Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (246)

இளஸ் மனஸ்! (246)

இளஸ் மனஸ்! (246)

இளஸ் மனஸ்! (246)

PUBLISHED ON : ஏப் 20, 2024


Google News
Latest Tamil News
அன்பு மிக்க அம்மா...

என் வயது, 15; தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. என் தாய், தற்போது கருவுற்றுள்ளார். அதுவும், இரட்டையராக இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். விரைவில், பிரசவம் நடக்க இருக்கிறது. உறவினர்கள் எல்லாம், என் பெற்றோரை அவதுாறாக பேசி வருகின்றனர்.

எனக்கோ, பிறக்கப்போகும் குழந்தைகள் மீது கொள்ளைப்பிரியம் வந்து விட்டது. என் அம்மா குழந்தைகளை பெற்றெடுத்த பின், நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என் பெற்றோருக்கு எப்படி எல்லாம் உதவ வேண்டும். எனக்கு தக்க யோசனை கூறுங்கள்.

இப்படிக்கு,

அரிமா அங்கவை.



அன்பு மகளே...

இரட்டைக் குழந்தைகள், பெற்றோருக்கு மட்டுமல்ல; குடும்பத்துக்கும் இறைவன் தரும் வரம். ஒரு துளி கூட பொறாமையை, உன் மனதில் அண்ட விடாதே. 15 வயதான நீ, உன் தம்பி, தங்கை மீது, இரண்டாம் தாயாய் பாசத்தை கொட்ட முடியும்.

சுகப்பிரசவம் என்றாலும், சிசேரியன் என்றாலும், அம்மாவுடன் இணைந்து ஆதரவாய் இரு.

குழந்தைகள் பிறந்ததும், தாய் பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் சுரக்க, ஊட்டச்சத்து மிகுந்த உணவை, உன் தாய் உட்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் கூடவே கூடாது. மூன்று மாதங்களுக்கு பின், புட்டிப்பால் தரலாம்; பால் புட்டிகளை முறையான வழியில் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். குழந்தைகளை கவனித்து கொள்வதில், அப்பாவின் பங்கு கச்சிதமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளும் போது, உன் அம்மா துாங்கி ஓய்வெடுப்பார்.

இரண்டு குழந்தைகளுக்கும், கூட்டு துாக்கம் நல்லது. குழந்தைகள் இணைந்து உறங்குவது, வீட்டில், ஒரு கர்ப்பப்பை இருக்கும் சூழலை உருவாக்கும். ஒரு குழந்தையின் அழுகை, இன்னொரு குழந்தைக்கு பழகிப் போகும். அழுகை சப்தத்துக்கு இடையே துாங்கும் சகிப்புத்தன்மை குழந்தைகளுக்கு வந்து விடும்.

குழந்தைகளுக்கு துாக்க பயிற்சி கொடுப்பது நல்லது. நோய் பீடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எடை சீராக உயர வேண்டும்.

உன் தாய்க்கு மனநிலையில் மாற்றங்களும், உடல் ரீதியான சவால்களும் ஏற்படும். உணர்வு பூர்வமாக அம்மாவுடன் இணைந்திரு. ஆடை, டயப்பர்கள், சுகாதார பொருட்கள், பால் பவுடர் அனைத்தும், இரண்டு செட்டுகளாய் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் பொருளாதார மேலாண்மை, வீட்டில் அமைதி நிலவ செய்தல், வீட்டு சுகாதாரத்தை பேணுதல், குழந்தைகளை பார்க்க வரும் உறவினர், நண்பர்கள் கூட்டத்துக்கு விருந்து உபரிசத்தல், குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக வீட்டை மாற்றம் செய்வது எல்லாம் நல்லது. இவற்றை நீயும் சேர்ந்து செய்யலாம்.

உன் சுய தேவைகளை நீயே பூர்த்தி செய்து, பெற்றோருக்கு பாரத்தை குறைக்கலாம்.

உனக்கு இரு தம்பியரோ, தங்கையரோ அல்லது ஒரு தம்பி, தங்கையோ பிறக்க கூடும்.

பெற்றோருக்கு தார்மீக ஆதரவை நல்கி, அவர்களின் உடல், மனபாரத்தை பாதியாக குறை.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது என்னையும் அழை. வந்து முத்தமிட்டு வாழ்த்துகிறேன்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us