PUBLISHED ON : மார் 22, 2026

அதிரடி முடிவுகளும் அவசியம்!
சமீபத்தில், உறவினர் மகனின் திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றிருந்தேன்.
அந்த விழாவில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில், மணமகனின் நண்பர்கள் சிலர், ஆட்டம் பாட்டத்தோடு மேடையேறி, மணமகனுக்கு பரிசு பார்சலை கொடுத்தனர். அதை, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, விழா மேடையிலேயே, அந்தப் பார்சலை பிரித்து பார்க்கும்படி கூறினர்.
மணமகனும் அதன்படியே செய்ய, அந்தப் பார்சலுக்குள் இருந்தது, ஒரு வீச்சரிவாள்.
அதை வெளியே எடுத்துக் காட்டும்படி மணமகனை நச்சரித்ததோடு, அந்த வீச்சரிவாளை சுழற்றி காட்டும்படி கூறி, அதை, 'ரீல்ஸ்' வீடியோவாக எடுத்தனர்.
இச்செயலால் அதிர்ச்சியான மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், 'இப்படிப்பட்ட நண்பர்கள் சகவாசம் கொண்ட பையனுக்கு, எங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க முடியாது...' என்று கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டனர். அத்துடன், நண்பர்கள் மீது போலீசில் புகாரளித்து, நடவடிக்கை எடுக்கும்படி செய்தனர்.
சில நேரங்களில், அதிரடி முடிவுகளும் அவசியம் தான் என்பதை உணர்த்தியது, அந்த நிகழ்வு.
- மு.ஆதினி, சேலம்.
பணி ஓய்வு காலத்தை பயனுள்ளதாக்க...
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவரிடம், 'ஓய்வு காலம் எப்படி இருக்கிறது?' என்று கேட்டேன்.
அதற்கு, 'பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே நான், பழைய புத்தக கடையிலிருந்து, மாணவர்களுக்கு பயனளிக்க கூடிய பல புத்தகங்களை குறைந்த விலையில் வாங்கி சேமிக்க ஆரம்பித்தேன். சிறுக சிறுக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேமித்தேன்...
'பணி ஓய்வு பெற்றதும், வீட்டில் உள்ள சிறிய அறையில் மினி நுாலகம் அமைத்தேன். வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கவும் அனுமதி அளித்துள்ளேன். இப்போது, ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், என் நுாலகத்திற்கு வந்து செல்கின்றனர். மாணவர்கள் ஆர்வமுடன் புத்தகம் படிக்க வருவதால், அம்மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்கின்றனர்...' என்றார், நண்பர்.
பணி ஓய்வு பெற்றதும், மனம் சோர்வடையாமல், பயனுள்ள வகையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள என் நண்பரை பாராட்டினேன்.
-அ.செந்தில்குமார், கோவை.
சரியான பதிலடி!
சமீபத்தில், என் தோழியின் அக்கா வீட்டிற்கு நானும், என் தோழியும் சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த தோழியின், உறவின பெண்மணி ஒருவர், தன் மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் கொண்டு வந்தார்.
அதை என் தோழியிடம் கொடுத்து, தோழியின் அக்கா அங்கு இருந்ததை கவனிக்காமல், 'உன் அக்காவை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வர சொல்லாதே. திருமணமாகி, ஒன்பது ஆண்டுகளாகியும் அவளுக்கு குழந்தை இல்லை. அதனால்...' என்று இழுத்தார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த, என் தோழியின் அக்கா, துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், துணிச்சலுடன், 'எனக்கு குழந்தையாக என் கணவரும், என் கணவருக்கு குழந்தையாக நானும் இருக்கிறோம்...' என்று பதிலடி கொடுத்து, தங்கச்சியிடம் கொடுத்த அழைப்பிதழை அந்த பெண்மணியிடமே திருப்பி, கொடுத்து விட்டார்.
குழந்தை என்பது தெய்வம் கொடுத்த வரம். எப்போது, எப்படி கிடைக்க வேண்டுமோ, நிச்சயம் அது நமக்கு கிடைத்தே தீரும். குழந்தையின்மையை குறை கூறி, அவருக்கு என் தோழியின் அக்கா கொடுத்தது சரியான பதில் தானே!
எஸ்.நித்யஸ்ரீ, கன்னியாகுமரி.
