Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : மார் 16, 2025


Google News
Latest Tamil News
ஹிந்திக்கு செல்லும், சிவகார்த்திகேயன்!

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என, மூன்று படங்களை இயக்கிய, அட்லி அதையடுத்து ஹிந்தியில், ஷாருக்கானை வைத்து, ஜவான் படத்தை இயக்கினார். சல்மான்கானை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டார். ஆனால், அந்த படம், 'டிராப்' ஆகிவிட்டது.

அல்லு அர்ஜுனின், 'கால்ஷீட்'டும் உடனடியாக கிடைக்காத நிலையில், தற்போது, சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பி இருக்கிறார், அட்லி. இதனால், உற்சாகம் அடைந்திருக்கும், சிவகார்த்தியகேன், தற்போது நடித்து வரும், மதராஸி மற்றும் பராசக்தி படங்களை முடித்ததும், அட்லி இயக்கத்தில் நடித்து, பாலிவுட்டிலும் கொடி நாட்டி விட தயாராகி வருகிறார்.

—சினிமா பொன்னையா

மூன்று நகரங்களில் வீடு வாங்கிய, ராஷ்மிகா மந்தனா!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தை சேர்ந்தவராக இருந்த போதும், ஹைதராபாத்தில் தான் முதன்முதலாக, 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சொகுசு பங்களா வாங்கினார்.

அதன் பின், ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியதும், ஸ்டார் ஹோட்டல்களில் தங்க பிடிக்காமல், மும்பையில், 12 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியவர், தற்போது பெங்களூருவிலும், 8 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கி இருக்கிறார்.

எலீசா

தமிழில், 'பிசி' ஆகும் மலையாள நடிகை, மமிதா பைஜூ!

மலையாளத்தில், பிரேமம் படத்தில் நடித்த, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூவருமே, அந்தப் படத்தின், 'ஹிட்' காரணமாக தென் மாநில படங்களில், 'பிசி' ஆகிவிட்டனர்.

தற்போது, மலையாளத்தில், பிரேமலு என்ற படத்தில் நடித்து பிரபலமான, மமிதா பைஜூவும் தமிழில், காலடி வைத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷுடன், ரெபல் என்ற படத்தில் அறிமுகமான இவர், விஜயின், ஜனநாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி, தமிழில், 'பிசி' ஆகி வருகிறார்.

எலீசா

கீர்த்தி சுரேஷுக்கு, கணவர் போட்ட தடை!

திருமணத்திற்கு முன் கடைசியாக, பேபி ஜான் என்ற ஹிந்தி படத்தில், படு, 'கிளாமர்' ஆக நடித்திருந்தார், கீர்த்தி சுரேஷ். அடுத்தபடியாக பாலிவுட்டிலும், அவர், பெரிய சுற்று வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென்று தன் நீண்டகால காதலரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, தொடர்ந்து சினிமாவில் நடிக்க, 'ரெட் சிக்னல்' போட்டு விட்டார், கணவர் ஆண்டனி. அதனால், சினிமாவை விட்டு முற்றிலுமாக வெளியேறிய கீர்த்தி சுரேஷ், சின்னத்திரை நிகழ்ச்சிகளில், ஜட்ஜாக பங்கேற்று வருவதோடு, சில, 'டிவி' நிகழ்ச்சிகளை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

- எலீசா

குத்தாட்டத்துக்கு, ரூ.3 கோடி சம்பளம்!

விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்த, பூஜா ஹெக்டே, தற்போது மீண்டும் அவருடன், ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்நேரத்தில், ரஜினியின், கூலி படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டுள்ளார். அதோடு, மூன்று நாட்கள் படமாக்கப்பட்ட இந்த பாடலில் நடிப்பதற்கு, மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார், பூஜா ஹெக்டே.

எலீசா

கறுப்புப் பூனை!

டிராகன் பட நடிகைக்கு தமிழில் நடித்த முதல் படமே, 'சூப்பர் ஹிட்' ஆக அமைந்து விட்டதால், மேல் தட்டு, 'ஹீரோ'களின் பட வாய்ப்புகளுக்கு கடை திறந்து வைத்திருக்கிறார். மேலும், மெகா பட்ஜெட் படங்களை தட்டித் துாக்க வேண்டும் என்பதற்காக, சில முக்கிய சினிமா மேனேஜர்களை தன் பக்கம் இழுத்துள்ளார், நடிகை.

தன் படக்கூலியை, 10 முதல் 15 கோடி ரூபாயாக உயர்த்தி காட்டினால், ஒரு படத்திற்கு, 25 சதவீதம் கமிஷன் வெட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு, சினிமா மேனேஜர் வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளார்.

தாரா நடிகையின், 'ஹீரோயினி' மார்க்கெட் சரிந்திருக்கும் நேரம் பார்த்து, சில மூன்றாம் தட்டு, 'ஹீரோ'கள் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க, அவர் வீட்டு கதவை தட்டி வருகின்றனர்.

ஆனால், அம்மணியோ, 'ஹீரோயின் மார்க்கெட் சரிந்தாலும், முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பேன். 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடிக்க, ஒரு நாளும் இறங்கி வர மாட்டேன்...' என, தன்னை துரத்தி வந்த அந்த நடிகர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்து அனுப்பியுள்ளார், தாரா நடிகை.

சினி துளிகள்!

* டிராகன் படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்தார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை கையாடு லோகர். அதையடுத்து, அதர்வாவுக்கு ஜோடியாக, இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

* கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த, ஓ-2, கனெக்ட் மற்றும் அன்னபூரணி போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இருப்பினும், தற்போது நடித்து வரும், ராக்காயி படத்தை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார், நயன்தாரா.

* அஜித்துடன், அமர்க்களம் படத்தில் நடித்தபோது, அவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பின், சினிமா பக்கமே வரவில்லை. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின், அடுத்தபடியாக, அஜித் நடிக்கும் புதிய படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us