Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/காவிரி கிழவி!

காவிரி கிழவி!

காவிரி கிழவி!

காவிரி கிழவி!

PUBLISHED ON : ஜூலை 28, 2024


Google News
Latest Tamil News
ஆக., 3 -ஆடிப்பெருக்கு

காவிரித்தாய், காவிரி அன்னை என்று தானே இதுவரை, இந்த புண்ணிய நதியை அழைத்து வந்தோம். காவிரி கிழவி என்ற புதுப்பெயர் எப்படி?

ஒருவேளை அகத்தியர் காலத்திலேயே பிறந்து விட்ட காவிரிக்கு, வயதாகி விட்டதால் கிழவியாகி விட்டாளோ என்று தானே எண்ணுகிறீர்கள்! பிறக்கும்போதே அவள் கிழவி தான், என்ற வித்தியாசமான தகவல் உங்களுக்கு தெரியுமா!

காவிரி பிறந்த கதையைப் பலரும் அறிவர். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து, விநாயகர் மூலம் தவழ்ந்தவள் என, ஒரு வரலாறு உண்டு.

கவேரன் என்ற முனிவர், கங்கையைப் போல் தென்னகத்திற்கு ஒரு நதி வேண்டும் என்று தவமிருக்க, அகத்தியர் மூலமாக கிடைத்தது காவிரி என்றும் சொல்வர். எப்படி இருப்பினும், காவிரி நமக்கு கிடைக்க காரணமாக இருந்தவர், அகத்தியர் தான்.

காவிரி நதியின் பிறப்பிடம், குடகு மலை. குடகு மலையில் எந்த இடத்தில் இது உற்பத்தியாகிறது என்று துல்லியமாக சொல்ல முடியாது. யாருக்கும் புலப்படாத அதிசயமே நதிமூலம்.

ஆனால், தலைக்காவிரியில், ஒரு தொட்டி அமைத்து, அங்கு தான் காவிரி உற்பத்தியாவதாக சொல்கிறோம். அந்த இடம் புனிதத்தலமாகவும் உள்ளது. காவிரி அம்மனுக்கு கோவிலும் இருக்கிறது.

குடகு என்ற சொல், கொடவா என்ற சொல்லில் இருந்து பிறந்துள்ளது. கொடு + அவ்வா என்று இதை பிரிக்கலாம். அவ்வா என்ற சொல்லுக்கு பாட்டி என்று பொருள் உண்டு. அம்மா மற்றும் அப்பாவின் அம்மாவை, 'அவ்வா' என்று சொல்லும் வழக்கம், தெலுங்கு மக்களிடம் உண்டு.

தெலுங்கு மக்களில் ஒரு பகுதியினர் அம்மாவையும், அவ்வா என அழைப்பதுண்டு. காவிரி நதி தாயாகவும் இருக்கிறது. பாட்டியாக இருந்தும் செல்வத்தை வாரி வழங்குகிறது.

காவிரி நதி, நமக்கு கொடுத்து வரும் பலன்களை அளவிட முடியாது. தான் செல்லும், 800 கி.மீ., வழியில், அவள் பலன் தராத இடமே கிடையாது.

தன் பேரன், பேத்திகளுக்கு அவர்கள் விரும்பியதை எல்லாம் சமைத்துத் தருவாள், பாட்டி. அதுபோல, காவிரியும், அவர்கள் விரும்பும் உணவை உண்ணும் வகையில், பல பயிர்கள் விளைய காரணமாக இருக்கிறாள்.

இதனால் தான், அவள் பிறந்த இடத்திற்கு கூட, கொடவா (கொடுக்கும் பாட்டி) என்ற பெயர் அமையுமாறு பார்த்துக் கொண்டாள் போலும்!

பாட்டிக்கு நாம் மரியாதை செய்யும் விழா தான், ஆடிப்பெருக்கு. இந்நதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை.

ஆடிப்பெருக்குக்கு செல்பவர்கள், ஆற்றில் போட உதிரிப்பூக்கள், பாத்திரத்தில் அடைத்த தரமான மஞ்சள் பொடி மட்டும் கொண்டு சென்றால் போதும். பாலிதீன் பைகளை அறவே தவிர்க்க வேண்டும். குப்பை கொட்டக் கூடாது. அவளை அசுத்தப்படுத்தினால், நம் தாயையும், பாட்டியையும் அசுத்தப்படுத்துவதற்கு சமம்.

காவிரியில் எந்நாளும் தண்ணீர் பெருகி வர, ரங்கநாதரையும், தாயுமானவரையும் வேண்டுவோம்.

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us