Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கேப்டன் விஜயகாந்த்! (29)

கேப்டன் விஜயகாந்த்! (29)

கேப்டன் விஜயகாந்த்! (29)


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 2009ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், புதுச்சேரியையும் சேர்த்து, 40 இடங்களிலும், தே.மு.தி.க., வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. ஆனாலும், தே.மு.தி.க., கட்சி, 10 சதவீத வாக்குகள் பெற்று, அனைவரையும் வியக்க வைத்தது. அ.தி.மு.க.,வுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தை, தே.மு.தி.க., கைப்பற்றியது.

மனம் தளரவில்லை, துணிவே துணை என்று தொடர்ந்து உற்சாகமாக மக்களுக்காக குரல் கொடுத்தார், விஜயகாந்த்.

அடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கான புதிய வியூகம் குறித்து அரசியல் விமர்சகர்கள் அலச ஆரம்பித்தனர்.

தமிழகத்தின் பிரதான இயக்கம், தி.மு.க., ஸ்டாலின் கடந்த 2021ல் முதல்வரானதற்கு பின்பே, தலைநகர் டில்லியில் சொந்த கட்டடத்தில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால், தே.மு.தி.க.,விற்கு , தொடக்கம் முதலே, டில்லியில் கட்சி அலுவலகம் உண்டு. அதை திறக்க அப்போது, டில்லி சென்றார், விஜயகாந்த்.

கடந்த, 1998ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டில்லி முதல்வராக இருந்த, ஷீலா தீட்சித், முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி. டில்லி சென்ற விஜயகாந்த், ஷீலா தீட்சித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். தலைநகர தமிழர்களின் சார்பாக அவர்களது அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அங்கு நிருபர்கள் கூட்டத்தில், 'தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன்!' என்று எழுதிக்கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ள தயார், என்று பேசினார். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்கிற தலைவர்களும், இயக்கங்களும் கிடைப்பது அத்தனை எளிதா என்ன!

சி னிமாவுக்கும், அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை, விஜயகாந்துக்கு உணர்த்தியது, 2011ம் ஆண்டு.

கோலிவுட்டின் உள்விவகாரங்கள் உட்பட, ஒவ்வொன்றிலும் நண்பர், ராவுத்தரின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. ராவுத்தர் சொன்னால் சரியாக இருக்கும் என்று அமைதியாக இருப்பார், விஜயகாந்த். நண்பரின் சொல்லை மீறி, விஜயகாந்த் சென்றதாக வரலாறு கிடையாது.

தயாரிப்பாளரின் நீண்ட கால பாரம்பரியம், அனுபவம், தற்போதைய வாழ்க்கைத்தரம் என, ஒவ்வொன்றையும் ஆராய்ந்து முடிவெடுப்பதில் ராவுத்தர், ராஜாவாக இருந்தார்.

ஆனால், அரசியலில், விஜயகாந்துக்காக தங்களை வருத்தி கொள்ளும், ராவுத்தர் போன்றவர்கள் எவருமில்லை. ஊராட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை, அவரது ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களையே பெரும்பாலும் வேட்பாளராக நிறுத்தினார். ஆனால், விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற முடிவு, தரை தட்டிய கப்பலாகி போனது.

கடந்த, 2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல். கருணாநிதியின் வீழ்ச்சியை காசு பணமாக்க, 'லெட்டர்பேட்' கட்சிகளும் களம் இறங்கின. நிஜத்தில், போயஸ் கார்டனின் கதவுகள், விஜயகாந்துக்காக மட்டுமே காத்திருந்தன.

கருணாநிதி எதிர்ப்பு அலையை வகையாக பயன்படுத்தி கொள்வதில், அ.தி.மு.க., மேலிடம் மும்முரம் காட்டியது. ஆனால், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதாவுக்கு, விஜயகாந்தை ஒரு கட்சித் தலைவராக நினைத்து பார்ப்பதற்கு துளிகூட இஷ்டம் இல்லை. நடுவில் இருப்பவர்கள் விட்டு விடுவரா? ஓயாத வற்புறுத்தல்களால் மலையையும் மயக்கினர்.

அப்போது, பல்வேறு வழக்குகளில் சிக்கியிருந்த ஜெயலலிதாவுக்கும், மீண்டும், தமிழக முதல்வராகி விட்டால் போதும். நீதிமன்ற படிகளில் ஏறுவதிலிருந்து கொஞ்சமாவது ஆசுவாசப்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணம், தோன்றி கொண்டே இருந்தது.

'க ணவனே கண்கண்ட தெய்வம்ன்னு சொல்வாங்க. எனக்கு மனைவியே கண்கண்ட தெய்வம்...' என்ற, விஜயகாந்தின் மேன்மையான உரையை நீங்களும் காணொலியில் கண்டிருக்கலாம்.

'பெண்களுக்கு, 33 சதவீதம் இடம் கொடுக்கணும்ன்னு எல்லாரும் போராடுறாங்க. நான் என்னோட வாழ்க்கையில் என் மனைவிக்கு, 50 சதவீத உரிமை கொடுத்திருக்கேன்...' என்றார், விஜயகாந்த்.

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., காலத்திலேயே, 'கிச்சன் கேபினெட்'கள் உயிர்த்தெழத் துவங்கி விட்டன. விஜயகாந்த் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல. விஜயகாந்துக்கும், மனைவி சொல்லே மந்திரம் என்றானது.

ஜெயலலிதாவுடன் இணைந்து பணிபுரிவதில் உள்ள சாதக, பாதகங்கள் அலசி ஆராயப்பட்டன.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுபமாக முடிந்தது. முன்னாள் அமைச்சர், பண்ருட்டி ராமச்சந்திரன் சகிதமாக, போயஸ் மாளிகைக்குள் பிரவேசித்தார், விஜயகாந்த்.

மனசுக்குள் மத்தாப்பூ மலரா விட்டாலும், அப்போதைக்கு அக்னி நட்சத்திரம் வெளியே தெரியாமல், சுந்தரப் புன்னகையால் திருஷ்டி கழித்து கொண்டனர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும். தே.மு.தி.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையொப்பமிட்டு, நிறைவேற்றினர். தனித்தனியே சூறாவளிப் பிரசாரத்துக்கு திட்டம் வகுத்தனர்.

கடந்த, 2011 தேர்தலில் இளைய தலைமுறையினர் பெருமளவில் முதன் முதலாக ஓட்டளித்தனர். அவர்களின் மே லான ஆதரவு யாருக்கு போய் சேரும் என்பது புதிராக காணப்பட்டது.

அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிட்டு, 147 இடங்களை அபாரமாக கைப்பற்றியது. ஸ்ரீரங்கம் தொகுதியில், 41,848 ஓட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார், ஜெயலலிதா.

ஒட்டுமொத்தமாக, 'இந்த முறை, ஜெயலலிதாவுக்கே ஆதரவு...' என்று பகிரங்கமாக அறிவித்தன, கோலிவுட்.

விருத்தாச்சலத்தில் நிற்காமல், ரிஷிவந்தியம் தொகுதியில் களம் இறங்கினார், விஜயகாந்த். அப்போது, ரிஷிவந்தியம், காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. 2011ல், காங்கிரஸ் கட்சி சார்பில், எஸ்.செல்வராஜ் போட்டியிட்டார். அவரைவிடக் கூடுதலாக, 30 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேல் வாங்கி வாகை சூடினார், விஜயகாந்த்.

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், 29 தொகுதிகளில் வாகை சூடியிருந்தது. விஜயகாந்தின் அட்டகாசமான, 'என்ட்ரி'யால் தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. தி.மு.க.,வுக்கு மொத்தம், 21 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே தேர்வாகினர். அதில், மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் இருவரும் அடக்கம்.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், திருவாரூரில் போட்டியிட்டு, 50,429 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், கருணாநிதி. சென்னையில், மிகச் சிறிய தொகுதியான கொளத்துாரில் நின்றார், மு.க.ஸ்டாலின். கடைசி வரை அவரது வெற்றி இழுபறியாகவே இருந்தது.

பிறகு...

- தொடரும் - பா. தீனதயாளன்

நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us