Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

PUBLISHED ON : ஜூலை 21, 2024


Google News
Latest Tamil News
பா - கே

வெளியூர் சென்றிருந்தார், லென்ஸ் மாமா. மற்ற நண்பர்களும் இல்லாததால், மாலை அலுவலகம் முடிந்ததும், மாநகராட்சி பூங்கா ஒன்றுக்கு சென்றிருந்தேன்.

பூங்கா சுத்தமாகவே இருந்தது. வயது முதிர்ந்த ஆண்களும், பெண்களும் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் குழந்தைகள், பெற்றோர்களின் மேற்பார்வையில், ஊஞ்சல் மற்றும் சறுக்கு மரங்களில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

காலியாக இருந்த பெஞ்சில் அமர்ந்து, கையில் கொண்டு போயிருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அப்போது, இரண்டு, 'பெரிசு'கள் என் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.

வாழ்க்கையில ரொம்ப அடிப்பட்டு அவஸ்தைப் பட்டுக்கிட்டிருக்கிற மாதிரி தோற்றமளித்தார், ஒருவர்.

'இந்த உலகத்துல, மனுஷனா பொறந்ததைவிட, மாடா பொறந்திருக்கலாம்...' என்றார்.

'திடீர்ன்னு வந்து இப்படி சொன்னா அது எப்படி சார்?' என்றார், மற்றொருவர்.

'இப்பத்தான் சார், அந்த ஞானோதயமே எனக்கு வந்தது...'

'அதுக்கு என்ன காரணம்?' என்றார், மற்றொருவர்.

'என் பையனுக்கு வேலை தேடறேன் கிடைக்கல. பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறேன் கிடைக்கல, வீடு கட்ட கடன் கேக்கறேன் கிடைக்கல. மாடா பொறந்திருந்தா இது மாதிரி கவலையெல்லாம் கிடையாதுல்ல. பேசாம, புல்லோ, வைக்கோலோ தின்னுட்டு அசைபோட்டுக்கிட்டே படுத்திருக்கலாமே!

'இந்த உலகத்துல, முக்கியமான, ஆறு பிரச்னைகள் மனுஷனுக்கு உண்டு. ஆனால், அந்த, ஆறு பிரச்னைகளும், ஆடு, மாடு, செடி, கொடிகளுக்கு இல்லை.

'அந்த, ஆறு பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?

'முதல் பிரச்னை, 'ஆடு, மாடுலாம் நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு இல்லையே'ன்னு கவலைப்பட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறது இல்லை. ஆனா, மனுஷனுக்கு, வீடு தேவைப்படுது.

'ரெண்டாவது பிரச்னை, ஒரு கோழி இருக்கு. அது, 'நமக்கு போட்டுக்கறதுக்கு ஒரு சட்டை இல்லையே'ன்னு கவலைப்படுமா? ஆனா, மனுஷனுக்கு அந்த பிரச்னை உண்டு.

'மூணாவது, கல்விப் பிரச்னை. ஒரு பசுமாடு கவலையா நின்னுக்கிட்டிருக்கு. நீங்க கிட்ட போய், 'ஏன் பசுமாடே கவலைப்பட்டுகிட்டு இருக்கே?'ன்னு கேக்கறீங்க.

'அது, 'என் கன்னுக்குட்டிக்கு, எல்.கே.ஜி.,யிலே இடம் கிடைக்கலே. 'டொனேஷன்' கொடுக்கறதுக்கு, கையில பணம் இல்லை. சிபாரிசுக்கு யாரைப் பிடிக்கறதுன்னும் தெரியலை...' என்றா சொல்லிக்கிட்டு இருக்கும். அதுக்கு அந்த கவலையெல்லாம் கிடையாது. ஆனால், மனுஷனுக்கு அந்த கவலை உண்டு.

'நான்காவது பிரச்னை, வேலை வாய்ப்பு. வேலைக் கிடைக்கலைன்னு வேப்பமரம் கவலைப்படறதில்லை. ஆனா, மனுஷன் கவலைப்படுறான்.

'ஐந்தாவது, கல்யாணப் பிரச்னை. எருமை மாடு, பசு மாடுலாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடாது.

'ஆறாவது, பணம் சம்பந்தமான பிரச்னை. ஆடு, மாடுலாம் பணத்தை சேமிக்கணும்ன்னோ, எதுலயாவது முதலீடு செய்யணும்ன்னோ நினைக்கறதில்ல. பணத்தை எப்படி காப்பத்துறதுங்கற கவலையும் அதுகளுக்கு இல்லை.

'குதிரை, குளம்போட பொறக்குது. காடு மேடெல்லாம் கவலையில்லாம திரியலாம். ஆடு, உடம்புல ரோமத்தோட பொறக்குது. குளிரைப்பத்தி கவலைப்பட வேணாம். ஆனா, மனுஷன் மட்டும் தான் ஒண்ணுமில்லாம பொறக்கிறான். ஏன் இந்த பாகுபாடு?' என்று கேட்டார்.

அதற்கு, மற்றொருவர், என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கவனித்தேன்.

சற்று நேர அமைதிக்கு பின், 'இந்த கேள்வியை, இயற்கையிடம் கேட்டேன். 'வேறு யாருக்கும் கொடுக்காத ஒரு வலுவான கருவியை, மனுஷனுக்கு கொடுத்திருக்கேன்... அந்த கருவியை உபயோகப்படுத்தி, அந்த, ஆறு பிரச்னையை சமாளிக்கலாம். அதுதான் ஆறாவது அறிவு. அதை உபயோகப்படுத்தினா, காலுக்கு செருப்பும், குளிருக்குப் போர்வையும் தயார் பண்ணிக்கலாம். நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொள்ளலாம்...' என்றது, இயற்கை.

'அதனால, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், இயற்கையை சரியா புரிஞ்சுக்கணும்...' என்றார், அந்த பெரியவர்.

இதைக்கேட்ட, முதல் ஆசாமி, மனம் தெளிவடைந்தது போன்று, ஏதோ ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

நான் கேட்ட இந்த சங்கதியை, யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதோ எழுதிவிட்டேன். உங்கள் கருத்தை எனக்கு எழுதுங்களேன்.



சுவிட்சர்லாந்தில் படிக்கச் சென்ற, மாணவர் ஒருவர், ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரை இது:

நான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே, 67 வயதுடைய மூதாட்டி ஒருவர் வசித்தார். ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற பின், கணிசமான ஓய்வூதியப் பணம் கிடைக்கிறது.

தினமும், இரண்டு மணி நேரம், உதவி தேவைப்படும் முதியவர் யாருக்காவது உதவும் திட்டம் ஒன்று, அந்நாட்டில் செயல்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில் கலந்து கொண்டு, 85 வயது முதியவர் ஒருவருக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்து வந்தார்.

இந்த, சேவை நேர வங்கி திட்டத்தில் உறுப்பினராகி, அவர்கள் கூறும் முதியவர்களுக்கு உதவி செய்யலாம். எத்தனை மணி நேரம் உதவி செய்தனரோ, அவ்வளவு நேரம், 'டைம் பேங்க்'கில், அதாவது, நேர வங்கியில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.

சேவை செய்பவர்களுக்கு, அடையாளமாக, 'டைம் பேங்க் கார்டு' வழங்கப்படும்.

நம்மூர் வங்கிக் கணக்கு புத்தகத்தில், எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்வது போல், டைம் பேங்க் கார்டில், எத்தனை மணி நேரம் சேவை செய்தோம் என்ற பதிவு இருக்கும்.

ஒருநாள் மூதாட்டி கீழே விழுந்ததில் அடிபட்டுவிட்டது. டைம் பேங்க் கார்டில், அவர் சேவை செய்த நேரங்கள் சேமிக்கப்பட்டு இருந்ததால், உடனே, ஒரு நர்சை அனுப்பி, அவர் நன்றாக குணமாகும் வரை கவனித்துக் கொள்ள செய்தது, டைம் பேங்க்.

சேவை நேர வங்கியின் உதவியால் குணமடைந்த மூதாட்டி, மீண்டும் சேவை செய்ய கிளம்பி விட்டார்.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இளைய சமுதாயத்தினர் பெரும்பாலோர், இந்த திட்டத்தில் சேர்ந்து சேவை செய்கின்றனர். இவ்வாறு சேவை செய்வதற்கு பணம் தரமாட்டார்கள். அதற்கு பிரதிபலனாக, இவர்களுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் வந்து சேவை செய்வர்.

- இப்படி எழுதியிருந்தார்.

'இது நல்ல திட்டமாக இருக்கிறதே! இதுபோல் ஒவ்வொரு ஊரிலும், சேவை நேர வங்கிகள் இருந்தால், தனிமையில் வாழும் முதியோர்களுக்கு உதவியாக இருக்குமே...' என்று நினைத்துக் கொண்டேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us