Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தொழிலாளர் வெற்றி நாள்!

தொழிலாளர் வெற்றி நாள்!

தொழிலாளர் வெற்றி நாள்!

தொழிலாளர் வெற்றி நாள்!

PUBLISHED ON : ஏப் 27, 2024


Google News
Latest Tamil News
மே 1 தொழிலாளர் தினம்!

பள்ளி வகுப்பறையில் ஒவ்வொரு நாளும் எத்தனை மணிநேரம் இருக்கவேண்டியிருக்கிறது. ஐந்து மணிநேரம்தானே! அதுவே, 12 மணி நேரமாக இருந்தால் எப்படி இருக்கும். கேட்கும் போதே கலக்கமாக இருக்கிறதா... மனித உழைப்பு நேரத்தை முறைப்படுத்தியதை நினைவுபடுத்தும் வகையில், மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுதும் தொழிலாளர்கள், 18ம் நுாற்றாண்டில் தினமும், 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. சில பகுதிகளில், 18 மணிநேரம் என்ற கட்டாயமும் இருந்தது!

ஐரோப்பாவில், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே நிலை தான். ஒரு கட்டத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் நெசவுத் தொழிலாளர்கள், 15 மணி நேரம் உழைத்து வந்தனர். உழைப்பு நேரத்தை குறைக்க கோரி நடந்தது போராட்டம் எடுபடவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டடத் தொழிலாளர்கள், 'எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய மட்டோம்' என்று போராடி வென்றிருந்தனர். இது உலகம் முழுதும் பரவியது. கோரிக்கைக்கு புதிய உத்வேகம் தந்தது.

ஆசிய ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய நாடான ரஷ்யாவில் அப்போது மன்னர் ஆட்சி நடந்தது. அனைத்து வகை தொழிலாளர்களும் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்களும், வேலை நேரத்தை குறைக்க கோரி போராட துவங்கினர்.

அமெரிக்கா, பாஸ்டன் துறைமுகத்தில் கப்பல் கட்டும் பணி செய்த தச்சு தொழிலாளர்கள், வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகின் பல பகுதிகளிலும், எட்டு மணி நேரம் வேலை என்ற கோரிக்கை தீவிரமானது.

இது வலுவாகி, மே 1, 1886ல் அமெரிக்காவில் வேலை நிறுத்தமாக வெடித்தது. இதில், 3.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். ரயில் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் நின்றது. பணி நிறுத்தத்தால் ஊதியம் கிடைக்காமல் தொழிலாளர்கள் துவண்டனர். என்றாலும், போராட்டத்தை கைவிடவில்லை.

இதனால், பெரிய ஆலைகளை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. உற்பத்தி முடங்கியது. போராடியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இறந்தவர்கள் உடலுடன் நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். இதனால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது. கோரிக்கைக்கு அமெரிக்க அரசு பணிந்தது. எட்டு மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இது பிறநாடுகளிலும் பரவியது.

சர்வதேச தொழிலாளர் மாநாடு ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில் நடந்தது. அதில் தொழிலாளர் தினம் பற்றி விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் போராட்டம் துவங்கிய நாளை நினைவூட்டும் விதமாக, மே 1ல் தொழிலாளர் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலாக, கடந்த, 1923ல் மே தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. பொதுவுடமை இயக்க தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலார் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன் நினைவாக பின், சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையை, தமிழக அரசு நிறுவியது. இதை, பிரபல சிற்பி தேவிபிரசாத்ராய் சவுத்ரி வடித்துள்ளார்.

- ஜி.எஸ்.எஸ்.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us