Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கிரகப்பிரவேசம்!

கிரகப்பிரவேசம்!

கிரகப்பிரவேசம்!

கிரகப்பிரவேசம்!

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Google News
Latest Tamil News
வயது, 80ஐ நெருங்க போகிறது. இருந்தாலும், எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து, உடலையும், மனதையும் நல்ல நிலையில் வைத்திருந்தார், பரமேஸ்வரன். சுதந்திர போராட்ட தியாகி. சுதந்திர வேட்கையில், பல போராட்டங்களில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

'நொந்தே போயினும், வெந்தே மாயினும் நம் தேசத்தவர் உவந்தே சொல்வது வந்தே மாதரம்...' சுப்பிரமணிய பாரதியார் வரிகளால் ஈர்க்கப்பட்டவர்.

ஒரே மகனை, நல்ல முறையில் படிக்க வைத்து, ஆளாக்கினார். இன்று சென்னையில், அரசு பணியில் உயர் அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

தான் பிறந்து வளர்ந்த கிராமத்தை விட்டுப் போக மனசில்லாமல், கிராம மக்களுக்கு, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து, தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார், பரமேஸ்வரன்.

மோர் செம்புடன் வந்த சிவகாமி, திண்ணையில் உட்கார்ந்திருக்கும் கணவனிடம் கொடுத்தாள்.

''ஏங்க, நம்ப குமரன் போன் பண்ணினாங்க, நீங்க தோப்புக்கு போயிட்டிங்க... வீடு வேலை முக்கால்வாசி முடிஞ்சுடுச்சாம். அடுத்த மாசம் கிரகப்பிரவேசம் இருக்கும். கட்டாயம் நாம வரணுமாம். நேரில் வர்றதா சொல்லியிருக்கான்,'' என்றாள், சிவகாமி.

''நல்லா இருக்கட்டும். நம்மோட ஆசி என்னைக்கும் இருக்கும். இது, அவனோட இரண்டாவது வீடு தானே!''

''ஆமாங்க, நல்ல சம்பாத்தியம். நம் பேரப் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்கிறான். புது வீட்டில் நமக்காக தனியாக அறை போட்டு, நல்ல வசதியாக கட்டியிருக்கானாம். அவனோடு கொஞ்ச நாள் வந்து இருக்கணும்ன்னு சொல்றான்,'' என்றாள், சிவகாமி.

''பார்ப்போம் சிவகாமி, முதலில் கிரகப்பிரவேசத்திற்கு தேதி வைக்கட்டும். போயிட்டு வருவோம்,'' என்றார், பரமேஸ்வரன்.

''ஐயா, நம் தோப்பில் பறிச்ச தேங்காய்களை, வண்டியில் ஏற்றி, டவுனுக்கு அனுப்பி வச்சுட்டேன்,'' என்றான், ஏழுமலை.

''சரி, நான் செட்டியார்கிட்ட பேசிக்கிறேன். உன் மகன் எப்படி இருக்கான். நல்லபடியாக படிக்கிறானா?''

''ஆமாங்க, நம் குடும்பத்தைத் தான் உதாரணமாக சொல்வேன், ஐயா. அந்தக் காலத்தில் சுயநலமாக இல்லாமல், நாடு சுதந்திரம் பெற போராடினாரு. நல்ல விஷயத்துக்காக ஜெயிலுக்குக் கூட போயிருக்காரு.

''இப்பவும், மத்தவங்களுக்கு முடிஞ்ச உதவியைச் செய்து, நேர்மையாக வாழறீங்க... ஐயா மகனும், பெரிய படிப்பு படிச்சு நல்ல நிலையில் இருக்காரு... அதையெல்லாம் சொல்லி, நீயும் படிச்சு, நல்ல முறையில் வாழணும்ன்னு அடிக்கடி எடுத்துச் சொல்வேன்.''

''நீ, வீடு கட்டிட்டு இருந்தியே... வேலை முடிஞ்சுதா?'' என்றார்.

''எல்லாம் உங்க உதவியால்தான்ங்க. வங்கியில் கடன் கிடைக்க ஏற்பாடு பண்ணி தந்தீங்க. இப்ப ஓட்டு வீடு இருந்த இடத்தில், மாடி வீடு கட்டியாச்சு. புது வீடு கிரகப்பிரவேசம், உங்க தலைமையில் தான் நடக்கணும். நீங்க தான் நடத்தி வைக்கணும்,'' என்றான், ஏழுமலை.

''கட்டாயம் ஏழுமலை, நான் வராமல் இருப்பேனா,'' புன்னகையோடு கூறினார், பரமேஸ்வரன்.

மகனும், மருமகளும் நேரில் வந்து, கிரகப் பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

''அப்பா... பெரிய ஆபீசர், அரசியல் செல்வாக்கு உள்ளவங்க நிறைய பேர் வருவாங்க. எங்கப்பா சுதந்திரப் போராட்ட தியாகின்னு சொல்லி இருக்கேன். நீங்க வந்து, சபையில் நின்னால் தான் எனக்கு பெருமை. கார் அனுப்பறேன், நாலு நாள் முன்பே வந்துடுங்க,'' என்றான், மகன்.

கிரகப் பிரவேசத்திற்கு போவதற்கு, டவுனுக்குப் போய் மகன் குடும்பத்திற்கு புதுத் துணிகள் வாங்கி வந்தார்.

''எப்பங்க போறோம், போன் பண்ணி சொன்னால், குமரன் கார் அனுப்பி வைப்பான்,'' மகன் வீட்டிற்குப் போவதற்கு சந்தோஷமாகத் தயாரானாள், சிவகாமி.

''நாளைக்கு, நம் செட்டியார் வீட்டு கல்யாணம் இருக்கு. அதுக்கு நான் அவசியம் போகணும். போய்ட்டு வந்து, இரண்டு நாளில் கிளம்புவோம். கிரகப்பிரவேசத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே... மகன் வீட்டிற்குப் போகணும்ன்னு அவசரப்படற, அப்படி தானே சிவகாமி...'' என்றார்.

''ஆமாங்க, பிள்ளை வீட்டிற்கு போறது சந்தோஷமான விஷயம் தானே!''

கல்யாண வீடு, சொந்தபந்தங்கள், நண்பர்கள் என, கூட்டம் அதிகமாகவே இருந்தது. திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க, பரமேஸ்வரன் அருகில் உட்கார்ந்திருந்தவர், ''நீங்க, சென்னையில் இருக்கிற குமரன் சாரோட அப்பாதானே,'' என்றார்.

''ஆமாம்... குமரன் என் மகன் தான். உங்களுக்கு அவரைத் தெரியுமா?''

''நல்லா தெரியும்ங்க. உங்களையும் அவரோடு சென்னையில் பார்த்திருக்கேன். இப்ப பிரமாண்டமா பங்களா மாதிரி பெரிய வீடு கட்டியிருக்காரே... கிரகப்பிரவேசம் தேதி கூட வச்சுட்டாரு.''

''ஆமாம், அதுக்கு சென்னைக்கு போகணும்.''

''இப்படியெல்லாம் வீடு கட்ட அதிர்ஷ்டம் இருக்கணும்ங்க. பெரிய அதிகாரியாக இருப்பதால, சிமென்ட், கல், கம்பின்னு எல்லாமே இலவசமாகவே கிடைச்சுடுச்சு. ராஜஸ்தானிலிருந்து மார்பிள் கல், இரண்டு லாரி நிறைய வந்து இறங்கிச்சு.

''நாளைக்கு அவரோட தயவு வேணும் இல்லையா... இந்தக் காலத்தில் இதெல்லாம் சகஜமாக போயிடுச்சு. உங்க பிள்ளை பிழைக்கத் தெரிஞ்ச மனுஷன்.''

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார், பரமேஸ்வரன்.

''சிவகாமி, உன் மகனுக்கு போன் பண்ணி, கிரகப்பிரவேசம் தேதியில் அங்கு வர முடியாதுன்னு சொல்லிடு. அந்த தேதியில், நம் ஏழுமலை வீட்டு கிரகப்பிரவேசம் இருக்கு. அதுக்கு நாம் போகணும்.''

''என்ன சொல்றீங்க?'' அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள், சிவகாமி.

விரக்தியாக, ''நம்மை அடிமை மாதிரி வச்சு, நம் நாட்டு வளங்களை, சொத்தை கொள்ளையடிச்சு போறாங்கன்னு... நம் நாடு, நம் உரிமைன்னு, தலைவர்கள் போராடி, நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தாங்க.

''அடுத்தவங்க பொருள் மீது ஆசைப்படாமல் வாழ்ந்தவன் நான். ஆனால், என் மகன் அப்படியில்லை, சிவகாமி. யாரையும் என்னால் திருத்த முடியாது...

''வாங்கிய புது துணிமணிகளை எடுத்து வை. ஏழுமலை குடும்பத்துக்கு கொடுத்துட்டு, சந்தோஷமாக வாழ்த்திட்டு வருவோம்,'' என்றார், பரமேஸ்வரன்.

- பரிமளா ராஜேந்திரன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us