Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
யோசியுங்கள் மக்களே!

சமீபத்தில், கால்நடை மருத்துவக் கல்லுாரி ஒன்றில், நடைபெற்ற கண்காட்சியில், கால்நடைகளின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், ஆணி, ஒயர், மெல்லிய கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் என, 30க்கும் மேற்பட்ட பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லுாரியில், ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து, 38 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டிருக்கின்றன.

மேற்கண்ட செய்திகள் கலங்கடிக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகும் பாலை, விஷமாக்குவது நாம் தான். குப்பைகளைப் பொறுப்பற்ற முறையில் அகற்றுவது துவங்கி, மாடுகளைக் கொட்டகையில் முறைப்படி பராமரிக்காமல், ரோட்டில் கழிவுகளை மேய விடுவது வரை, கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளைப் புரிவது, நாம் தான்.

தற்போது, உலகம் எதிர்கொள்ளும் பெரும் சவால், கழிவுகளை அப்புறப்படுத்துதல் தான். ஒவ்வொரு மனிதனும் சிறு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் கூட, பெருமளவில் இதை வெற்றிகரமாக செயல்படுத்தலாம்.

சிறு முன்னெடுப்பு கூட பெரும் மாற்றம் தரும். யோசியுங்கள்.

நம் வீட்டுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். கால்நடைகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருக்கும்.

— கி.சரஸ்வதி, ஈரோடு.

மாமியாரின் பெருந்தன்மை!

என் தோழியின் ஒரே மகன், பொறியியல் படிப்பு முடித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான். ஓரளவிற்கு வசதியான குடும்பம் தான்.

தன்னுடன் கல்லுாரியில் பயின்ற மாணவியை, காதலித்தான், தோழியின் மகன்.

மற்ற எவற்றையும் பார்க்காமல், மகனின் ஆசையை மட்டுமே கருத்தில் கொண்டு, பெண் வீட்டாருடன் பேசி, அவர்கள் ஏழ்மையான குடும்பம் என்பதால், தன் செலவிலேயே திருமணத்தை முடித்தாள், தோழி.

அக்கம்பக்கம் உள்ளவர்கள், 'வெறுங்கையை வீசிக்கொண்டு வந்தவள்...' என்று, தன் மருமகளை தரக்குறைவாக பேசுவதை அறிந்து, மகனிடம் கூறி, அவளை அரசுத் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்து, படிக்கச் செய்தாள்.

குறுகிய காலத்திலேயே, அவளின் பயிற்சி மற்றும் முயற்சியால், அரசுப் பணி கிடைத்து, இப்போது, கை நிறைய சம்பாதிக்கிறாள்; தனக்கு ஊக்கமளித்து உதவிய, கணவனின் குடும்பத்தினருக்கும் பெருமை தேடி தந்துவிட்டாள்.

ஒரு நல்ல மாமியாராக, தன் மருமகளின் கவுரவத்தை உயர்த்த, என் தோழி எடுத்த அதிரடி முடிவால், 'இப்படியும் ஒரு மாமியாரா?' என்று, அவரின் செயலை அனைவருமே புகழ்ந்து தள்ளுகின்றனர்.

— கே.கல்யாணி, விக்கிரவாண்டி.

இப்படியும் ஒரு வீடு கட்டலாம்!

சாதாரண கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார், நண்பர். இருப்பதற்கு சொந்த வீடு கிடையாது. பூர்வீக இடம், 3 சென்ட் மட்டுமே உண்டு.

இந்நிலையில், அவர் அந்த இடத்தில் கட்டட வேலை ஆரம்பித்தார். அதைப் பார்த்ததும், நண்பருக்கு சேமிப்பு எதுவும் கிடையாதே, ஒரு வேளை வங்கியில், 'லோன்' போட்டிருப்பாரா... என நினைத்து, அவரிடம் கேட்டேன்.

அதற்கு, 'லோன் வாங்கினால், நான் வாங்கும் சம்பளம், வட்டி கட்டுவதற்கே, போதாது. நானாவது, 'லோன்' வாங்குவதாவது...' என்றவர் தொடர்ந்தார்...

'கொஞ்சம் வித்தியாசமான முறையில் யோசித்து, உறவினர்களிடம், தேவையான கட்டுமான பொருட்களை, ஒவ்வொருவரிடம் வாங்கி தர கேட்கலாம். அவர்கள் வாங்கி தந்தால், அந்த, 'பில்'லிற்கான பணத்தை மட்டும், கொஞ்ச கொஞ்சமாக திருப்பி தருவதாகவும், எக்காரணத்தை கொண்டும் வட்டி தர இயலாததையும் பேசி பார்ப்போம் என நினைத்து, அதன்படி கேட்டேன்.

'உறவினர்கள் அனைவரும் உதவி செய்ய முன்வந்தனர். மணல், ஜல்லி, செங்கல், சிமென்ட் மற்றும் கம்பி என, கட்டுமான பொருட்கள் அனைத்தையும் ஒவொருவராக வாங்கி தந்தனர். மொத்தம், 800 சதுர அடி பரப்பளவில் வீட்டு வேலை நடைபெறுகிறது.

'இப்படி வேலை நடப்பதை கண்டு பலரும், நாங்களும் எங்கள் உறவினர்கள் மூலம் வீடு கட்ட போகிறோம் எனக் கூறி, அதன்படி வீட்டு வேலையை துவங்கி விட்டனர்...' என்றார்.

அதைகேட்டு வியப்புற்ற நான், நண்பரின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினேன்.

பி.என்.ஆத்மநாதன், கோவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us