Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/மாறும் காலம்!

மாறும் காலம்!

மாறும் காலம்!

மாறும் காலம்!

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
அமெரிக்காவில் இருந்து, 10 நாள் விடுப்பில் வந்திருக்கும் மகனைப் பார்த்து பூரித்து போனாள், சிவகாமி.

''மனோ... நாலு வருஷம் கழிச்சு வந்திருக்கே. என் மருமகள், பேத்திகளை அழைச்சுட்டு வந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்,'' என, ஏக்கத்துடன் கூறினாள்.

''இல்லம்மா, அவளுக்கு ஆபீசில், 'லீவ்' கிடைக்கலை. அதுவுமில்லாமல் உன் பேத்திகளுக்கு, எட்டு, பத்து வயசு ஆயிடுச்சு. நிறைய, 'க்ளாஸ்' போறாங்க. இனியும் தள்ளிப் போட வேண்டாம்ன்னு தான், நான் உங்களை பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். அவங்களுக்கும் வரணும்ங்கிற ஆசை தான். என்ன செய்யறது?'' அம்மாவை சமாதானப்படுத்தினான், மனோகர்.

'இங்கே பாரு, மனோ. உன் அதிகாரத்தை என்கிட்டே காட்டாதே. நான் உனக்கு அடங்கி போறவ இல்லை புரியுதா. எதிலுமே நீ என்னோடு ஒத்துப் போறதில்லை. இரண்டு குழந்தைகள் பிறந்தாச்சுன்னு சகிச்சிக்கிட்டு தான் பொழுதை ஓட்டறேன்...'

'தெரியும், ஒரு மனைவியாக எதையும் நீ, முழு மனதோடு செய்யறதில்லைங்கிறதை எப்பவோ நானும் புரிஞ்சுக்கிட்டேன். கல்யாணமாகி, 10 வருஷத்துக்கு மேல் ஆச்சு. போட்டி மனப்பான்மையோடு தான் குடும்பம் நடத்தறே. நாம் வாழறது அமெரிக்காவில் என்றாலும், நீ கொஞ்சம் கூட நம் பண்பாட்டை நினைச்சு பார்க்கிறதில்லை...'

'முதலில் இப்படி குற்றம் சொல்றதை நிறுத்து. நான், உனக்கு எந்த விதத்திலும் குறைஞ்சு போயிடலை. உனக்கு நிகராக சம்பாதிக்கிறேன். எனக்கான சுதந்திரம் வேணும். நீ கட்டுப்பெட்டி தனமாக சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்க முடியாது...'

'போதும் வேண்டாத விவாதம் எதுக்கு? அதான் நாம இரண்டு வருஷத்துக்கு முன்னாலேயே முடிவு பண்ணிட்டோமே. இரண்டு பெண் பிள்ளைகளை வச்சிருக்கோம். அவங்களுக்காக நாம் கொஞ்சம் சகிச்சு தான் வாழணும். இரண்டு பேரும் ஓரளவு பெரியவங்களாகட்டும். அவங்களுக்கு, 12 வயசு வரும் வரை கணவன் - மனைவிங்கிற பந்தம் தொடரட்டும்.

'அதுக்குப் பிறகு நீ தாராளமாக, 'டைவர்ஸ்' வாங்கிட்டு போகலாம். அப்புறம் அவங்க யார்கிட்டே இருக்கணும்ங்கிறதை, அவங்களே முடிவு பண்ணுவாங்க. நம் பெண்களுக்காக நாம் சேர்ந்து தான் வாழணும். வேற வழியில்லை...'

'அப்ப சரி. இதுக்கு நானும் ஒத்துக்கிறேன். ஆனால், 'இப்ப இந்தியா போறேன். நீங்களும் வாங்க'ன்னு எங்களைக் கூப்பிடாமல் இருந்தால் சரி...'

அமெரிக்காவில் தனக்கும், மனைவிக்கும் நடந்த உரையாடல் மனோவுக்கு ஞாபகம் வந்தது.

''என்னப்பா யோசனை. காபி ஆறுது, எடுத்துக்கப்பா,'' என, அம்மா சொல்ல, காபி டம்ளரை எடுத்தவன், ''அம்மா, நீயும், அப்பாவும் கோயமுத்துாருக்கு அப்பாவின் நண்பரின் மகளின் கல்யாணத்துக்கு போகணும்ன்னு சொன்னீங்களே!''

''ஆமாம்பா... போகாமல் இருக்க முடியாது. அப்பா தான் பார்த்து ஏற்பாடு செய்தார். நீ வந்திருக்கிற சமயத்தில் உன்னை விட்டுட்டு போகவும் மனசு வரலை.''

''பரவாயில்லம்மா, இரண்டு நாள் தானே போயிட்டு வாங்க. நான் கிராமத்தில் இருக்கிற தாத்தா, பாட்டியை போய் பார்த்துட்டு வரேன்.''

மனோகர் சொன்னதும், சிவகாமியின் முகம் மலர்ந்தது. அவள் அம்மா, அப்பா கிராமத்தில் இருக்கின்றனர். ஒரே மகளாக இருந்தாலும், அவளுக்கு தொந்தரவு தர விரும்பாமல், அவர்களது காலம், அங்கேயே போய் கொண்டிருக்கிறது. அப்பாவுக்கும் நினைவாற்றல் குறைந்து ஞாபக மறதி வந்து, தான் யார் என்பதையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

''நல்லதுப்பா... கட்டாயம் போய் அவங்களை பார்த்துட்டு வா. உன்னைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க, பாட்டி. நான் எவ்வளவு கூப்பிட்டாலும் இந்த பக்கம் வரமாட்டேங்கிறாங்க. தாத்தாவும் முடியாமல் இருக்காரு.''

காரிலிருந்து இறங்கியவனை, ''வாப்பா மனோகர். நீ வந்திருப்பதாக அம்மா சொன்னா. நீ, எங்களைப் பார்க்க இவ்வளவு துாரம் வந்தது ரொம்ப சந்தோஷம்,'' என, சந்தோஷ குரலில் வரவேற்றாள், லெட்சுமி பாட்டி.

''உனக்கு பிடிச்ச பணியாரம் செய்திருக்கேன். சாப்பிடுப்பா,'' என, அன்போடு பரிமாறினாள், பாட்டி.

கட்டிலில் உட்கார்ந்து, சுவரையே வெறித்து பார்த்தபடி இருக்கும் தாத்தாவைப் பார்த்தான், மனோகர்.

''ஏன் பாட்டி, தாத்தா எதுவும் பேசறதில்லையா. என்னைக்கூட அவருக்கு அடையாளம் தெரியலை. யாரோ மாதிரி பார்க்கிறாரு,'' என்றான்.

''என்னப்பா பண்றது. அதிகார தேராணையில் வாழ்ந்த மனுஷன். இப்ப, தான் யாருங்கிறது கூட தெரியாமல் இருக்காரு. உங்கம்மா எங்களுக்கு ஒரே மகள். பாசத்தை கொட்டி வளர்த்தாரு. இப்ப அவளையே அடையாளம் தெரியலை,'' என, குரல் கம்ம கூறினாள், பாட்டி.

''உனக்கு தான் பாட்டி கஷ்டம். தனியாக தாத்தாவோடு கஷ்டப்படறீங்க. அம்மா தான் கூப்பிடறாங்களே. அங்கே வந்து இருக்கலாமே! எதுக்கு பாட்டி சிரமப்படறீங்க,'' என்றான், மனோகர்.

''எதுப்பா சிரமம், இவரை பார்த்துக்கிறதா... இல்லப்பா. அது என் கடமை. என் புருஷனை நான் கவனிக்காமல் யார் கவனிக்க முடியும். இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் எத்தனையோ நல்லது, கெட்டதுகளை அனுபவிச்சிட்டோம். சண்டை, சச்சரவு, கோபதாபங்கள் எல்லாத்தையும் கடந்து தான் வந்திருக்கோம்.

''இந்த மனுஷன் என்னைப் பாடாய் தான் படுத்தி வைப்பாரு. அவருக்கு பயந்து பயந்து செய்வேன். ஆனால், அதையெல்லாம் மீறி, 'லட்சுமி, நீதான்டி எனக்கு எல்லாம். உன்னை வச்சு தான், நம் குடும்பமே இருக்கு'ன்னு, ஒரு குழந்தையாக என் மடியில் படுத்துச் சொல்வாரே... அந்த நிமிஷம் அவர் மேல் இருக்கிற கொஞ்ச நஞ்ச கோபமும் பறந்து போயிடும்.

''என்னத்தை சொல்றது. இப்ப அந்த மனுஷன் தான், எல்லாத்தையும் மறந்து இப்படி உட்கார்ந்திருக்காரு. என் உடம்பில் தெம்பு இருக்கிற வரை, என் புருஷனை நான் நல்லபடியாக பார்த்துப்பேன்பா. எனக்கு இதில் எந்த சிரமமுமில்லை,'' என, கண்கலங்க கூறிய பாட்டியை பார்த்தான்.

''என்னப்பா பார்க்கிறே. இது தான்பா கணவன் - மனைவிங்கிற பந்தம். இந்த காலத்து பிள்ளைகளுக்கு இது புரியாது. நீ பெரிசா, நான் பெரிசான்னு தாலி கட்டினவனையும் மதிக்காமல், தாலி கட்டி வந்தவ மனசையும் புரிஞ்சுக்காமல், குடும்பம் நடத்திட்டு இருக்காங்க.

''நாங்க அந்த காலத்து மனுஷங்க. எங்க பார்வையே வேறு. சரிப்பா நீ சாப்பிடு. அடுத்த தடவை வரும்போது, உன் பெண்டாட்டி, பிள்ளைகளை அழைச்சுட்டு வந்து கண்ணிலே காட்டிட்டு போப்பா,'' என, பாட்டி சொல்ல, எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான், மனோகர்.

-பரிமளா ராஜேந்திரன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us