாசி வாழ்க்கை தான்,'' என்றான், தங்கமுத்து.

''உங்க அப்பா - அம்மா விடுவாங்களா! ஒரே மகன் ஏகப்பட்ட சொத்து, வசதி இருக்கு. அதை ஆள பேரனோ, பேத்தியோ வேண்டும் என நினைக்க மாட்டார்களா?''

''மகேஸ்வரியைக் காதலிச்சி கல்யாணம் பண்ணுவதில் ஒரு சுகம் இருக்கு. ஒரு இடத்திலேயும் அவளை தனியா பார்க்க முடியலியே. கோவிலுக்கு வந்தா, அவ அம்மா கூட வர்றா. காலேஜிக்கு போகும் போது அவ தோழிகளோடு போறா. அவகிட்ட என் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.''

''அவ உன்னை இதுவரையிலும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கோபத்தோடு முறைத்து அல்லவா போகிறாள். பிறகு நீ எப்படி காதலைச் சொல்வது?'' என, சீண்டினான் இன்னொரு நண்பன்.

''மோதலில் தான் காதலே ஆரம்பிக்கும். எப்படியாவது அவளைக் காதலிச்சி, அவ சம்மதத்தோடு கல்யாணம் பண்ணியே தீருவேன்,'' என்றான், தங்கமுத்து.

வீட்டில், தன் கணவர் கிருஷ்ணசாமியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள், மகேஸ்வரியின் அம்மா சண்முகக்கனி.

''நம்ம மக, படிப்பு முடிந்த உடன் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, அவன் கையில இவளை புடிச்சிக் கொடுத்திடணும். இவளை, இனி நம்மால பாதுகாக்க முடியாது. தங்கமுத்து ஒரு பக்கம் சுத்தி சுத்தி வர்றான்.

''தங்கமுத்துக்குத் தெரியாமல் பல பேர், இவளை நோட்டம் விடுறாங்க. ஊரிலுள்ள பசங்களின் கண்கள், இவள் மீது தான் மேயுது. தங்கமுத்து வெறி கொண்டு அலையுறான். அவனால இவளுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடக் கூடாதுன்னு பயமா இருக்கு. இவளுக்கு கல்யாணம் முடிஞ்சா தான் எனக்கு நிம்மதி,'' என்றாள்.

யோசனையில் ஆழ்ந்தார், கிருஷ்ணசாமி.

மகளுக்கு இப்போது வயது 20. தங்கமுத்து எதையும் செய்ய தயங்காதவன். ஒரு முடிவோடு, மகளையும், மனைவியையும் அழைத்தார்.

''மகேஸ்வரி, உன் அம்மா உன்னை நெனச்சி ரொம்ப பயப்படுறா. உடனே, உனக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுறா. நம்மகிட்ட வசதி குறைவு. நமக்கேற்ற குடும்பத்தில் ஒரு வரன் இருக்கு.

''நமக்கு துாரத்து சொந்த பையன். உனக்கு மாமன் மகன் முறை வரும். குறைந்த சம்பளம், அரசு உத்தியோகத்தில் இருக்கிறான். 'உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள். உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டோம்...' என, பையனின் பெற்றோர் சொல்லி விட்டனர். எனக்கும், உன் அம்மாவுக்கும் சம்மதம். உன் விருப்பம் என்ன?'' என்றார்.

'தங்கமுத்து பார்வையிலிருந்து தப்ப வேண்டும். பண பலத்தால் எதையும் செய்யத் தயங்காதவன். இனி, இந்த ஊரில் இருக்கக் கூடாது...' என முடிவு செய்தவள், ''நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம். உங்க விருப்பப்படியே செய்யுங்கள்,'' எனக் கூறிவிட்டாள்.

அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்தையும் முடித்தனர்.

தகவல் அறிந்து துவண்டு போனான், தங்கமுத்து.

'கட்டுனா மகேஸ்வரியைத் தான் கட்டுவேன்னு சொன்னே. இப்ப என்னடான்னா வெளியூர்க்காரனுக்கு யோகம் அடிச்சிருக்கு...' என்றனர், தங்கமுத்துவின் நண்பர்கள்.

மனதில் இருந்த வேதனையை வெளிக்காட்ட முடியாமல் தவித்தான், தங்கமுத்து.

'மகேஸ்வரியை வலுக்கட்டாயமாக துாக்கி வந்து திருமணம் செய்யலாம். யாராலும் தடுக்க முடியாது. நான் தான் அவள் மீது ஆசைப்பட்டேன். ஆனால், அவளுக்கு ஆசை இல்ல. இது, ஒருதலைக் காதல். அவளுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய வேண்டாம். மகேஸ்வரியாவது சந்தோஷமாக வாழட்டும்...' என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன்.

முதலில், 'உங்களால் முடிந்ததை உங்கள் பெண்ணுக்குச் செய்யுங்கள்...' என்றனர், மணமகன் வீட்டார். அதன்பின், மாப்பிள்ளை விக்னேஷுக்கு, அரசு உத்தியோகம் என்பதால், ஐந்து பவுன் கூடுதலாக வேண்டும் என, 'டிமாண்ட்' வைத்தனர்.

அதிர்ச்சி அடைந்தனர், மகேஸ்வரியின் பெற்றோர். கஷ்டப்படும் குடும்பம் என்பதால், என்ன செய்வது என, தவியாய் தவித்தனர். தங்கமுத்துவிடமிருந்து மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, திருமணத்துக்கு சம்மதித்தார், மகேஸ்வரியின் அப்பா.

திருமணம், எளிய முறையில், வீட்டின் அருகில் இருந்த காலி இடத்தில், பந்தல் அமைத்து நடந்து கொண்டிருந்தது. திருமண நாளன்று உறவினர்கள் புடைசூழ மகேஸ்வரி மேடையில் அமர்ந்திருந்தாள். முதலில், தாய் மாமன் சடங்கு நடந்தது.

மங்கள வாத்தியம் முழங்கிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் மணப்பெண்ணின் சகோதரி, மகேஸ்வரியின் கழுத்தைக் கூர்ந்து கவனித்தார். வேகமாக தன் அப்பாவிடம் வந்து, ஏதோ சொன்னாள்.

மகனிடம் அப்பா ஏதோ கூற, விக்னேஷ் முகம் உடனே மாறியது.

''உண்மையைச் சொல்லுங்கள். பொய் புரட்டு வேண்டாம். மணப் பெண்ணின் கழுத்தில் கவரிங் நகை இருக்கு. எத்தனை பவுன் கவரிங் நகை?'' என்றார், விக்னேஷின் அப்பா.

மகேஸ்வரியின் பெற்றோருக்கு கை, கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

'எப்படியாவது திருமணம் நடந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், ஐந்து பவுன் கவரிங் நகையை அணிவித்தோம். திருமணம் முடிந்த உடன், கண்டிப்பாக தந்துவிடுகிறோம்...' என, கெஞ்சினர், மகேஸ்வரியின் பெற்றோர்.

மணமகனின் பெற்றோரோ, அசைவதாக இல்லை.

'ஐந்து பவுன் நகை உடனடியாக வந்தால், தாலி ஏறும். இல்லாவிட்டால், தாலி ஏறாது...' என, கறாராக சொல்லி விட்டனர், விக்னேஷின் பெற்றோர். எதுவும் பேசாமல் இருந்தான், விக்னேஷ்.

யாரிடம் கேட்பது? அவமானம், தலை குனிவு. எதுவும் பேசாமல், மகேஸ்வரியின் அம்மாவும், அப்பாவும் அப்படியே உட்கார்ந்து விட்டனர்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. கல்யாண வீட்டுக் குழப்பம். எல்லாருக்கும் வேடிக்கையாக இருந்தது.

திடீரென்று ஏழெட்டு இளைஞர்கள் உள்ளே நுழைந்தனர். அதில் தங்கமுத்துவும் ஒருவன். பிரச்னையை கேள்விப்பட்டு, தன் நண்பர்களுடன் அங்கு வந்திருந்தான், தங்கமுத்து. அவனைப் பார்த்து, அங்கிருந்த அனைவரும் பயந்தனர்.

மணமகன் பெற்றோரிடம் தங்கமுத்து பேச, அவர்களின் முகத்தில் சந்தோஷம்.

அனைவர் முன்னிலையிலும், ''ஐந்து பவுன் நகைக்காக, மகேஸ்வரி திருமணம் தடைபடக் கூடாது. நகைக்கு நான் பொறுப்பு. நகை வாங்க டவுனுக்கு ஆள் போயிருக்கு. இப்ப நகை வந்துவிடும்.

''நம் ஊர்ப் பெண்ணுக்கு ஒரு அவமானம் என்றால், அது நமக்கும் தான். நம் வீட்டில், நம் சகோதரி யாருக்காவது இப்படி நடந்தால், சும்மா இருப்போமா? நம் ஊர் பெண் நன்றாக வாழ வேண்டும்,'' என, தங்கமுத்து பேசிக் கொண்டிருக்கும் போதே, நகை வாங்கச் சென்ற நபர், ஐந்து பவுன் நகையோடு வந்தார்.

'திருமணம் நடக்கட்டும்...' என, மணமகன் பெற்றோர் கூறியதை அடுத்து, கெட்டி மேளம் முழங்க, தாலியை எடுத்துக் கொடுத்தார், ஐயர்.

அப்போது, ஆவேசமாக எழுந்தாள், மகேஸ்வரி.

''நிறுத்துடா. நீயும் ஒரு ஆம்பள. ஐந்து பவுன் நகை குறைந்ததால், தாலி கட்ட மறுத்தாயே! உன் பெற்றோரிடம் நீ என்ன சொல்லியிருக்க வேண்டும். 'நகையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். மகேஸ்வரி கழுத்தில் தாலி கட்டுவேன்...' என துணிச்சலாக ஏன் பேசவில்லை.

''பெற்றோர் மனம் சங்கடப்படக் கூடாது என்பதற்காக, கவரிங் நகையை அணிந்து கொண்டேன். நீ, அரசு வேலையில் இருக்கிறாய்; வரதட்சணை கூடுதலாக கேட்டு திருமணத்தை நிறுத்தி இருப்பதாக, போலீசில் புகார் கொடுத்தால், உன் வேலை பறிபோய் இருக்கும். நீயும், உன் குடும்பமும் ஜெயிலில் இருப்பீர்கள்.

''தங்கமுத்துவை நான் ரவுடி, மோசமானவன் என, நினைத்தேன். ஆனால், கடின பாறைக்குள்ளும் தாகம் தீர்க்கும் தண்ணீர் உண்டு என்பதை, நிருபித்து விட்டார், தங்கமுத்து. என் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என நினைத்த தங்கமுத்து, நான் கண்ட தெய்வம்.

''நான் வாழ்ந்தால், தங்கமுத்துவோடு தான் வாழ்வேன். தங்கமுத்து என்னை விரும்பாவிட்டால், எனக்கு கல்யாணமே வேண்டாம். காலம் பூராவும் கன்னியாகவே இருப்பேன்,'' என, தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, மாப்பிள்ளை முகத்தில் வீசிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

அவமானத்தால் தலை குனிந்து வெளியேறினர், மணமகன் வீட்டார். உடனடியாக உறவினர்கள் கூடிப் பேசினர். தங்கமுத்துவின் பெற்றோர் சம்மதத்தோடு, தங்கமுத்து - மகேஸ்வரி திருமணம் நடைபெற்றது.

- ஐ. சுப்பிரமணியன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us