Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : ஜூன் 15, 2025


Google News
Latest Tamil News
பா - கே

திருநெல்வேலியிலுள்ள பள்ளி ஒன்றின் தலைமையாசிரியையும், பா.கே.ப., + கேள்வி - பதில் பகுதியின் தீவிர வாசகியுமான அவர், சமீபத்தில் என்னை சந்திக்க அலுவலகம் வந்திருந்தார்.

நலம் விசாரித்து, 'கடும் வெயில் நேரத்தில் வந்திருகிறீர்களே...' என்று கேட்டு, இளநீர் வாங்கி வர சொல்லி, அவரிடம் கொடுத்தேன். அவர் அருந்தி முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.

'மணி... உன்னை சந்திப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. பள்ளி விடுமுறை என்பதால், தற்சமயம், சென்னையிலுள்ள என் தங்கை வீட்டுக்கு வந்துள்ளேன். ரொம்ப நாளாச்சே. உன்னையும் சந்தித்து போக வந்தேன்.

'அதுமட்டுமல்லாமல், என் கணவருக்கு அடிக்கடி ஏதாவது உடல்நல கோளாறு ஏற்பட்டு, அவதிப்படுகிறார். எனவே, 'மாஸ்டர் ஹெல்த் செக்-அப்' செய்து விடலாம் என்பதற்காக, அழைத்து வந்துள்ளேன்.

'ஆனால், டாக்டர், மருத்துவமனை என்றாலே அலறுகிறார், மனுஷன். 'ஏதாவது கை வைத்தியம் செய்தால் போதும்...' என, அழிசாட்டியம் செய்கிறார். ஊருக்கு போய் விடலாம் என்ற நச்சரிப்பு வேறு. என்ன செய்வது என, தெரியவில்லை...' என்றார், வருத்தத்துடன்.

'அவரையும் இங்கு அழைத்து வந்திருக்கலாமே. நான் பக்குவமாக சொல்லி புரிய வைத்திருப்பேனே...' என்றேன்.

'ஐயோ... அது, யார் சொன்னாலும் கேட்காது...' என, அஃறினையில் பேசியவர், 'அப்படியே குண்டுக்கட்டாக துாக்கிக் கொண்டு தான் போகணும்...' என, அலுத்து கொண்டார்.

இது சம்பந்தமாக, முன்பு எப்போதோ படித்த ஒரு ஆய்வு கட்டுரை நினைவுக்கு வர, கூற ஆரம்பித்தேன்:

டாக்டர் என்றாலே, பெரும்பாலோருக்கு ஒரு பயம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும், அதை யாரும் ஒத்துக்கறதில்ல. பயப்படுவதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

இது சம்பந்தமாக சில, 'சர்வே' எல்லாம் எடுத்துள்ளனர். அநேகமாக எல்லாருக்குமே இந்த பயம் இருப்பதாக, அந்த புள்ளி விபரம் சொல்கிறது. அதுவும் பெண்களை விட, ஆண்களுக்கு தான் இந்த பயம் அதிகமாக இருக்கிறதாம்.

'எனக்கு தலையை வலிக்குது, வயிறு வலிக்குது'ன்னு வெளியில காட்டிக்கிட்டால், அதை, 'வீக்னஸ்'ன்னு நினைக்கின்றனர், ஆண்கள்.

சரி, இந்த டாக்டர் பயத்துக்கு என்ன காரணமாக இருக்கும். அதைப் பற்றியும் ஆய்வு செய்து, சில விபரங்களை சொல்லியிருக்கின்றனர், நிபுணர்கள்.

மனிதர்களில் பல பேர், சாகறதுக்குகூட பயப்படறதில்லை. ஆனால், நோய் என்றால் பயப்படுறாங்களாம். பொதுவாக, மனித சுபாவம், கெட்ட செய்தியை கேட்க விரும்புவதில்லை. டாக்டரிடம் போனால், அவர் என்ன சொல்லி விடுவாரோ என்ற பயம் ஏற்பட்டு விடுகிறது.

உங்க உடம்பில் ஒரு கோளாறு எனில், அதை சொல்லித்தானே ஆகணும். சொன்னால் உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக அதை சொல்லாமல் இருக்க முடியுமா?

இன்னொரு விதமான பயம் என்னவெனில், டாக்டரிடம் சென்றால், அவர் சொல்றபடியெல்லாம் நடக்க வேண்டியிருக்கும். நாம, நம் இஷ்டப்படி நடக்க முடியாதே அப்படிங்கற ஒரு நினைப்பும் வந்து விடுகிறது.

காபியை ரொம்ப பிரியமாக சாப்பிடறோம். டாக்டர் ஒரு மருந்தை கொடுத்து சாப்பிட சொல்லி, அது முடியறவரைக்கும் காபி குடிக்க கூடாதுன்னு சொல்லி விட்டால் என்ன செய்வதென தயக்கம். நம்ம பழக்க வழக்கத்தை மாத்திக்க சொல்வாரே என்ற பயம்.

டாக்டரிடம் சென்றால், அந்த நிமிஷத்தில் இருந்து நாம் இன்னொருத்தர் கையிலே விழுந்துடறோம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

இதெல்லாம் சேர்ந்து தான் உள்ளுக்குள்ளே பயமாக மாறுதுங்கறது, நிபுணர்கள் கணிப்பு.

நம் உடம்புக்கு ஒரு கஷ்டம் வந்தால், அதை வெளியிலே சொல்றதுக்கு தயங்கக் கூடாது; வெட்கப்படக் கூடாது. சரியான, டாக்டரை தேர்ந்தெடுக்கணும்.

அப்படி தேர்ந்தெடுத்ததுக்கு பின், டாக்டரைப் பற்றின பயத்தை விட்டுடணும்.

இப்படி நடந்துக்கிட்டாத்தான் உடனுக்குடன் நோயை கண்டுபிடிச்சு, அதை நிவர்த்தி செய்ய முடியும். இல்லையெனில், நோயை முற்ற விட்டுட்டு, அதுக்கு அப்புறம் அதை சரி செய்வதற்கு ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

- என்று கூறினேன், நான்.

'ரொம்ப நன்றி மணி. ஒரு தெளிவு கிடைத்தது, எனக்கு. இதை, அதுகிட்ட சொல்லி சமாதானப்படுத்தி, 'செக்-அப்'புக்கு கூட்டிட்டு போறேன்...' என்றார்.

'உங்க வீட்டுக்காரருக்கு, அன்புடன் கொஞ்சம் மரியாதையையும் சேர்த்துக் கொடுங்க. நீங்க சொல்றபடி கேட்பார்...' எனக் கூறி, அவரை அனுப்பி வைத்தேன்.

வாசகர்களே... உங்களுக்கும் இதுபோல் டாக்டர் பயம் இருந்தால், அதை இப்போதே விட்டொழியுங்களேன். உடல்நலம் முக்கியம்!



'அந்தக்கால பக்கங்கள்!' என்ற நுாலில் படித்தது:

'ஆயிரம் ரூபாய்க்கு, 50 மளிகை பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு, கட்டில், மெத்தை, பீரோ, டிரெஸ்சிங் டேபிள், சோபா, குஷன் நாற்காலி, தலையணைகள் மற்றும் 3டி போர்வைகள் போன்ற, 10 பொருட்கள் வழங்கப்படும்...' என்றெல்லாம் இன்றைக்கு பல இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்கின்றனர்.

இவ்வளவு மலிவான விலையில் இத்தனை பொருட்களா என, மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதையும் காண முடிகிறது.

மலிவான தொகையில் எப்படி இவ்வளவு பொருட்களை தர முடிகிறது, இவற்றின் தரம் என்னவாக இருக்கும்? இதுபற்றி வாங்குபவருக்கும் அக்கறையில்லை; விற்பவருக்கும் கவலையில்லை.

இதற்கெல்லாம் முன்னோடி எது தெரியுமா?

முந்துங்கள்!

விலை ரூ.2 - 12 - அணா தான், 110 சாமான்கள் அடங்கிய ஜெர்மன் பெட்டி.

சாமான்களின் விபரம்:

18 காரட் ரோல்டு கோல்டு, அழகிய நிப்புள்ள பவுண்டன் பேனா; 18 காரட் ரோல்டு கோல்டு, இமிடேஷன் வைர மோதிரங்கள் 2; சர்ட் பொத்தான்கள் செட் 12; கல்லிழைத்த புரூச் 1; ஜப்பான் நுாதன பொம்மைகள் 6; நேர்த்தியான கத்தி 1; காமினேஷன் நுாதன சாவி வளையமும் செயின் 1; உயர்ந்த ரக பென்சில்கள் 12; பென்சில் கிளிப்புடன் கூடிய கவர் 1; பலரக பென் ஹோல்டர்கள் 6; உயர்ந்த நிப்புகள் 12; மணிபர்ஸ் 1; ஜெர்மன் இங்கி புட்டி 1; இங்கி மாத்திரைகள் 12; சென்ட் புட்டி 1; தேசிய டிரான்ஸ்பர் படங்கள் 12; அழகிய பலரக சேப்டி பின்கள் 25. ஆக, 110 சாமான்கள் அடங்கிய ஜெர்மன் பெட்டி 1க்கு, ரூ.2 - 12 அணா.

ஜினைன் வாட்சு கம்பெனி, மிண்டு பில்டிங்ஸ், மதராஸ் என்ற விலாசத்தில் இயங்கி வந்த நிறுவனம், 1940களில் வெளியிட்ட விளம்பரம் தான் இது.

இம்மாதிரி விளம்பரங்கள் மூலம் என்ன தெரிய வருகிறது? இலவசங்களுக்கு மக்கள் அடிமையாகி ரொம்ப காலமாகி விட்டதை தான், இது காட்டுகிறது. ஹூம்... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வர்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us