Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ அந்துமணி பதில்கள்!

 அந்துமணி பதில்கள்!

 அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.முரளி, சென்னை: தேர்தல் வெற்றிக்குப் பின், ஒரு கட்சியால் அந்தந்த தொகுதியில் நல்லாட்சியைத் தர முடியவில்லை எனில், அடுத்து வரும் கட்சிக்குப் பதவி வாய்ப்பு வழங்கப்படும் என்ற, சட்ட வரைவு மசோதாவைக் கொண்டு வந்தால், பயந்தாவது நல்லாட்சியை அளிக்க, கட்சிகள் முன்வரும் அல்லவா?

நல்ல யோசனை தான்; நடைமுறைப்படுத்த, நிறைய மெனக்கெட வேண்டும்... முக்கியமாக, சட்டத்திற்கு ஒப்புக் கொள்ளாத அரசியல்வாதிகளை வழிக்கு கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல!

ஆர்.வித்யா, சென்னை: இந்த காலத்து இளைஞர்கள், கையில் கடிகாரம் கட்டுவதில்லை; பர்சில் பணம் வைத்துக் கொள்வதில்லையே... ஏன்?

மொபைல் போனிலேயே, நேரம் தெரிகிறது; பொருட்கள் வாங்க, போனில் உள்ள செயலிகள் வாயிலாகவே பணம் செலுத்தி விடலாம். பிறகெதற்கு கைக்கடிகாரமும், பையில் பணமும்!

* எஸ்.சிவா, நெல்லை: அமலாக்கத் துறை விசாரணையின் போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலையிட்டது சரியான நடைமுறையா?

அவர் தலையிடுகிறார் என்றால், மடியில் கனம் இருக்கிறது என்று அர்த்தம். இப்படி பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வது, ஒரு முதல்வருக்கு அழகல்ல!

ஏ.ருக்குமணி, கோவை: பணம் புரளும் பத்திரப்பதிவுத் துறை, தனியார் மயம் ஆவது, நல்ல விஷயம் தானே...

அரசிடம் இருந்தாலும், தனியார் வசம் போனாலும், அதைக் கையாள்பவர் நேர்மையாக இருந்தால் தான், அந்தத் துறை உருப்படும்!

* சி.கார்த்திகேயன், சாத்துார்: 'சாணக்கியர் தற்போது இருந்தால், பா.ஜ., அமித் ஷாவின் அரசியல் சூழ்ச்சியை பார்த்து வியந்திருப்பார்...' என்கிறாரே, காங்., பிரியங்கா?

சிரித்தபடியே பிரியங்கா, லோக்சபாவில் இதைச் சொன்னதைப் பார்த்து, ஆச்சரியப்பட்டேன்! இந்தப் பக்குவத்தை கைக்கொள்ளாத அவரது சகோதரர், ராகுல், '25 ஆண்டுகளாக நான் முயன்று முடியாததை, என் சகோதரி, ஐந்து நிமிடத்தில் செய்து விட்டார்; அதான், அமித் ஷாவைச் சிரிக்க வைத்து விட்டாரே!' எனக் கூறியது சிறப்பு! பிரியங்காவிடமிருந்து ராகுல், நிறைய பாடம் படிக்க வேண்டும் என, தோன்றுகிறது!

* வெ.பரமசிவன், சென்னை: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், ஒரு கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த அம்மாநில முதல்வர், உமர் அப்துல்லா, அங்கு திறப்பு விழாவுக்கு கட்டப்பட்டிருந்த ரிப்பன், நம் தேசியக் கொடியின் நிறத்தில் இருந்ததால், அதை வெட்ட மறுத்து விட்டாராமே... அவரை பாராட்டலாம் தானே...

மனதார பாராட்டலாம்! தொகுதி மறுவரையறை நகலை, 'லைட்டர்' உதவியுடன், பல்லைக் கடித்தபடி எரித்த நம்மூர் ஸ்டாலினுக்கும், உமருக்கும் இடையே உள்ள மாபெரும் வித்தியாசம் இது தான்!

ஜெ.மாணிக்கவாசகம், இடைப்பாடி: ஆட்சி, அதிகாரம் இல்லாத அரசியல்வாதி எப்படி இருப்பார்?

அ.தி.மு.க., விலிருந்து, தி.மு.க.,விற்கு தாவிய, ஓ.பன்னீர்செல்வம் போல!

வி.பிருந்தா, சென்னை: அரசியல்வாதிகளுக்கு, 'ஸ்கிரிப்ட்' எழுதித் தரும் வேலை எனக்குக் கிடைக்குமா?

எதிரிகளை பதம் பார்க்கும் வார்த்தைகளை யோசித்து, 'சிறப்பாக' எழுதத் தெரிய வேண்டும். எதுகை, மோனையுடன் சில ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்து, எகத்தாளமாய் எழுதி, அனைத்து கட்சி அலுவலகங்களுக்கும் அனுப்பி வையுங்கள்; அடுத்த தேர்தலுக்குள், எந்த கட்சியிலிருந்தாவது உங்களுக்கு அழைப்பு வரும்.

பீ.ஆல்தொரை, நீலகிரி: நீலகிரியிலேயே, வெயில் போட்டுத் தாக்குகிறதே... சென்னையில் நிலைமை எப்படியோ...

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது, ஆல்தொரை. தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, ஊர் ஊராக அலைந்த அரசியல்வாதிகளின் முகங்களைப் பார்த்தாலே புரிந்திருக்குமே! தேர்தல் முடிஞ்சாச்சு... அனைவரும், 'குளு குளு' இடங்களுக்கு, குடும்பத்துடன் கிளம்பி விட்டனர், பார்த்தீர்களா?

* மூ.வள்ளி, வீரபாண்டி: சாலை பாதுகாப்பை அதிகரிக்க, நாடு தழுவிய வழிகாட்டு நெறிமுறைகளை, சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளதே...

எல்லா மாநிலங்களும் அவற்றைப் பின்பற்றினால் நல்லது; ஆனால், அது நடக்கும் என நம்புகிறீர்களா, வள்ளி?

* பி.கன்னியம்மாள், ராமநாதபுரம்: 'மாவட்ட நீதிபதிகளை விமர்சிப்பதை கைவிட வேண்டும்...' என, உயர் நீதிமன்றங்களை, உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதே...

சரி தானே! உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுபவத்தை விட, மாவட்ட நீதிபதிகளுக்கு அனுபவம் குறைவாக இருக்கும். அவர்களுக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழிகாட்டிகளாக இருப்பது, ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்!

கு.மா.இளங்கோ, சென்னை: 'காலை வணக்கம்' சொல்வது நல்லதா? 'குட்மார்னிங்' சொல்வது நல்லதா?

'இனிய மகிழ்ச்சியான காலை வணக்கம்' எனச் சொல்வது, என் வழக்கம். எனக்கு வணக்கம் சொல்ல வருபவர்கள், நான் சொல்வதைக் கேட்டு, மிகுந்த உற்சாகமடைந்து, முகம் நிறைய சிரிப்பதைக் காண்கிறேன். நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன், இளங்கோ! இதை உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்; அவர்களும் சொல்ல ஆரம்பிப்பர்!

என்.ஆசைத்தம்பி, சென்னை: உங்கள், மொபைல் போனுக்கு, 'டெலிமார்க்கெட்டிங்' அழைப்புகள் வரும்போது, எப்படி தவிர்க்கிறீர்கள்?

அன்புடைய ஆசைத்தம்பி... நீங்கள் என்னை அழைக்கும் போது, என் மொபைல் போனில் உங்கள் பெயர் தெரியும். அப்படி தெரிந்தால் அழைப்பை ஏற்பேன். பெயர் தெரியாமல், வெறும் எண் மட்டுமே வந்தால், அத்தகைய அழைப்புகளை, 'அட்டெண்ட்' செய்யவே மாட்டேன்! 

சாந்தி சுந்தர், செங்கல்பட்டு: சமீப காலங்களில், வாசகர் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, வாஞ்சையுடன் அவர்கள் பெயரையும் குறிப்பிடுகிறீர்களே...

வாசகர்களாகிய நீங்கள், எங்கள் முதலாளிகள் அல்லவா! உங்களை கவுரவிப்பது தான் எனக்கு மகிழ்ச்சி, சாந்தி!

மு.க.இப்ராஹிம், துாத்துக்குடி: எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும், ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லையே...

திருட்டு ரயில் பயணம் செய்தால், தமிழ்நாட்டையே ஆளும் வாய்ப்பு கிடைக்கும் என, எண்ணுகின்றனரோ, என்னவோ!

டி.ராஜன், மதுரை: தற்போதும் தபால் கார்டு மற்றும் அஞ்சல் உறை வாயிலாக, வாசகர்களின் கேள்விகள், தங்களை வந்தடைகிறதா?

நிறைய வருகிறதே... இதோ உங்கள் தபால் கார்டும் வந்துள்ளதே, ராஜன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us