Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஜன 19, 2025


Google News
Latest Tamil News
உறவினரின் கைமாறு கடமை!

சில மாதங்களுக்கு முன், மொபைலில் என்னைத் தொடர்பு கொண்டார், உறவினர் ஒருவர். விபத்தில் சிக்கி, அதிகப்படியான ரத்தத்தை இழந்து, உயிருக்குப் போராடும் அவரது மனைவிக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரத்த தேவைக்காக, ரத்த தானம் செய்வோரை ஏற்பாடு செய்து தருமாறு வேண்டினார்.

நானும், எனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலமாக, அவர் கேட்ட ரத்த வகை உடையவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி, ரத்த தானம் செய்ய வைத்து, அறுவை சிகிச்சைக்கு உதவினேன்.

அதன்பின், வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து, நலம் பெற்று வீடு திரும்பினார், உறவினரின் மனைவி.

அண்மையில், உறவினரை பார்ப்பதற்காக, அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது தான், மனைவியோடு மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீடு திரும்பியிருந்தார், உறவினர்.

'எதற்காக மறுபடியும் மருத்துவமனைக்கு, மாதாந்திர பரிசோதனைக்காகவா?' என்று, உறவினரிடம் வினவினேன்.

'மாதாந்திர பரிசோதனைக்கெல்லாம் அவசியமில்லை என கூறிவிட்டார், மருத்துவர். ஏதாவது பிரச்னை என்றால் மட்டும், பரிசோதனைக்கு வரும்படி அறிவுறுத்தியிருக்கிறார். மற்றபடி, மருந்து மாத்திரைகளை சரிவர சாப்பிட்டாலே போதுமாம்.

'ஆனால் நாங்கள், மூன்று மாதத்துக்கு ஒருமுறை மருத்துவமனைக்குச் சென்று வருகிறோம். அதற்கு காரணம், 'கைமாறு கடமை'யை செய்வதற்காக தான்.

'அவசரத்திற்கு, என் மனைவிக்கு தேவைப்படும் ரத்தத்தை, மனிதாபிமானத்தோடு சிலர் கொடுத்ததால் தான், அவள் உயிர் பிழைக்க முடிந்தது. எனவே, நாம் பெறுபவராக மட்டுமே இல்லாமல், தருபவராகவும் இருக்கலாம் என்பதற்காக, தேவைப்படும் யாருக்கேனும் உதவட்டுமே என, இருவருமே ரத்த தானம் செய்து வருகிறோம்...' என்றார்.

அவர்களின் மனிதாபிமானத்தையும், நன்றியுணர்வையும், மனதார வாழ்த்திவிட்டு வந்தேன்!

- ஆர்.ஜெயசங்கரன், விழுப்புரம்.

பயனுள்ள வீடியோவும், பலனும்!

சென்னையில், 'கேம்ப்' ஒன்றில் கலந்து கொள்ள, அலுவலகம் சார்பில் கூறினர். 'கேம்ப்' ஒரு மாதம் நடைபெறுவதால், எனக்கு, 'டூ-வீலர்' தேவைப்பட, ரயில் மூலம் வண்டியை சென்னைக்கு எடுத்து சென்றேன்.

பார்சல் அலுவலகத்தில், 'டூ--வீலரை' பெற்று, ஏற்கனவே வாங்கி சென்ற பெட்ரோலை வண்டியில் ஊற்றி இயக்க, அரை மணி நேரம் முயன்றும் முடியவில்லை.

அப்போது, அந்த பக்கம் வந்த சிறுவன் ஒருவன், 'அங்கிள், பெட்ரோல், 'டியூபை' கழற்றி விட்டீங்களா?' என கேட்டான்.

'பெட்ரோல், 'டியூபை' கழற்றினால், பெட்ரோல் வீணாக போகாதா?' என்றேன்.

சிரித்த அவன், 'அங்கிள், பெட்ரோல், 'டேங்க் டேப்'பை பூட்டி வைத்து விட்டு, 'டியூபை' மட்டும் கழற்றி விடுங்கள். அப்புறம், கொஞ்சமாக பெட்ரோல் வெளியே செல்லும்படி, 'டேங்க் டேப்'பை திருகி விடுங்கள். அதன்பின், முதலில் இருந்தது போல், 'டியூபை' பொருத்தி, 'ஸ்டார்ட்' செய்யுங்கள், வண்டி, 'ஸ்டார்ட்' ஆகிவிடும்...' என்றான்.

நாமும் முயற்சி செய்து பார்ப்போமே என, அதன்படி செய்தேன். 'டூ--வீலர்' மறுகணமே, 'ஸ்டார்ட்' ஆனது. வியந்து போய், 'தம்பி எப்படிடா...' என்றேன்.

'அங்கிள், ஸ்டேஷனில் பெட்ரோல் முழுவதையும் எடுத்து விடுவதால், 'டேங்க்' மற்றும் அது சார்ந்த, 'டியூப்'களில் காற்று புகுந்து விடும். மேற்கொண்டு நாம் பெட்ரோல் ஊற்றி, வண்டியை இயக்கினால், 'ஸ்டார்ட்' ஆகாது.

'ஏனென்றால், 'டேங்க், டியூப்'களில் காற்று புகுந்து இருப்பதால், பெட்ரோல், 'சர்குலேஷன்' ஆகாது. காற்றை, 'ரிலீஸ்' செய்து விட்டால் மட்டுமே, பெட்ரோல், 'சர்குலேஷன்' ஆகி, வண்டி, 'ஸ்டார்ட்' ஆகும்...' என்றான்.

அவனை பாராட்டி விட்டு, 'இது உனக்கு எப்படி தெரியும்?' என்றேன்.

அப்போது, லக்கேஜுடன் வந்த அவனது அப்பா, 'சார், பொது அறிவு, 'டெக்னிக்கல்' மற்றும் 'மெக்கானிக் வீடியோ'களை, 'யு-டியூப்' சேனலில் பார்க்கிறான். தினசரி, இரண்டு தகவல்கள் என்ற அடிப்படையில் கற்றுக் கொள்கிறான்.

'இதனால் அவனுக்கு பல தொழில்நுட்ப விஷயங்கள் தெரியும். பல நேரங்களில் அவன் கற்று கொண்ட தகவல்கள், எனக்கும் கைக் கொடுத்திருக்கிறது...' என்றார்.

அவனையும், அவனது தந்தையையும் பாராட்டினேன்.

இப்போது, வெட்டி வீடியோக்கள் பார்ப்பதை தவிர்த்து, பயனுள்ள வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

அனைவரும் இது போன்ற வீடியோக்களை கண்டு, பயன் பெறுங்களேன்...

- ப.சிதம்பரமணி, கோவை.

வீண் பகட்டு எதற்கு?

சமீபத்தில் நெருங்கிய உறவினர் ஒருவர், தன் மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க மனைவியுடன் வந்திருந்தார். சிறிது நேரம் பேசிவிட்டு, காபி மற்றும் ஸ்நாக்ஸ் முடித்தவுடன், பையில் இருந்து, சாதாரண பாரம்பரிய திருமண அழைப்பிதழை எடுத்தார்.

பணக்கார வீட்டுப் பத்திரிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நான், 'என்னங்க பத்திரிகை மிகவும் எளிமையாக உள்ளதே...' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'நீங்கள் நினைப்பது போல் நாங்களும், 500 ரூபாய் மதிப்புள்ள அழைப்பிதழை தான் தேர்வு செய்து, மகனிடம் காட்டினோம்.

'அதைப் பார்த்து, 'கல்யாணம் முடிந்த பிறகு இந்த, 500 ரூபாய் மதிப்புள்ள பத்திரிகையை அனைவரும் துாக்கி போட்டு விடுவர். இதனால், யாருக்கும் எந்த ஒரு பயனும் இல்லை. அதற்கு பதில், அந்தப் பணத்தில் நல்ல ஒரு தட்டாக வாங்கி, அதில் வைத்து, அழைப்பிதழ் தந்தால், அதை உபயோகிக்கும் போதெல்லாம் நம் ஞாபகம் வரும்...' என்றான், மகன். எங்களுக்கும் அதில் உள்ள நியாயம் புரிந்தது...' என்றார்.

அழகிய பூ வேலைப்பாடுகள் செய்த தாம்பூலத் தட்டில் வைத்து, பத்திரிகையை கொடுத்து, 'கண்டிப்பாக குடும்பத்துடன் திருமணத்திற்கு வாருங்கள்...' என்று கூறி கிளம்பினர்.

வெறும் பகட்டுக்காக அச்சடிக்கப்படும் விலை உயர்ந்த அழைப்பிதழ், குப்பைக்குப் போவதை தவிர்த்து, உருப்படியான ஒரு பரிசுப் பொருளுடன் அழைப்பிதழ் கொடுக்கும் இந்த யோசனையை பின்பற்றலாமே!

பூவை சுபாவாணன், கோவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us