Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: சிவாஜி மை பேபி! (5)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: சிவாஜி மை பேபி! (5)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: சிவாஜி மை பேபி! (5)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி: சிவாஜி மை பேபி! (5)

PUBLISHED ON : ஜூன் 22, 2025


Google News
Latest Tamil News
ஒருநாள் காலை, சிவாஜி எழுந்து தயாராகி, சிற்றுண்டி சாப்பிடுவதற்காக வந்தார்.

'என்ன, 'பிரேக்பாஸ்ட்' தயாரா? இன்னிக்கு என்ன மெனு? எனக்கு நல்ல பசி. சீக்கிரம் போடுங்க...' என்றபடியே வந்து உட்கார்ந்தார்.

அன்று காலை, வீட்டில் அனைவருக்கும் சிற்றுண்டி தயார் செய்து கொண்டிருந்தவர், என் அம்மா தான்!

சமையலறையில் இருந்தபடியே உரக்க, 'இன்னிக்கு காலை டிபன் ப்ரெஞ்ச் டோஸ்ட்...' என்றார், என் அம்மா.

உடனே, 'ப்ரெஞ்ச் டோஸ்ட்டெல்லாம் எனக்கு வேணாம்! இந்தியன் டோஸ்ட் குடுங்க! இட்லி, தோசை, பூரி, இப்பிடி எதையாவது கொடுக்காம, ப்ரெஞ்ச் டோஸ்ட் கொடுக்கறீங்களே...' என்றார், சிவாஜி.

சிவாஜி இப்படிச் சொன்னதும், சமையலறையில் இருந்த என் அம்மா, நேரே சிவாஜியிடம் வந்தார். சிவாஜியின் முகத்தை உற்றுப் பார்த்து, 'ப்ரெஞ்ச்காரங்க, 'செவாலியே' விருது கொடுத்தா, அதை சந்தோஷமா வாங்கிக்கறீங்க! ஆனால், நான் குடுக்கிற ப்ரெஞ்ச் டோஸ்ட் மட்டும் வேணாம்ன்னு சொன்னா எப்படி?' என, ஒரு போடு போட்டார்.

சிவாஜிக்கு ஒரே சிரிப்பு.

அம்மாவுடைய சாதுர்யமான கேள்வியை ரொம்பவே ரசித்தார், சிவாஜி. மறுக்காமல் அம்மா செய்த ப்ரெஞ்ச் டோஸ்ட்டை ரசித்து சாப்பிட்டார்.

சிவாஜியிடம் நான் வியந்தது, அவரது நடிப்பு மட்டுமல்ல, அவரது நேரம் தவறாமையும் தான். தமிழ் சினிமா உலகத்தில், சிவாஜியின் நேரம் தவறாமை என்பது, மிகவும் பிரசித்தமானது. காலை, 7:00 மணிக்கு, 'ஷூட்டிங்' என்றால், 6:45 மணிக்கே, 'செட்'டில், 'டாண்' என, ஆஜராகி விடுவார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவரது இந்த, 'பங்ச்சுவாலிட்டி'யை நேரிலேயே தினமும் கண்டேன். மிக ஆச்சரியமான குணம்.

காலையில், 8:00 மணிக்கு மருத்துவமனைக்கு புறப்பட வேண்டும் என்றால், சரியாக, 7:45 மணிக்கெல்லாம் அவர் தயாராகி விடுவார்.

அவர் தயாரானதும் நேராக வந்து முன்னறை சோபாவில், அமைதியாக உட்கார்ந்து காத்திருப்பார்.

அவரது அமைதியே, 'நேரம் ஆகிவிட்டது. இன்னும் நீங்கள் எல்லாம் தயாராகவில்லையா?' என, மற்றவர்களை கேட்பது போல இருக்கும்.

இதனுடன் இன்னும் ஒரு விஷயமும் நடக்கும். புறப்பட வேண்டிய நேரத்துக்கு சில நிமிடங்கள் தாமதமாகி விட்டால், அந்த கோபத்தை முகத்தில் காட்ட மாட்டார். அதற்கு பதிலாக, நாம் வந்ததும் நம் முகத்தைப் பார்த்துவிட்டு, அடுத்தது கடிகாரத்தைப் பார்ப்பார். அவ்வளவு தான்!

சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்த போது, உடன் வந்திருந்த குடும்பத்தினர், சிகிச்சை குறித்து லேசாக பயந்தாலும், மிகவும் தைரியமாகவே இருந்தார், சிவாஜி.

அவருக்கான சிகிச்சையை துவக்குவதற்கு முன், பல பரிசோதனைகளை செய்ய வேண்டியிருந்தது. அதற்காக, அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, பரிசோதனை செய்யும் பகுதிக்கு அழைத்து போயினர். கூடவே, சிவாஜியின் மனைவி கமலா அம்மாவும் சென்றார்.

பரிசோதனைக் கூடம் வந்ததும், அங்கே இருந்த பாதுகாப்பு ஊழியர், 'பரிசோதனைக் கூடத்துக்குள்ளே நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. நோயாளியுடன் வருகிறவர்களுக்கு அனுமதி கிடையாது...' என, ஆங்கிலத்தில் சொல்லி, கமலா அம்மாவை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

கமலா அம்மாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

'அவருடன் நான் இருக்க வேண்டும்! உள்ளே செல்ல அனுமதியுங்கள்...' என, அந்த பாதுகாப்பு ஊழியரிடம் சொல்ல விரும்புகிறார். ஆனால், மனதில் நினைத்ததை அந்த ஊழியரிடம் சொல்லும் அளவு, அவரது ஆங்கிலம் ஒத்துழைக்கவில்லை.

சட்டென்று, சிவாஜியைச் சுட்டிக் காட்டி, 'மை பேபி...' என்றார். ஸ்ட்ரெச்சரில் இருக்கும் முதிய நோயாளியை காட்டி ஒரு பெண்மணி, 'என்னுடைய குழந்தை...' என்று சொன்னதைக் கேட்டதும், அந்த ஊழியருக்கு ஒரே வியப்பு!

மறுவினாடியே, கமலா அம்மாவையும், சிவாஜியுடன் பரிசோதனைக் கூடத்தினுள் செல்ல அனுமதித்து விட்டார்.

எல்லாவற்றையும் அமைதியாய் படுத்தபடியே கவனித்துக் கொண்டிருந்த, சிவாஜி புன்னகைத்தபடியே, கமலா அம்மாவைப் பார்த்தார். அந்த பார்வையில் நெகிழ்ச்சி, அன்பு இருந்தது. துளியும் நடிப்பு இல்லை.

பரிசோதனைகள் செய்யும் போது, சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல், முழு ஒத்துழைப்புக் கொடுப்பார், சிவாஜி. சில மருத்துவப் பரிசோதனைகளின் போது, ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசாமல் படுத்துக் கொண்டே இருக்க நேரிடும். அப்போது கூட அவர், கொஞ்சமும் சலித்துக் கொள்ளவே மாட்டார். குறுக்கே கேள்விகள் கேட்க மாட்டார். மிகவும் பொறுமையாக இருப்பார்.

எல்லாவற்றையும் விட, 'எனக்கு போய் இப்படி ஆகிவிட்டதே...' என, விரக்தி கலந்த ஒரு வார்த்தை கூட, அவரிடமிருந்து வரவில்லை. அபார மனதிடம். நம்பிக்கை.

'சிவாஜி சார், இந்திய அரசும், பிரெஞ்சு அரசெல்லாம் உங்களுடைய நடிப்புத் திறனுக்கு விருதுகள் கொடுத்து கவுரவிச்சிருக்காங்க! ஒரு டாக்டர் என்ற முறையில், நான் சொல்கிறேன்...

'நீங்க அற்புதமான நடிகர் மட்டுமில்லை! மிகுந்த ஒத்துழைப்புக் கொடுக்கிற நோயாளியும் கூட! அதற்காக உங்களுக்கு நான் ஸ்பெஷலாக, 'பெஸ்ட் பேஷன்ட் அவார்டு' கொடுக்கிறேன்...' என சொல்வேன்; அவர் வாய் விட்டு சிரிப்பார்.

டாக்டர்களிடம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை, தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அதை வேத வாக்காக எடுத்து, 100 சதவீதம் அப்படியே கடைபிடிப்பார்.

முதல் தடவை சிகிச்சைக்காக வந்த போது, அறுவை சிகிச்சை இல்லாமல், 'லேட்டஸ்ட்'டாக வந்திருந்த மருந்துகளைக் கொடுத்தே, அவரது இதய பிரச்னையை சரி செய்தேன். அவரது உடல் நலம் நன்றாகவே முன்னேற்றம் கண்டது.

சிகிச்சை முடிந்து இந்தியாவுக்கு திரும்ப தயாராயினர், சிவாஜி குடும்பத்தினர். விடைபெறும் தருணத்தில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, என் கைகளைப் பிடித்து, சிவாஜி சொன்ன வார்த்தைகளை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்!

அது என்ன வார்த்தைகள்? அடுத்த வாரம் சொல்கிறேன்.

தொடரும்- எஸ். சந்திரமவுலி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us