Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
மூதாட்டியின் வித்தியாசமான சிந்தனை!

சமீபத்தில், பள்ளிக்கூடம் ஒன்றின் வழியாக சென்று கொண்டிருந்தேன்.

அப்போது, பள்ளிக் கூட வாசல் அருகில், மிட்டாய்களுடன், கருவேப்பிலை, முருங்கை கீரை உட்பட, பல வகை கீரைகள் விற்றுக் கொண்டிருந்தார், பாட்டி ஒருவர்.

வாகனத்தை நிறுத்தி, அவரிடம் கீரைகள் வாங்கினேன். அனைத்தும் மிக சுத்தமாகவும், 'பிரஷ்' ஆகவும் இருந்தன.

அவரிடம், 'பள்ளி வாசலில் உங்களை போன்ற பாட்டிகள், மிட்டாய் தான் விற்பர். ஆனால், நீங்கள் கீரை விற்கிறீங்களே... இந்த யோசனை எப்படி தோன்றியது?' என்றேன்.

'பிள்ளைகளை அழைத்து வரும் தாய்மார்கள், அவர்களை பள்ளியில் விட்டு விட்டு, 'கருவேப்பிலை தீர்ந்து போச்சு. கீரை வாங்கணும். பக்கத்தில் கடை ஏதும் இல்லை...' என பேசுவதை கேட்டு, எனக்கு இந்த யோசனை வந்தது.

'கருவேப்பிலை மற்றும் கீரை வகைகளை வாங்கி, வியாபாரம் செய்ய துவங்கினேன். இப்போது, பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு விட வரும் தாய்மார்கள், என்னிடம் கருவேப்பிலை மற்றும் கீரை வகைகளை வாங்கி செல்கின்றனர்.

'மேலும் பள்ளி ஆசிரியர்களும், கீரை வாங்கி செல்கின்றனர். மிட்டாய் வியாபாரத்தை விட, கீரை வியாபாரம் செய்ததில் இருந்து, கையில் கணிசமான காசு புழங்குகிறது...' என்றார்.

பள்ளிக்கூட வாசல்களில் மிட்டாய் விற்கும் மூதாட்டிகள், இது போன்று, தாய்மார்களின் தினசரி தேவைகளை அறிந்து, வாங்கி விற்று, வருமானத்தை பெருக்கலாமே!

— கே. இலக்கியா, கோவை.

புதுமையான மொய் கவர்!

தெரிந்த நபரது மகளின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமக்களுக்கு மொய் பணம் தர, கவர் வாங்க மறந்து விட்டதால், அருகில் இருந்த கடைகளில் கேட்டேன்.

கவர் காலியாகி விட்டதாக கூறவே, என்ன செய்வதென தெரியாமல், மண்டபத்தில் இருந்தவரிடம் விசாரித்தேன்.

'மண்டபத்தின் வரவேற்பாளர் மேஜையில், நிறைய கவர்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. கூடவே பேனாவும் உள்ளது. நீங்கள் மணமகள் வீடு என்றால், கவரில் மணமகள் பெயர் முதலில் பொறிக்கப்பட்டு, இருக்கும். அந்த கவரை எடுத்து, மொய் பணம் வைத்து, உங்கள் பெயரை எழுதி கொடுத்து விடலாம். மணமகன் வீடு என்றால், மணமகன் பெயர் முதலில் பொறிக்கப்பட்டு இருக்கும்...' என்றார்.

அதன்படி, கவரை எடுத்து, மொய் பணம் செலுத்தினேன்.

பின்னர், அது குறித்து பெண்ணின் தந்தையிடம் கேட்டேன்.

'விழாவிற்கு வரும் பலரும், பக்கத்தில் கவர் வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வருவர். பல நேரங்களில் மொய் கவர் கிடைப்பதில்லை. இதனால், சில கிலோ மீட்டர் சென்று, கவர் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

'பணமாகவே பலரும், மேடையில் மணமக்களிடம் கொடுத்து விடுகின்றனர். இதில் சிலர் பெயர் எழுதாமலும், கவர் தருகின்றனர். எனவே, அது மணமகனுக்கானதா அல்லது மணமகளுக்கு சேர்ந்ததா, என்ற குழப்பமும் ஏற்படுகிறது.

'குறிப்பாக, மணமகள் வீட்டார், மொய் பணத்தை நம்பி, எதாவது ஏற்பாடு செய்திருப்பர். போதிய பணம் கைக்கு கிடைக்காமல், தர்ம சங்கடத்துக்கு ஆளாவர். இதை கருத்தில் கொண்டு, இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம்...' என்றார்.

அவரது வித்தியாசமான முயற்சியைப் பாராட்டி வந்தேன்.

— ப.சிதம்பரமணி, கோவை.

வித்தியாசமான குறியீடா உஷார்!

உங்களது காம்பவுண்ட் அல்லது வீட்டு சுவரில், வித்தியாசமான குறியீடுகள் இருந்தால், கொஞ்சம் உஷாராக இருங்கள். அவை திருடர்கள் போட்டு வைக்கும் குறியீடுகளாக இருக்கலாம்.

ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஓர் அர்த்தம் உண்டு.

'இந்த வீட்டில் அதிக ஆட்கள் இருக்கின்றனர். இந்த வீட்டில் அதிக ஆட்கள் இல்லை; இந்த வீட்டில் ஆண்கள் கிடையாது; இந்த வீட்டில் ஒரே ஒரு ஆண் தான்; இந்த வீட்டில் நிறைய பணம், நகை இருக்கிறது; இந்த வீட்டில் கொள்ளையடிப்பது வீண்...' என்று ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஒரு அர்த்தம் உண்டு.

பல வீடுகளை வேவு பார்க்கும் கொள்ளை கூட்டம், குழப்பம் வராமல் இருக்க, இது போன்று குறியீடுகளை போட்டு வைப்பதாக, உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார், காவல் துறை.

சிலர், தங்கள் வீட்டு சுவரில் இருக்கும் இந்த குறியீடுகளை பார்த்தும், அசட்டையாக இருந்து விடுகின்றனர்.

உங்கள் வீட்டு சுவரில் வித்தியாசமான குறியீடுகள் இருந்தால், வீட்டை கொள்ளை கும்பலொன்று வேவு பார்க்கிறது, என்று அர்த்தம்.

எனவே, அந்த குறியீடுகளை உடனடியாக அழித்து விடுங்கள். முன் எச்சரிக்கையாக இருப்பது நமக்கு நல்லது!

— ஜெ.கண்ணன், சென்னை.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us