Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தைரியம்!

தைரியம்!

தைரியம்!

தைரியம்!

PUBLISHED ON : பிப் 03, 2024


Google News
Latest Tamil News
ஆங்கிலத் தேர்வுக்கு கவனமுடன் படித்தான் மதன். பக்கத்து அறையில், அவன் அப்பா, பெரியப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தார். ஏதேச்சையாக, அது காதில் விழுந்தது. அவன் மனம் அதிர்ச்சியில் உறைந்தது.

மறுநாள் வகுப்பில் அமர்ந்திருந்தான் மதன். சோக முகம் கண்டு விசாரித்தான் நண்பன் ரவி.

''ஒரு உண்மையை சொல்கிறேன். யாரிடமும் பகிராதே...''

தலையசைத்து, ஒப்புதல் தெரிவித்தான் ரவி.

அப்பாவும், பெரியப்பாவும் கலந்து பேசிய விஷயத்தை கூறினான்.

அதை கேட்டு, ரவியின் முகம் பயத்தில் வியர்த்தது.

''இதெல்லாம் பெரிய இடத்து விஷயம். உன் வேலையை பார்; அது தான் நல்லது...''

''இல்லை ரவி. அவர்கள் பேசியது போல, நடப்பதற்கு வாய்ப்பில்லை; அதில், ஏதோ மர்மம் இருக்கிறது. அதை தான் கண்டுபிடிக்கப் போறேன்...''

''இதற்கு உன் அப்பா அனுமதிக்கணுமே...''

''வீட்டில் யாரும் இல்லாத போது, உண்மைகளை கண்டுப்பிடிக்க போகிறேன். இது குறித்த தகவல்களை சேகரிக்க, நிறைய மாதங்கள் எடுக்கும்; அதுவரை முயற்சி செய்தபடியே இருப்பேன்; இந்த தகவலை யாரிடமும் கூறி விடாதே...''

உறுதியாக தெரிவித்தான் ரவி.

மூன்று மாதங்கள் ஓடின -

வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் தமிழாசிரியர் சரவணன்.

''ஐயா... மதனை, தலைமையாசிரியர் அழைக்கிறார்...''

சொல்லி சென்றார் அலுவலக உதவியாளர்.

தலைமையாசிரியரின் அறைக்கு பயத்துடன் சென்றான் மதன்.

அங்கு, தலைமையாசிரியருடன் அந்த ஊர் சப் - இன்ஸ்பெக்டர் அரவிந்தன், சீருடையில் அமர்ந்திருந்தார். பக்கத்தில், மதனின் அப்பா, பெரியப்பா அமர்ந்திருந்தனர்.

''ஐயா... மாணவன் மதன் மிகவும் புத்திசாலி. தைரியசாலியும் கூட; ஒருநாள், இவன் அப்பா, பெரியப்பா இருவரும், இந்த ஊரில், பாழடைந்த சிவன் கோவிலில் இரவு நேரங்களில், குரல்கள் கேட்பதாகவும், அவை பேய், பிசாசுகளாக இருக்கலாம்ன்னு பேசியுள்ளனர்...

''மதனுக்கு, அதில் நம்பிக்கை இல்லை; ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்து, இரவு நேரங்களில், அந்த பக்கம் தனியாக சென்று கவனித்துள்ளான். அந்த கோவிலில், குழந்தை கடத்தும் கும்பல் வந்து செல்வதை கவனித்தவுடன், போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தான். விரைந்து செயல்பட்டு, அந்த கும்பலை பிடித்து விட்டோம்...

''பெரிய குற்றத்தை தடுத்து நிறுத்திய மதனுக்கு, காவல் நிலையம் சார்பாக ஒரு சிறப்பு பரிசை கொடுக்க போகிறோம்...'' என்றார் சப் - இன்ஸ்பெக்டர்.

தலைமையாசிரியர் முகம் மலர்ந்து, மதனை வரவேற்று, ''உன்னால் பள்ளிக்கு பெருமை கிடைத்துள்ளது. இந்த ஆண்டின், சிறந்த மாணவன் என்று உன்னை அறிவித்து, பள்ளி சார்பாக, ஒரு நல்ல பரிசை கொடுக்க போகிறேன்...'' என்றார்.

மதனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பட்டூஸ்... நல்ல செயல்களை, தைரியத்துடன் செய்தால், பேரும், புகழும் அடைவீர்!

ரா.வசந்தராஜன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us