PUBLISHED ON : பிப் 09, 2025

இரவு டிபன் முடித்து, ஹாலில் அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தான், குமார். அடுப்படி வேலையை முடித்த, கீதா அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள். நல்ல மனநிலையில் அவன் இருப்பதை புரிந்து கொண்டான்.
''உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,'' என, சிரித்துக் கொண்டே, குமாரைப் பார்த்தாள், கீதா.
''அப்படியென்ன முக்கியமான விஷயம்?''
''நம்ம சிவன் கோவில் அடியார்கள் சங்கம் சார்பிலே, மூணு நாள் ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்திருக்காங்களாம். நம்ம பக்கத்து வீட்டு, பாமாவும் குடும்பத்தோட போறாளாம்,'' எனக் கூறி, ஆர்வமுடன், குமாரைப் பார்த்தாள், கீதா.
''உனக்கு விருப்பமுன்னா நீயும், நம்ம பையன் பாலாஜியும் போய் வாங்க.''
''கோவில்களுக்கு போகும் போதாவது, நீங்களும் வரக்கூடாதா?''
''நான் வரக்கூடாதுன்னா நினைக்கிறேன். எங்க அப்பாவைத் தனியா விட்டுட்டு எப்படி நானும் வரமுடியும்?''
''அவருக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திடலாம். எங்க அப்பாவும் தனியாத்தான் இருக்காரு. அவருக்கும் வேண்டிய ஏற்பாட்டைச் செய்திட்டுத் தான் அண்ணனும், அண்ணியும் அப்பப்போ வெளியூர் போறாங்க,'' என, சமாதானம் கூறினாள், கீதா.
''உங்க அப்பா நிலைமை வேறே. அவரு தனியா எங்கேயும் போய் வருவாரு. எங்க அப்பாவாலே அது முடியாது. தலை சுத்தல் வேறு. தனியா இருக்கிறப்போ ஏதும் ஆச்சுன்னா?'' கவலையுடன் கூறினான், குமார்.
''போன வருஷம் இப்படித்தான். குலதெய்வம் கோவில் திருவிழாவுக்கு என்னையும், பையனையும் போகச் சொன்னீங்க. சொந்தக்காரங்க எல்லாரும் ஏன் நீங்க வரலைன்னு கேட்டாங்க. என்னாலே பதில் சொல்ல முடியல.''
''எங்க அப்பாவும் எனக்கு, குல தெய்வம் மாதிரி தான்,'' உறுதியோடு கூறினான், குமார்.
''அப்பா மேல காட்டுற அக்கறை, என் மேலேயும் காட்டக் கூடாதா?''
''அக்கறை இருக்கிறதுனாலே தான், உன்னை சுற்றுலாவுக்குப் போகச் சொல்றேன்.''
''நீங்க வராமல் நாங்க போகப் போறதில்லே,'' என, கோபமாக எழுந்து படுக்கை அறைக்கு சென்றாள், கீதா.
அவள் கோபத்தை பற்றிக் கவலைப்படாமல், 'டிவி' பார்க்க துவங்கினான், குமார்.
அலுவலகம் சென்று விட்டான், குமார். பாலாஜியும் பள்ளி சென்று விட்டான். இரவு ஏற்பட்ட கோபம், கீதாவுக்கு இன்னும் குறையவில்லை. அதைக்கண்டும் காணாதது போல், குமார் நடந்து கொண்டதில், அவளுக்கு வருத்தம் தான்.
வழக்கம் போல், காலை 9:00 மணியளவில் டிபன் சாப்பிடச் சென்றார், குமாரின் அப்பா, மேகநாதன். அவரிடம் எதையும் பேசாமல், டிபனை வைத்துச் சென்றாள், கீதா. அவளது வாடிய முகமும், படபடப்புடன் அவள் காணப்பட்டதும், ஏதோ பிரச்னை என்பதை மட்டும் அவரால் உணர முடிந்தது.
''உடம்பு சரியில்லையாம்மா...'' என, பரிவுடன் கேட்டார், மேகநாதன்.
''உடம்புக்கெல்லாம் ஒண்ணும் இல்லை,'' என, படக்கென்று பதில் கூறினாள், கீதா.
''அப்போ மனசு சரியில்லையாம்மா?''
''என்னைப் பத்தி யாரு இந்த வீட்டிலே கவலைப்படப் போறாங்க!''
''ஏம்மா, அப்படி சொல்றே... உன் பிரச்னை என்ன? என்கிட்டே சொல்லும்மா,'' அக்கறையுடன் கேட்டார், மேகநாதன்.
சுற்றுலா போக திட்டமிட்டதையும், குமார் கூட வர மறுப்பதையும் கூறினாள், கீதா.
''ஏன் வரமாட்டேங்கிறான்... விருப்பம் இல்லையாமா?''
''விருப்பம் இல்லாமல் இல்லை. உங்களைத் தனியா விட்டுட்டு வரமாட்டாராம்.''
''அப்போ பிரச்னை, நான் தானா?'' ஆதங்கத்துடன் கேட்டார், மேகநாதன்.
''உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திட்டுப் போகலாம்ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறார்.''
''கவலைப் படாதேம்மா. கண்டிப்பா அவனும் வருவான்.''
''ரொம்ப நன்றி மாமா. இருங்க, இதோ காபி கொண்டு வர்றேன்,'' எனக் கூறி, உற்சாகமாக அடுப்படிக்கு சென்றாள், கீதா.
அவளின் திடீர் மாற்றத்தை நினைத்து சிரித்தார், மேகநாதன்.
அலுவலகத்தில் இருந்து வந்த, குமார், ஹாலில் அமர்ந்து, செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான். அப்போது, அவன் அருகில் வந்து அமர்ந்தார், மேகநாதன்.
''என்னப்பா, எதுவும் சொல்லணுமா... கூப்பிட்டால் நானே வந்திருப்பேனே.''
''முக்கியமான விஷயம். அதான் நானே வந்திட்டேன்.''
''அப்படியா சொல்லுங்கப்பா,'' என்றவாறே, அவர் பக்கம் திரும்பி அமர்ந்தான், குமார்.
''உன் மனைவி கூட சுற்றுலா போக மாட்டேங்கிறீயே, ஏன்?''
''அது தான் முக்கியமான விஷயமா... எனக்கு, நீங்க அதை விட முக்கியம்பா.''
''மூணு நாள் தானேப்பா. நான் சமாளிச்சுக்கிறேன். நீ போய் வா, கீதா வருத்தப்படுதுல.''
''யாரோட வருத்தம் பத்தியும் எனக்கு கவலை இல்ல. எந்த நேரமும் தலைசுத்தல் வர்ற நிலையிலே இருக்குற உங்களை தனியா விட்டுட்டு, நான் போக மாட்டேன். கீதாவும், பாலாஜியும் போகட்டும்,'' என, உறுதியோடு கூறினான், குமார்.
''அதுக்கில்லேப்பா. நான் என்ன சொல்றேன்னா...'' என, இழுத்தார், மேகநாதன்.
''நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். இது தான் என் முடிவு,'' என, அழுத்தமாக கூறினான், குமார். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. மீண்டும், மேகநாதனே பேசினார்.
''என்னாலே உங்களுக்குள்ளே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுக்கிட்டே இருக்கு. அதற்கு ஒரு தீர்வு காண நினைக்கிறேன்,'' என்றவர் மகனை கனிவுடன் பார்த்தார்.
''அதுக்கு நீங்க என்ன தீர்வு காணப் போறீங்க?''
''ஏதாவது நல்ல முதியோர் இல்லத்திலே சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்,'' என, நிதானமாக கூறினார், மேகநாதன்.
அப்பா கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான், குமார்.
''நான் இங்கே இருக்கும் போது, நீங்க முதியோர் இல்லத்திலா?''
''ஆத்திரப்படாதேப்பா. நம்ம வீடு மாதிரியே எல்லா வசதியும் அங்கே இருக்குமாம். டாக்டர்களும் இருப்பாங்களாம். நான் அங்கே சந்தோஷமாக இருப்பேன்.''
''எல்லாம் இருக்கும். மகன், பேரன் என்ற பாசம் அங்கே இருக்குமா?''
''அதுக்கென்னப்பா... அப்பப்போ வந்து பார்த்துக்கிடுங்க,'' என, சிரித்தபடி கூறினார், மேகநாதன்.
''எனக்கு இது சரியாகப் படலப்பா. உடனே, இதுபற்றி எதுவும் நான் கூற முடியாது. ஒரு வாரம், 'டைம்' கொடுங்க. யோசிச்சு சொல்றேன். இப்ப நீங்க போய், 'ரெஸ்ட்' எடுங்க,'' என்றான், குமார்.
தன் அறைக்குச் சென்று விட்டார், மேகநாதன்.
இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, கீதா, தன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்குமென்று நம்பி, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
அலுவலகத்திலிருந்து வந்த, குமாருக்கு காபி கொடுத்த போது, அவன் அப்பா விஷயத்தில் என்ன முடிவெடுத்தான் என்பதை ஆர்வமாக கேட்டாள், கீதா.
''எங்க அப்பா விஷயத்தை விட, உங்க அப்பா விஷயம்ல ரொம்ப சீரியசா இருக்கு,'' என, குமார் கூறியதை கேட்டு பதற்றமடைந்தாள், கீதா.
''ஏன், எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு?''
''உங்க அண்ணிக்கும், அவருக்கும் ஒத்துவரலையாம். பாவம் உங்க அண்ணன் இடையிலே சிக்கிக்கிட்டு சிரமப்படுறார்.''
''எங்க அம்மா இருக்குற வரை நிம்மதியா இருந்தார், அப்பா. அப்புறம் அண்ணியோட, 'டார்ச்சர்' ஆரம்பமாயிடுச்சு,'' வேதனையுடன் கூறினாள், கீதா.
''அவங்களும் வேலை செய்யுறாங்கல்ல.''
''அந்த திமிர்லே தான், அண்ணன் சொல்றதையும் கேட்கறதில்லே.''
''அப்படிலாம் பேசக் கூடாது. வேலை செய்யுறது நல்லது தானே.''
''அப்பா விஷயம் சீரியஸ்ன்னு சொன்னீங்களே, அது...''
''அவரை முதியோர் இல்லத்திலே விட முடிவு பண்ணிட்டாங்களாம். அதை உங்க அண்ணன் போன்ல சொன்னாரு.''
''அடப்பாவிங்களா! என் அண்ணனும் இதுக்கு சம்மதிச்சுடுச்சா?''
''வேற வழி? வீட்டுக்கு வீடு வாசப்படித் தானே?'' அர்த்தத்துடன், கீதாவை பார்த்தான், குமார்.
''நான் ஒண்ணும் மாமாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்பச் சொல்லலையே. பையனும், பொண்ணும் இருந்தும், எங்கப்பா முதியோர் இல்லம் போறது கொடுமைங்க.''
கீதாவின் கண்கள் கலங்கின.
''நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். எங்கப்பாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்பப் போறதில்லே. உங்க அப்பாவையும் அங்கே அனுப்பப் போறதில்லே. அவரை இங்கே கூட்டிக்கிட்டு வரப்போறேன். சம்பந்திகள், ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்,'' என்றதும் மகிழ்ந்தாள், கீதா.
''ரொம்ப நன்றிங்க. இனிமேல் மாமாவும் எனக்கு அப்பா மாதிரி தான். எங்க அப்பா மாதிரியே அவரையும் நான் பார்த்துக்கிடுவேன். இது சத்தியம்,'' என, குமாரின் உள்ளங்கை மீது, தன் உள்ளங்கையை வைத்துக் கூறினாள், கீதா.
''இந்த விஷயத்தை எப்போ என் அண்ணன்கிட்டே சொல்லப் போறீங்க,'' அக்கறையுடன் கேட்டாள், கீதா.
''போன்லயெல்லாம் சொல்லக் கூடாது. நாம, ரெண்டு பேரும் நேரிலே போய் பேசி, உங்க அப்பாவை இங்கே கூட்டி வரணும். அது தான் மரியாதை.''
இதுவரையில் இவர்கள் பேசியதை தன் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த, மேகநாதன் அப்போது வெளியில் வந்து மகனிடம் கேட்டார்.
''அப்போ, இனி நான் இங்கே தான் இருக்கணுமாப்பா!''
''இது உங்க வீடு மாமா. நீங்க இங்கே தான் இருக்கணும்,'' கீதாவின் குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த, குமாரின் முகத்தில் புன்னகை அரும்பியது.
கரு. நாகராஜன்