Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! - ஒரு தமிழன் தான், ட்ரீட்மென்ட் தரணும்! (3)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! - ஒரு தமிழன் தான், ட்ரீட்மென்ட் தரணும்! (3)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! - ஒரு தமிழன் தான், ட்ரீட்மென்ட் தரணும்! (3)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! - ஒரு தமிழன் தான், ட்ரீட்மென்ட் தரணும்! (3)

PUBLISHED ON : ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
குமுதம் இதழின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஆசிரியருமான எஸ். ஏ. பி. அண்ணாமலையின் மகன் டாக்டர் எஸ். ஏ. பி. ஜவஹர் பழனியப்பனின் அனுபவ தொடர்.

'டாக்டர்! நான் ஒரு விஷயத்துல உறுதியா இருக்கேன். எனக்கு ஒரு இந்தியன் தான், 'டிரீட்மென்ட்' குடுக்கணும். அதுவும், தமிழன் தான், 'டிரீட்மென்ட்' குடுக்கணும்...' என்றார், ஒரு குழந்தையைப் போல, சிவாஜி.

'என்னது! வழக்கமாக எல்லா பேஷன்ட்களும், ஆழ்ந்த அறிவும், அனுபவமும் வாய்ந்த, டாக்டர்கள் தங்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பர். இல்லாது போனால், வெளிநாட்டுக்கு போய் சிகிச்சை செய்து கொள்ள விரும்புவர்.

'ஆனால், நீங்கள் என்னடாவென்றால், அதை எல்லாம் விட்டுவிட்டு, உங்களுக்கு ஒரு தமிழன் தான், 'டிரீட்மென்ட்' குடுக்கணும் என்கிறீர்களே... அதற்கு ஏதாவது காரணம் உண்டா?' என, சீரியசாக கேட்டேன், நான்.

'நிச்சயமா, முக்கியமான காரணம் இருக்கு! எனக்கு ஆபரேஷன் பண்ணியே ஆகணும்ன்னு சொன்ன, பிரெஞ்சுக்கார டாக்டருக்கு, என்னைப் பத்தி என்ன தெரியும்?

'இந்தியாவுல இருந்து வந்திருக்கிற, பேஷன்ட்னு நினைப்பார். கொஞ்சம் விபரம் தெரிஞ்சவரா இருந்தா, இந்தியாவுல இருந்து, இதய அறுவை சிகிச்சைக்காக, பிரான்ஸ் வந்திருக்கிற யாரோ ஒரு இந்திய நடிகன்னு தானே என்னைப் பத்தி நினைப்பார்!

'ஆனால், ஒரு தமிழனுக்குத் தான், சிவாஜின்னா யாருன்னு தெரியும். அதனால் தான் சொல்றேன். எனக்கு, தமிழ் டாக்டர் தான் வைத்தியம் பார்க்கணும்! அதுவும், நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்...' என, கம்பீரமான குரலில் சொன்னார்.

நான் ஆச்சரியத்தில் மூழ்கி, சில விநாடிகள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை விட, அவரது முகபாவத்தை ரசித்துக் கொண்டிருந்தேன் என்றே சொல்லலாம்.

அடுத்து, இதற்கு முன்னால், சிவாஜிக்குக் கொடுக்கப்பட்ட, சிகிச்சை பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

எனவே, 'முந்தைய சிகிச்சை

தொடர்பான, 'ரிப்போர்ட்'கள் எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்கள்...' என்றேன். அவைகளை என்னிடம் கொடுத்தனர்.

அவருக்கு என்ன பிரச்னை? இதற்கு முன்பாக எந்தெந்த டாக்டர்கள் அவரைப் பார்த்திருக்கின்றனர்? இதுவரை அவருக்கு என்ன வகையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது போன்ற விபரங்களை, அவரது, 'ரிப்போர்ட்'களில் இருந்து, தெரிந்து கொண்டேன்.

அவரிடமும், வீட்டில் மற்றவர்களிடமும் பேசி, மேலும் சில தகவல்களை அறிந்து கொண்டேன்.

அவருக்கு என்ன பிரச்னை என்பது, எனக்கு புரிந்தது. அவருடைய இதயம் பலவீனமாக இருந்தது. மருத்துவ ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், அதை, 'கார்டியோ மயோபதி' என, நாங்கள் குறிப்பிடுவோம்.

'உங்கள் உடம்பு பற்றி, நீங்கள் கவலையே பட வேண்டாம். இப்போது இதய சிகிச்சையில், 'லேட்டஸ்ட்' ஆக, சில புதிய மருந்துகள் வந்திருக்கின்றன. இம்மருந்துகள் ஆய்வு நிலையில் தான் உள்ளது. பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

'அமெரிக்காவிலேயே இன்னும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கு, 'கார்வெடிலோல்' எனப் பெயர். அவற்றை நான், என்னுடைய மருத்துவமனையில் பல நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது...' என்றேன்.

'உங்களுக்கு ஆபரேஷனே அவசியமில்லை; 'லேட்டஸ்ட்' ஆக வந்திருக்கும் மருந்து, மாத்திரையிலேயே உங்களை குணப்படுத்தி விடலாம்...' என்றதும், அவர் முகத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் தெரிந்தது.

தொடர்ந்து, அவரிடம், 'அமெரிக்காவில் என்னுடைய மருத்துவமனையிலேயே எல்லாவிதமான நவீன மருத்துவ வசதிகளும் இருக்கின்றன.

'அங்கேயே, உங்களுக்கு எல்லா விதமான பரிசோதனை களையும் செய்து, தேவையான சிகிச்சையை நானே நேரடியாக உங்களுக்கு அளிக்கிறேன். நீங்க தைரியமா புறப்பட்டு அமெரிக்கா வாங்க...' என, அழைத்தேன்.

அதைக் கேட்டதும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

அடுத்து, நானாகவே அவரிடம், 'சிகிச்சைக்காக அமெரிக்கா வந்தால், எங்கே தங்குவது என்ற எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம். என்னுடைய வீட்டில், விருந்தினர்கள் தங்க எல்லா வசதிகளும் இருக்கின்றன. எனவே, நீங்கள், எங்கள் வீட்டிலேயே சவுகரியமாக தங்கிக் கொள்ளலாம்.

'நீங்கள், அமெரிக்காவுக்கு வந்து என்னிடம் சிகிச்சை பெறுவது, மிகுந்த மகிழ்ச்சி; பெருமை. அது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் என் வீட்டில், குடும்ப விருந்தினராகத் தங்கி இருப்பது என்பது, எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுக்கும்...' என்றேன்.

சிவாஜியின் முகத்தில் பரம திருப்தி. ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.

அடுத்தடுத்த சில நாட்களிலும், அவரது வீட்டுக்குப் போய், அவரை சந்தித்து, உடல் நலம், சிகிச்சை பற்றி பேச

வேண்டி இருந்தது. அப்படி மூன்றாவது அல்லது நான்காவது தடவை,

அவரை சந்தித்த போது,

'டா... க்... ட... ர்...' என,

என்னை கூப்பிட்டார்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என, அவர்

முகத்தையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று, 'டாக்டர்! என்னை நல்லா நீங்க ஏமாத்திட்டீங்க...' என்றார்.

சிவாஜி, இப்படி சொன்னவுடன், திடுக்கிட்டுப் போனேன். ஒருவேளை என்னிடம் ஏதோ தமாஷ் பண்ணுகிறாரோ என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. ஆனால், சிவாஜியின் முகமோ சீரியஸாகவே இருந்தது. நான் லேசாக குழம்பிப் போனேன்.

அவரது முந்தைய சிகிச்சைகள் குறித்த எல்லா, 'ரிப்போர்ட்' களையும், நான் மிகுந்த கவனத்துடன் படித்தேன். ஒரு டாக்டர் என்ற முறையில், மருத்துவ ரீதியாக அவர் உடல் நிலையைப் பற்றி சரியாக என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அவரது இதயத்தின் நிலைமை என்ன என்பதை, அவரிடம் மறைக்கவும் இல்லை; அதே சமயம் ரொம்ப மிகைப்படுத்திச் சொல்லியும், அவரை ஒரேயடியாக பயமுறுத்தவில்லை.

எனவே, யதார்த்தத்தைத் தானே சொன்னோம். எதற்காக இவ்வளவு பெரிய வார்த்தைகளை எல்லாம் சிவாஜி சொல்கிறார் என்பதே, என்னுடைய குழப்பத்துக்குக் காரணம்.

'என்ன சொல்லறீங்க? நான் உங்களை ஏமாத்திட்டேனா?' என, அதிர்ச்சியுடன் கேட்டேன்.

- தொடரும்.

எஸ். சந்திரமவுலி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us