Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (16)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (16)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (16)

அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (16)

PUBLISHED ON : ஜூலை 14, 2024


Google News
Latest Tamil News
வா ராஜா வா சின்ன முதலீட்டிலான திரைப்படம். இப்படத்தில், ஒரு புதிய இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்த முடிவெடுத்தார், ஏ.பி.என்.,

குன்னக்குடி வைத்தியநாதனை முன்னரே அடையாளம் கண்டுவிட்டார், ஏ.பி.என்., அவரை இசை அமைப்பாளராக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தார்.

குன்னக்குடியும் அப்படத்திற்கு மிகவும் சிறப்பாக இசை அமைத்தார். கண்ணதாசன் போன்ற பெரிய பாடலாசிரியர்கள் கிடையாது, உளுந்துார் பேட்டை சண்முகம், பூவை செங்குட்டுவன் போன்றவர்கள் தான். ஆனால், அவர்களும் மிகவும் சிறப்பான பாடல்களை இயற்றி இருந்தனர்.

திருமலை தென்குமரி திரைப்படம், டியூஸ்டே இன் பெல்ஜியம் என்ற ஆங்கில கதையை தழுவியது. தான் பார்த்த அந்த ஆங்கில படத்தின் கதைக்கருவை வைத்து தான், திருமலை தென்குமரி படத்தை, நம் நாட்டின் கலாசாரத்துக்கு ஏற்ப உருவாக்கினார், ஏ.பி.என்.,

திருவேங்கடம் முதல் தென் குமரி வரை பரவியிருக்கும் திருத்தலங்களுக்கு பயணம் செல்லும் பயணக்குழுவின் அனுபவமே அத்திரைப் படத்தின் கரு.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் பேசும் குடும்பங்கள் சேர்ந்து திருப்பதி, மதுரை, கன்னியாகுமரி, குருவாயூர், திருத்தணி மற்றும் மைசூரூ ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களுக்கு சென்று வரும் அனுபவத்தையே, திரைக்கதையாக்கி, திரைப்படமாக எடுத்திருந்தார், ஏ.பி.நாகராஜன்.

திருமலை தென்குமரி படத்தில், பேருந்தில் பயணம் செய்யும் பல்வேறு மொழி பேசும் குடும்பத்தினர்கள், மகிழ்ச்சியாக அவரவர் மொழியிலும் பாடல் பாடுவர். அப்பாடல், பன்மொழி கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும். இந்திய கலாசாரமான வேற்றுமையில் ஒற்றுமை காணும் கருத்தே, அப்பாடலில் அடங்கி இருக்கும்.

மிகச் சிறிய முதலீட்டில், எடுத்த படம், நல்ல வெற்றியைப் பெற்றது. படத்தைப் பார்த்து விட்டு வரும்போது, இன்பமயமான சுற்றுலாவுக்கு நாமே சென்றுவிட்டு வந்த நிறைவு ஏற்படும்.

ஏ.பி.என்., இயக்கத்தில் உருவான, கண்காட்சி படமும், நல்ல வரவேற்பை பெற்றது. கண்காட்சி ஒன்றில் நடக்கும் கதை என்பதை சுட்டிக்காட்ட, அழகிய தமிழில், கண்காட்சி என்று பெயர் வைத்தார். வடசென்னையில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றிலேயே, அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடைபெற்றது.

கண்காட்சி திரைப்படத்தில் நாட்டுப்புற நடனம், பரதம், ரதி - மன்மதன் நடனம் என, நம் கலாசாரத்துக்கே உரிய நடனங்களை இணைத்திருந்தார், இயக்குனர் ஏ.பி.என்.,

அதில், கவிஞர் கே.டி.சந்தானம் எழுதிய, ரதி - மன்மதன் நடனத்துக்குரிய பாடல், நெருடலான தமிழ் வார்த்தைகளில் இயற்றப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, அப்பாட்டுக்கு நடனமாடுவது, அதில் நடித்த நடிகர்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது.

அப்பாட்டின் வாயசைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், நடன அசைவுகளை மேற்கொள்வது சிரமமாக இருந்தது; அதைப்போல ஆடுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், வாயசைப்பு சிரமமாக இருந்தது. ஆனால், எடுக்கப்பட்ட பெரு முயற்சியால், பாடல் சிறப்பாக அமைந்தது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடலை வீட்டுக்கு எடுத்துச் சென்று, பலமுறை பாடிப் பார்த்து, பின்னர் ஒலிப்பதிவின் போது சிறப்பாகப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பாடல், 'அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா...' என, துவங்கும்.

தமிழுக்கு, முதல் முதலில் இயல் இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும், இலக்கணம் படைத்த அகத்திய முனிவரின் வரலாற்றை, அகத்தியர் என்ற படமாக உருவாக்கினார், ஏ.பி.என்.,

அகத்தியர் தமிழ் மொழியிலும், வைத்திய சாஸ்திரத்திலும் வல்லவர். அவர், சித்தர் மட்டுமல்ல, சித்தர்களுக்கெல்லாம் தலைவரானவர்.

படத்திற்கு முக்கிய பாத்திரங்கள் நாரதரும், அகத்தியரும் தான். அவ்விரு பாத்திரத்தையும், நடிகர் டி.ஆர்.மஹாலிங்கமும், இசைமணி சீர்காழி கோவிந்தராஜனும் சிறப்பாக ஏற்று செய்திருப்பர்.

இசை அமைப்பாளனுக்கு வேண்டிய அடிப்படை மற்றும் இசை ஞானம், ஏ.பி.நாகராஜனுக்கு நிறையவே உண்டு. அதைப் போன்று பாடல் வரிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை, பாட்டைக் கேட்ட உடனே தீர்மானித்து சொல்லி விடுவார்.

அகத்தியர் படத்துக்கு பாடலெழுதும் போது, பூவை செங்குட்டுவன் எழுதிய, ஒரு பாடலுக்கு, பல்லவி எடுத்துக் கொடுத்துள்ளார், ஏ.பி.என்.,

படத்தின் சூழ்நிலைப்படி, தன் பெற்றோரை கடவுளாக நினைக்கும் மகன் பாடும் பாடல் என்று குறிப்பு கொடுத்துள்ளார், ஏ.பி.என்.,

'தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தைசொல் மிக்க மந்திரமில்லை...' என்ற வரிகளைச் சொல்லி, 'இதுதான் பாடலின் பல்லவி. இதை வைத்துப் பாடலை எழுதுங்கள்...' என்று கூறியுள்ளார்.

அதையே பல்லவியாக வைத்து, பாடலாசிரியரும் அருமையான பாடலை எழுதிக் கொடுத்தார்.

'கவிஞர்கள் எழுதும் பாடலில் சிறந்ததை, கேட்ட உடனே தேர்ந்து எடுக்கும் ஞானம், ஏ.பி.என்.,னுக்கு மிகமிக அதிகம்...' என, தன் கருத்தை பதிவு செய்துள்ளார், கவிஞர் பூவை செங்குட்டுவன்.

அகத்தியர் படத்தில், ராவணனுக்கும், அகத்தியருக்கும் நடக்கும் போட்டி பாடலை, கவிஞர் உளுந்துார்பேட்டை சண்முகம் எழுதினார்.

பாடலின் பல்லவியிலேயே அவனது அகங்காரம் தெரிய வேண்டும் என்பதுடன், 'நாட்டை' ராகத்தில் அமைய வேண்டும் என்று கூறி, கவிஞரிடம் பாடலை

எழுதச் சொல்லியுள்ளார், இயக்குனர் ஏ.பி.என்.,

— தொடரும்.

நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.



கவிஞர் பூவை செங்குட்டுவனிடம், குருவாயூரில், குருவாயூரப்பன் மேல், சீர்காழி கோவிந்தராஜன் பாடும் ஒரு பாடலை எழுதச் சொன்னார், இயக்குனர் ஏ.பி.என்., அப்போது, 'நான் குருவயூர் போனதில்லை. அந்த கோவிலையும் பார்த்தது இல்லை. எப்படி பாடல் எழுதுவது?' என்றார், பூவை செங்குட்டுவன். அதற்கு, 'குருவாயூரப்பனும் திருமாலின் வடிவம் தான். அவரை நினைச்சுக்கிட்டு பாட்டு எழுதுங்க, நல்லா வரும்...' என்றாராம், நாகராஜன். அதன்படியே பூவை செங்குட்டுவன் எழுதினார். அப்பாடல், படத்தில் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தி வந்தது.அது, 'குருவாயூரப்பா, திருவருள் தருவாய் நீயப்பா-; உன் கோவில் வாசலிலே என்றும் திருநாள்தானப்பா...' என்ற பாடல்.

- கார்த்திகேயன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us