PUBLISHED ON : ஜூலை 06, 2025

பா - கே
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்து விட்டதால், 'பீச்'சில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
வழக்கமான இடத்தில், நண்பர்கள் அனைவரும் கூடியிருந்தோம்.
கையில், கருங்காலி மர கம்புடன், நெற்றியில் அகலமான பொட்டு வைத்திருந்த பெண்மணி ஒருவர், எங்களை நோக்கி வந்து, 'ஜோசியம் பார்க்கலையோ...' என்றார்.
'ஜோசியம் பார்ப்பது இருக்கட்டும். இப்ப நான் என்ன நினைக்கிறேன் என, சொல்லுங்க பார்க்கலாம்...' என்றார், லென்ஸ் மாமா.
'நான், உண்மையில் ஜோசியம் சொல்வேனா, மாட்டேனா என, நினைக்கிறீங்க...' என்றார், அப்பெண்மணி.
'அதான் இல்லை. நான், உன்னை இங்கு, 20 வருஷத்துக்கு மேலாக பார்த்துட்டு வர்றேன். இன்னுமா இந்த தொழிலில் இருக்கிறீங்கன்னு தான் யோசிக்கிறேன்...' என்றார், மாமா.
'நானும் தான், உன்னை இங்கு பலமுறை பார்த்துள்ளேன். ஆனால், ஒருமுறை கூட என்னிடம் ஜோசியம் பார்த்ததில்லையே...' என, பதிலடி கொடுத்தார், அப்பெண்மணி.
இடையில் புகுந்த, குப்பண்ணா, 'சரி... சரி... யாருக்கும் ஜோசியம் பார்க்க வேண்டாம். நாங்க கொஞ்ச நேரம், 'ரிலாக்ஸ்' ஆக இருக்க வந்துள்ளோம். தொந்தரவு செய்ய வேண்டாம்...' என, தன்மையாக கூற, முணுமுணுத்தவாறு அங்கிருந்து அகன்றார், அப்பெண்மணி.
'இப்படித்தான், ஒருமுறை ராமநாதபுர சேதுபதி ராஜா, ஒரு ஜோசியரை மடக்க நினைக்க, அவர் உஷாராக பதிலளித்து, தண்டனையிலிருந்து தப்பினார்...' என்றார், குப்பண்ணா.
'அது என்ன கதை...' என்றேன், நான்.
சொல்ல ஆரம்பித்தார், குப்பண்ணா:
ராமநாதபுரத்தை சேதுபதி மன்னர் ஆண்ட காலத்தில், இது நடந்ததாக கூறுவர். அவர், மக்களின் குறைகளை கேட்பதற்காக ஒவ்வொரு பகுதியாக போவாராம். அப்படிப் போனவர், கமுதி என்ற பகுதியில் துணியாலான கூடாரம் அமைத்து தங்கி இருந்தாராம். அப்போது, அங்கிருந்த மக்களுடைய குறைகளை அவர் கேட்டுட்டு இருந்தார்.
அப்போது, ஒரு தகவல் அவருக்கு கிடைத்தது. இந்த பகுதியில் பிரபலமான ஜோசியர் ஒருவர் இருக்கார். அவர் சொன்னது சொன்னபடி சரியாக இருக்கும் எனக் கூறினர், அங்கிருந்தவர்கள். மன்னருக்கு அதை சோதித்து பார்க்கலாமேன்னு ஆர்வம் வர, அந்த ஜோசியரை அழைத்து வரச் சொன்னார்.
அவர் வந்ததும், 'நான் ஒரு சின்ன ஜோசியம் கேட்கிறேன். அதை நீங்க சரியா சொல்லிவிட்டால், உங்களுக்கு பரிசு தருவேன். இல்லையெனில், தண்டனை தருவேன்...' என்றார், மன்னர்.
ஜோசியரை திணற அடிக்கணும்ன்னு மன்னனுக்கு ஆசை.
'சொல்லுங்க மன்னா...' என, பயத்துடன் கேட்டிருக்கார், ஜோசியர்.
'ஒண்ணும் இல்ல... இந்த கூடாரத்தில் இருந்து, நான் முன் வாசல் பக்கம் வெளியே வருவேனா அல்லது பின் வாசல் பக்கமாக வெளியே வருவேனான்னு உங்களால் சொல்ல முடியுமா? இப்பவே அதை கணித்து, ஒரு தாளில் நீங்க அதை எழுதித்தாங்க. அதுபடி நடந்தால், உங்களுக்கு பரிசு. இல்லையெனில், தண்டனை...' என்றார், மன்னர்.
தன் பதிலை எழுதி, மெய்க்காப்பாளரிடம் கொடுத்து, 'மன்னர் வெளியே வந்த பின் தான், இதைப் படிக்கணும்...' என்றார், ஜோசியர்.
இதையெல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருந்தனர், மக்கள். ஆனால், மன்னர் என்ன பண்ணார்ன்னா, அந்த கூடாரத்தின் முன்வாசல் பக்கமாகவும் வெளியே வரவில்லை; பின்வாசல் பக்கமாகவும் வெளியே வரவில்லை.
தன் வாளை எடுத்து, கூடாரத்தின் நடுபகுதியில் ஒரு வெட்டு வெட்டி, அது வழியாக வெளியே வந்துட்டாராம். அப்ப அவர், ஜோசியரை பார்த்துப் புன்னகை செய்து, 'நான் எப்படி வந்தேன், பார்த்தீங்களா?' என்றார்.
'பரவாயில்லை மன்னா, நான் எழுதிக் கொடுத்ததை படித்து பாருங்க...' என்றார், ஜோசியர்.
எடுத்து படிக்க, 'மன்னர், முன்வாசல் பக்கமாகவும் வரமாட்டார். பின் வாசல் பக்கமாகவும் வரமாட்டார். நடுவில் வெட்டி குறுக்கு வழியாகத் தான் வருவார்...' என, அதில் சரியாக எழுதியிருந்தார், அந்த ஜோசியர்.
மன்னருக்கு ஒரே ஆச்சரியம்.
'எப்படி இவ்வளவு சரியா கணிச்சீங்க?' என்றார்.
'வேற ஒண்ணும் இல்லை, மன்னா. இதில், ஜோசியம் எல்லாம் கிடையாது. எப்ப என்னை நீங்க சோதிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்களோ. அப்ப இப்படி ஏதாவது ஏடாகூடமா பண்ணுவீங்கன்னு நினைத்தேன்.
'அதனால், நீங்க ரெண்டு வாசல் வழியாகவும் வராமல், வேறு வழியாக வர முடிவு பண்ணியிருப்பீங்கன்னு தெரிந்து தான், அப்படி எழுதிக் கொடுத்தேன்...' என்றார், ஜோசியர்.
ஜோசியம் சொல்பவர்கள், ஜோசியத்தின் அடிப்படையில் இருக்கும் பல சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்து சொல்வர். இருப்பினும், தன்னிடம் ஜோசியம் கேட்பவர் மனநிலை எப்படியிருக்கும் என்பதையும் ஆராய்ந்து பார்த்து, அவர்களின் மனோபாவத்தை சொல்பவராக, பலர் உள்ளனர். இந்த கலை, ஜோசியர்களுக்கு மட்டுமல்ல. நமக்கு கூடத் தேவைப்படுது.
ஏனெனில், நம் முன் நின்று பேசுவோர், என்ன மனநிலையில் இருந்து பேசறாங்கன்னு கவனிக்கிற ஒரு கூர்மையான புத்தி நமக்கு வந்துவிட்டால், பல காரியங்களை நாம் சுலபமாக சமாளித்து விடலாம்.
இது மாதிரி, இன்னொரு வேடிக்கையான சம்பவம்...
மற்றவர்கள் முகங்களை பார்த்தே, ஜோசியம் சொல்வார், ஒரு முதியவர். ஒருநாள் எல்லாரும் அவரிடம் கூடி, ஜோசியம் கேட்டனர். அப்போது, போதையில் அங்கு போயிருக்கான், ஒரு குடிகாரன். கையில் காலியான மது பாட்டிலை வைத்திருந்தான்.
'ஜோசியரே இப்பவே எனக்கு சொல்லியாகணும். நான் இந்த பாட்டிலை உடைக்கப் போறேன். இது எத்தனை துண்டா உடையும்ன்னு சொல்லணும். சரியா சொல்லலைன்னா வயித்துல குத்திப்புடுவேன்...' என்றான், அந்த குடிகாரன்.
குடிகாரனை கொஞ்ச நேரம் நோட்டம் விட்ட முதியவர், பதிலை ஒரு தாளில் எழுதி, அவன் பையில் சொருகிட்டார்.
'சரி உடை. எத்தனை துண்டா உடையும்ன்னு அதில் எழுதியிருக்கேன்...' என்றார்.
அந்த குடிகாரன், பாட்டிலை ஓங்கினான்; ஆனா, உடைக்கலை.
'என்ன பெரிசு ஏமாந்து போனீங்களா...' என்றான், குடிகாரன்.
அதற்கு, 'நான் எழுதிக் கொடுத்ததை எடுத்துப் படி...' என்றார், முதியவர்.
பக்கத்தில் இருந்தவர், அந்த காகிதத்தை எடுத்து படித்தார்.
அதில், 'இவன் பாட்டிலை ஓங்குவான். ஆனால், உடைக்க மாட்டான்...' என, எழுதியிருந்தார், முதியவர். அசந்து போனான், குடிகாரன்.
குப்பண்ணா கூறி முடித்ததும், அனைவரும், 'கொல்' என, சிரித்தனர்.
'இது தான் மனசைப் படிக்கிறது...' என்றேன், நான்.