Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: ஜெயலலிதா கேட்ட கேள்வி! (7)

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: ஜெயலலிதா கேட்ட கேள்வி! (7)

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: ஜெயலலிதா கேட்ட கேள்வி! (7)

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: ஜெயலலிதா கேட்ட கேள்வி! (7)

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
தமிழக முன்னாள் முதல்வர், செல்வி ஜெயலலிதாவைப் பற்றி நான் எழுத வேண்டுமானால், அதை அவரது பள்ளி மற்றும் என்னுடைய பள்ளி வாழ்விலிருந்து தான் தொடங்க வேண்டும்.

என்னது! இருவரது பள்ளி வாழ்க்கையிலிருந்தா? உண்மை தான்.

தமிழ்வாணன் குடும்பம், சென்னை தியாகராய நகரில், ஜெகதீசன் தெருவில் வாழ்ந்து வந்த காலம். பனகல் பூங்காவிற்கு எதிரில் உள்ள, ராமகிருஷ்ணா பள்ளியில் படித்து வந்த எனக்கு, தினமும் கடக்கும் பாதையில் தான், ஜெயலலிதாவின் வீடு. சிவஞானம் தெருவில் இருந்த இவரது வீட்டைக் கடந்து போகையில், சர்ச் பார்க் கான்வென்டிற்கு அவரும், பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருப்பார்.

சமயங்களில், அவரது அம்மா, சந்தியாம்மா இணைந்து கொள்வார். அப்போது, சந்தியாம்மாவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பல சந்தர்ப்பங்களில் ஓட்டுனர் மட்டும், ஜெயலலிதாவை அழைத்துச் செல்வார்.

ஜெயலலிதாவை சர்ச் பார்க் யூனிபார்மில் எத்தனை பேர் பார்த்திருப்பர்! நான் அடிக்கடி பார்த்துள்ளேன்.

கடந்த 1969க்கு பின், ஜெயலலிதாவை எனக்கு அடையாளமே தெரியவில்லை. ஆம்! வெண்ணிற ஆடை பட ஷூட்டிங்கிற்கு என, அவர் அணிந்த திரையுலக உடைகள், அவரை அடையாளம் தெரியாமல் மாற்றி இருந்தன. பள்ளி மாணவி ஜெயலலிதாவா இவர் எனக் கேட்கும்படி, அவர் அடியோடு மாறியிருந்தார்.

ஷூட்டிங் நேரமும், என் பள்ளி நேரமும் ஒன்று என்பதால், 'டேய்! இன்னைக்கு அம்முவைப் பார்த்தேன்டா...' என, என் வகுப்புத் தோழர்களிடம் பெருமை அடித்துக் கொள்வேன்.

இதுபற்றி, ஜெயலலிதாவுடனான இரண்டாவது சந்திப்பில் குறிப்பிட்ட போது, அவருக்கு வியப்பு. காரணம், ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு, நான் தான் அவரது பள்ளிக்காலம் பற்றிப் பேசியிருப்பேன் போல!

எந்த உணர்ச்சியையும் அதிகம் வெளிப்படுத்தாத பக்குவத்திற்கு ஜெயலலிதா மாறிவிட்ட பிறகு, தன் இயல்பையும் மீறி, சிறு வியப்பை வெளிப்படுத்தி, 'அப்படியா?' என்ற, இந்தச் சொல்லிற்கு அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.

'உங்கள் கார் ஓட்டுனர், சாமியைப் பற்றிக் கூட எனக்கு நினைவு இருக்கிறது...' என, நான் சொன்ன போது, அவரது புருவங்கள் மேலும் ஒரு நுாலிழை அளவு உயர்ந்ததை, நான் கவனிக்கத் தவறவில்லை.

முதல் சந்திப்பைப் பற்றிக் கூறாமல், இரண்டாவது சந்திப்பிற்குப் போய் விட்டீர்களே என்கிறீர்களா?

அதுவும் சரி தான்!

ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் நடிக்கத் துவங்கியதும், என் வகுப்பு தோழர்களுக்கு அவரைக் காண வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.

'எல்லாரும், காலை, 8:45 மணிக்கு சிவஞானம் தெருவுக்கு, நம்ம மலபார் ஹேர் கட்டிங் மகன் பிரபாகர் வீட்டுக்கு வந்துடுங்கடா! நேர் எதிர் வீடுடா. அம்முவை நான் காட்டுறேன்...' என, ஜம்பமடித்தேன்.

எல்லாரும் வந்து விட, அன்று ஷூட்டிங் கேன்சல் போல! பசங்க திட்டித் தீத்துட்டானுங்க.

'டேய்! இவன் சும்மா புளுகுறான்டா...' என்றனர். மறுநாளும் வரவழைத்துக் காட்டிய பிறகு, என்னை, 'ஹீரோ' போல் நடத்தினர்.

'இவன் ரொம்ப லக்கிடா! டெய்லி பார்த்துடுவான்டா...' என்றும் பேசிக் கொண்டனர்.

இன்று, அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறி வரும், பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் தான், அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற, 1991ல், அவர், பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பினார். தமிழக அரசின் செய்தித்துறைப் பிரிவு, இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சரியான நேரத்தில் ஹோட்டலுக்குள் நுழைந்தார், ஜெயலலிதா. நேரத்தைக் கடைபிடிக்கும் தமிழக முதல்வர்களுள், ஜெயலலிதா குறிப்பிடத் தகுந்தவர். திரையுலகிலிருந்து வந்த ஓர் அரசியல் ஆளுமை, இந்த விஷயத்தில் நெருப்பாக இருந்தது குறித்து, எண்ணி எண்ணி நான் வியந்திருக்கிறேன். முதல்வர் என்றால் முன்பின் தான் வருவர் என, சாவகாசமாக இருந்த என் பத்திரிகையுலக நண்பர்கள் அனைவரும், ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டோம்.

அதுமட்டுமல்ல!

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, நம்மவர்களுடன் தோழமை காட்டும் முதல்வர், நமக்குக் கிடைத்திருக்கிறாரே என்றும் பேசிக் கொண்டோம்!

என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. அவருக்கும், பத்திரிகையாளர்களுக்குமான உறவு, வேறு எந்த முதல்வருடனும் இல்லாத அளவிற்குக் கசந்து போனது, பெரிய துரதிருஷ்டம் என்பேன்.

முதல்வர் - பத்திரிகையாளர் முதல் சந்திப்பில், 'குமுதம் - கல்கண்டு' இரண்டின் சார்பாகவும் நான் கலந்து கொண்டேன். இந்தச் சந்திப்பை ஒருங்கிணைப்புச் செய்தவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுவாமிநாதன்.

மேடை, 'மைக்'கெல்லாம் கிடையாது. பத்திரிகையாளர்கள் அங்கங்கே நின்று கொண்டிருக்க, ஜெயலலிதா, மெதுவாக நடந்தபடி எங்களை நெருங்கி வந்து, எல்லாருடனும் சகஜமாக உரையாடியதை இன்று எண்ணிப் பார்த்தாலும், என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

பின்னாளில் பத்திரிகையாளர்கள் எவரும், அவரை நெருங்கவே முடியாததை ஒப்பிடும் போது, நடந்த இச்சந்திப்பு, மிக அரிதானது என்பேன்.

தமிழகத்தின் எந்த முதல்வரும் பின்பற்றாத இந்த நடைமுறையை ஆரம்பித்து வைத்த, ஜெயலலிதா, பின்னாளில் அடியோடு மாறிப் போனது ஏன் என்பது, புரியாத புதிர் மட்டுமல்ல, இதன் காரணங்கள் ஆராயப்படவும் வேண்டும் என, நினைக்கிறேன்.

நான் நின்ற இடத்திற்கு, ஜெயலலிதாவும், அதிகாரி சுவாமிநாதனும் வந்தனர்.

ஒரே கணத்தில் இருவரும் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம்.

'எழுத்தாளர் தமிழ்வாணனின் மகன். லேனா தமிழ்வாணன். குமுதம் - கல்கண்டு...' எனச் சிறு சிறு சொற்களாகச் சொன்னார், சுவாமிநாதன்.

இதற்கு, ஜெயலலிதா பிரதிபலித்த விதம், எனக்குப் படு சுவாரசியத்தைக் கிளறிவிட்டு விட்டது.

மேலும் சொல்கிறேனே!



தொடரும்.

லேனா தமிழ்வாணன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us