Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேழமலைக்கோட்டை! (7)

வேழமலைக்கோட்டை! (7)

வேழமலைக்கோட்டை! (7)

வேழமலைக்கோட்டை! (7)

PUBLISHED ON : ஏப் 13, 2024


Google News
Latest Tamil News
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசன் மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் எல்லையில் மர்ம நபர்கள் நடமாட்டம் தெரிந்தது. இது பற்றி மன்னரிடம் தெரிவித்தனர். நாட்டைச் சூழ்ந்த ஆபத்தை, முறியடிக்க தயாராயினர் வீரர்கள். இனி -

வீரர்களை வழி நடத்திய அணித்தலைவன் காட்டை உன்னிப்பாக கவனித்தபடி, 'அங்கே நடமாட்டம் தெரிகிறது. அசைவைப் பார்த்தால் அது மான் கூட்டமாகவோ, வரையாட்டு கூட்டமாகவோ இருக்க வேண்டும். அல்லது எதிரிகளாக இருக்க வேண்டும். இனி, சத்தமின்றி நகர்வோம்...' என்றான்.

சிறு தொலைவு சென்றதுமே, அந்த பகுதியில் இருப்பது வனவிலங்கு அல்ல. மனிதர்கள் தான் என்பது தெரிந்தது.

அங்கு நான்கு பேர் இருந்தனர். வீரர்களை கண்டதும், காட்டுக்குள் புகுந்து ஓடியது கண்டு, 'இரண்டு பேர் இங்கேயே நின்று தீ மூட்டி, புகை எழுப்பி, குதிரை வீரர்களை வரவழையுங்கள். மற்றவர்கள் பின் தொடர்ந்து செல்வோம்...' என்று கட்டளையிட்டான் அணித்தலைவன்.

ஓடியவர்களை நோக்கி ஈட்டிகளை வீசினர் வீரர்கள்.

அந்த நால்வரும் வளைந்து நெளிந்து தாக்குதலிலிருந்து தப்பியோடிவிட்டனர்.

'அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பது போல் தெரியவில்லை. உயிருடன் பிடியுங்கள்...'

அணித்தலைவன் உத்தரவை தொடர்ந்து வீரர்கள் முயன்றனர்.

ஓடிக்கொண்டிருந்த நால்வரும் சட்டென உயரமான மரங்களில் ஏறினர். லாவகமாக தாவி ஆளுக்கொரு மரத்தின் உச்சியில் நின்றனர்.

அந்த மரங்களை நோக்கி ஓடி வந்தனர் வீரர்கள்.

அப்போது தான் அது நிகழ்ந்தது.

ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்த போது, தலையை உயர்த்தி அந்த நபர்களை பார்த்தபடியே ஓடினர் வீரர்கள். யாரும் எதிர்பாராத வகையில், அந்த காலாட்படை வீரர்களை பூமி விழுங்கியது!

என்ன நடந்தது என்று உணரும் முன், வீரர்கள் மீது சருகுகளும், காய்ந்த மரக்கிளைகளும் விழுந்தன. தாங்கள் பொறி வைத்துப் பிடிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தனர்.

பூமியில் பள்ளம் தோண்டி, மரக்கிளைகளை பரப்பி, சருகுகளால் மறைத்து வைத்திருந்தது புரிந்தது.

காலாட்படை வீரர்கள், பள்ளத்தில் விழுந்த மறுகணமே, மரத்தில் ஏறியிருந்த நால்வரும், கீழே குதித்து சூழ்ந்து நின்றனர்.

வானத்தில் புகை அடையாளத்தை கண்ட மகேந்திரன், உற்சாகமாகி இரண்டாம் படையுடன் அந்த இடத்திற்கு வந்தான். மற்ற குதிரை படை அணியினரும் வந்து சேர்ந்தனர்; அவர்களுடன் மோப்ப நாய்கள் இருந்ததை கண்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

'என்ன நடந்தது...'

புகை மூட்டிய வீரர்களிடம் விசாரித்தான் மகேந்திரன்.

'இங்கு, ஒரு புதரில் அசைவு தெரிந்தது. எதிரிகள், நான்கு பேர் இருந்தனர்; அவர்களை நம் வீரர்கள் விரட்டி சென்றுள்ளனர்; இந்நேரம் பிடித்திருப்பர்...'

'வாருங்கள்... போகலாம்...'

உற்சாகத்துடன் படை வீரர்களை நடத்தி சென்றான் மகேந்திரன். அந்த காட்டு பாதையில், வெகுதுாரம் சென்றும் எவரையும் பார்க்க இயலவில்லை.

'நம் வீரர்கள் சென்றதற்கான அந்த அறிகுறியும், ஓசையும் கூட கேட்கவில்லையே...'

குழப்பம் இருந்ததால், வீரர்கள் அனைவரையும், அங்கு நிற்க வைத்தான் மகேந்திரன்.

'புகை மூட்டுங்கள். அதை பார்த்து, நம் காலாட்படை இங்கு வரட்டும்...'

உடனே, புகை மூட்டப்பட்டது; அது வான உயரத்துக்கு எழுந்தது. அவர்கள் காத்திருந்தும், எந்த ஒரு அசைவும் தெரியவில்லை; குழப்பத்துடன், அச்சமும் அங்கு நிலவியது.

'என்ன செய்வது... நம் வீரர்கள் இருக்கும் இடமும், சென்ற தடமும் தெரியவில்லை; புகையை அடையாளம் கண்டு, அவர்கள் திரும்பவும் இல்லை...'

அணித்தலைவர்களுடன் ஆலோசித்தான் மகேந்திரன்.

'தலைவரே... ஒரு சின்ன ஆலோசனை...'

'சொல்லுங்கள்...'

'இங்கு இருக்கும் உயரமான மரத்தின் மீது ஏறி, ஏதாவது தெரிகிறதா என்று பார்க்கலாம்...'

'உடனே, செயல்படுத்துங்கள்...'

வீரர்கள் மூவர், விரைந்து மரம் ஏறி, உச்சியில் இருந்து, காட்டுப் பகுதியில் பார்வையை படர விட்டனர்; அவர்கள் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை.

'விபரீதம் ஏதோ நடந்துள்ளது என, நினைக்கிறேன். நம் வீரர்கள் யாரும், தனித்து செல்லாதீர்; மூன்று அணியும் இணைந்து, சிறைப் பிடிக்கப்பட்டவர்களை தேடலாம்...'

மகேந்திரன் கட்டளையிட்டான்.

சிறிது நேரத்திற்கு பின் -

தேடல் துவங்கி, காட்டின் நடுப்பகுதியில், காலடித் தடங்களை கண்டுபிடித்தனர்.

'வீரர்களே... குதிரைகளை சற்று தள்ளியே நிறுத்துங்கள். இந்த காலடித் தடங்கள் கலைந்து விடக் கூடாது...'

வாளை, பக்கவாட்டில் நீட்டி, கட்டளையிட்டு காலடித் தடங்களை கவனமாய் ஆராய்ந்தான் மகேந்திரன்.

'இவற்றை பார்த்தால், தென்திசை நோக்கி நகர்ந்திருப்பது தெரிகிறது...'

'ஆனாலும் புகை மூட்டி சமிக்ஞை செய்த பின்னும் திரும்பி வரவில்லையே...' என்றான் அணித்தலைவன் ஒருவன்.

'வீரர்கள் திரும்பவில்லை என்றால், வர இயலாத சூழலில் சிக்கியுள்ளனர் என்று தான் அர்த்தம்...'

'அப்படியென்றால், வீரர்கள் சிறைப் பிடிக்கப்பட்டு உள்ளனரோ...'

குதிரையில் இருந்து இறங்கி, காலடி பதிந்த பகுதிகளை கூர்ந்து பார்த்தான் மகேந்திரன். அணித் தலைவர்கள் இருவர் அவனுடன் இணைந்தனர்.

'இங்கு தெரிய கூடியவை வெறும், எட்டு பேரின் காலடித் தடங்கள் அல்ல; அதிகமானோர் சென்றிருப்பது போல் தெரிகிறது...'

'ஆமாம்... நம் வீரர்கள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்...'

'அப்படி தான் தோன்றுகிறது...'

'காலடித் தடங்களை பின் தொடர்ந்தால், வீரர்களை எங்கு அழைத்து சென்றிருப்பர் என்பதை, கண்டறிந்து விடலாம்...'

'காட்டுக்குள், 41 பேராக வந்து, 33 பேர் மட்டும் நிற்கிறோம். இங்கு, எந்த நாட்டு வீரர்கள், எவ்வளவு பேர், எந்த வகை ஆயுதங்கள் வைத்துள்ளனர்; எதுவும் தெரியாது. ஒவ்வொரு முறையும், நம் வீரர்களை சிறைப் பிடித்திருப்பதை பார்த்தால், எதிரி வலுவானவர் என்பது புரிகிறது. மீதமுள்ள நாம், எதிர்ப்பது இயலாத காரியம். இந்த இடத்தை அடையாள படுத்துவோம். உடனே, கோட்டைக்கு சென்று, தளபதியிடம் தகவல் கூறுவோம்...'

கூறியபடி சுற்றும், முற்றும் பார்த்தான் மகேந்திரன்.

உடனிருந்த வீரர்களுக்கும், அது சரியான யோசனையாக தோன்றியது. அங்கிருந்த மரக்கிளைகள் சிலவற்றை வெட்டி வீழ்த்தி திரும்பி வரும் போது, நினைவில் நிற்கும் வகையில் அடையாளம் ஏற்படுத்தினர்.

வீரர்கள் கோட்டைக்கு திரும்பிய போது மேலும், அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குதிரை வீரர்களில், ஆறு பேர் காட்டிலிருந்து திரும்பவில்லை.



- தொடரும்...

- ஜே.டி.ஆர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us