Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/உண்மையான குரு பக்தி எது!

உண்மையான குரு பக்தி எது!

உண்மையான குரு பக்தி எது!

உண்மையான குரு பக்தி எது!

PUBLISHED ON : மார் 16, 2025


Google News
Latest Tamil News
சாது ஒருவரை உணவருந்த அழைத்த சிவ பக்தன் ஒருவன், அவரிடம் ஒரு வாழை இலை அறுத்து வரச் சொன்னான்.

வாழை மரத்திலிருந்து ஓர் இலையை நறுக்கினார், சாது. வெட்டப்பட்ட தண்டுப் பகுதியில் இருந்து சில சொட்டுக்கள் நீர் வடிந்ததைக் கண்டவர், 'ஐயோ, ஓர் உயிரை வெட்டி விட்டேனே...' என, நினைத்த உடனே, மயங்கி சாய்ந்து விட்டார், சாது.

ஒரு பாம்பு, தவளையைப் பிடித்து விட்டது. பாம்பின் வாயில் அகப்பட்டுத் துடிக்கும் தவளையின் நிலை கண்டு, அவர் துடித்தார். அந்த பக்தர் வேறு யாருமல்ல; கூரத்தாழ்வார். ராமானுஜரின் சீடர். அனைத்து ஜீவராசிகளிலும் கடவுளைக் கண்டவர். துன்புறுவோருக்காக வேதனைப்பட்டுக் கண்ணீர் சொரிந்தவர்.

குறுநில மன்னராகப் பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்த அவர், தம் சுகபோகங்களை எல்லாம் துறந்து, ஆன்மிகத் துறையில் ஈடுபட முன்வந்தது, அவரது பெரும்பேறு. ராமானுஜரின் சீடராக இருந்து, அவரது கருத்துக்களைப் பரப்ப பேருதவியாக இருந்தார்.

தான் வசித்த மாளிகையைத் துறந்து வெளிவந்த போது, கூரத்தாழ்வாருடன் வந்த அவர் மனைவி, ஒரு தங்கக் கிண்ணத்தை எடுத்து வந்தார். அவர் செல்வச் செழிப்பில் வளர்ந்த போது, சாப்பாட்டுக்கு பயன்படுத்திய பொற்கிண்ணம் அது.

'அதைத் துார எறிந்துவிடு. கள்வர்கள் நம்மை நாடி வர அது வழிவகுக்கும்...' என்றார்.

பொருளாசைப் பற்று விடுவது என்றால், அதுதான். குருவை இம்சிப்பதைப் பார்க்கப் பிடிக்காமல், தன் கண்ணையே குத்திக் கொண்ட பெரியவர். எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டவர்.

இத்தகைய உண்மையான பக்தன், இன்னொருவன் அல்லல்படும் போது வேதனைப்பட்டுக் கண்ணீர் விடுகிறான். அவனுடைய துயர் நீக்கப் பெரிதும் ஆர்வம் காட்டுகிறான். இந்த உணர்வு பிறக்க காரணம் என்ன?

எல்லாருமே, எல்லாமே, அனைத்து உயிரினங்களும், மரங்களும், செடிகளும் கூட, ஆண்டவனின் படைப்பு. இவை அனைத்திலும் ஆண்டவன் உறைகிறான். ஆன்மாவும் ஒரே மாதிரி தான். முற்பிறவியின் காரணமாக எந்த உயிரினமாகப் பிறவியெடுத்தாலும், ஆன்மா ஒன்றே.

கடவுளிடம் பிரேமை உள்ளவன் இப்படித்தான் எண்ணுவான். இதுதான் உண்மையான குரு பக்தி; மெய்யான இறை பக்தி என்பது, இதன் மூலம் நாம் அறியும் உண்மை.

அருண் ராமதாசன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us