Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (232)

இளஸ்... மனஸ்... (232)

இளஸ்... மனஸ்... (232)

இளஸ்... மனஸ்... (232)

PUBLISHED ON : ஜன 13, 2024


Google News
Latest Tamil News
அன்புள்ள ஆன்டி...

என் வயது, 15; பிரபல பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன். மிருகங்கள், பறவைகள் மீது அளவற்ற அன்பு உடையவன். குறிப்பாக, நாய்கள் மீது கொள்ளை பிரியம் உண்டு. வீட்டில், நான்கு நாய்களை வளர்க்கிறேன்.

எனக்கு, போலீஸ் மோப்ப நாய்களை ரொம்ப பிடிக்கும். அது பற்றி தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

போலீஸ் மோப்ப நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுகிறேன்; அதற்கு வழி உண்டா... விசாரித்து கூறுங்கள் ஆன்டி. நாட்டு நாய்க்கு மோப்ப பயிற்சி கொடுப்பார்களா என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு,

ஆர்.செல்வேந்திரன்.



அன்பு மகனே...

மனிதனுக்கு, 50 லட்சம் நுகர்ச்சி செல்கள் உள்ளன. ஆனால், நாய்க்கு, 22 கோடி நுகர்ச்சி செல்கள் உள்ளன. அதாவது, மனிதனை விட, 44 மடங்கு அதிகம்.

மனிதனை விட, நான்கு மடங்கு கேட்கும் திறன் உடையது நாய். அவற்றால், 150 வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும்; சில நாய் இனங்கள், 1,000 வார்த்தைகளை கூட புரிந்து கொள்ளும் என கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டு நாய்களுக்கு, மோப்ப பயிற்சி கொடுக்க முடியாது. நாய் இனத்தில், லாபரடார், ரீட்ரீவர், ரோட் வெய்லர், ஸ்பிரிங்கர் ஸ்பானியல், ஜெர்மன் ஷெப்பர்டு, பெல்ஜியன் மாலி நாய்ஸ், ப்ள்ட் ஹூண்ட், டச் ஷெப்பர்டு போன்றவையே மோப்பம் பிடிக்கும்; இவையே பயிற்சி பெறுவதற்கு உகந்தவை.

வெடி பொருட்கள், சட்ட விரோத போதை பொருட்கள், சர்வதேச நாணயங்கள் பதுக்கல், கொலையாளிகள், திருடர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க உதவுகின்றன மோப்ப நாய்கள்.

ஆறு மாதம் முதல், ஒன்பது மாதங்கள் ஆன, குட்டிகளுக்கு தான் மோப்ப பயிற்சி கொடுப்பர். மோப்ப நாய்களுக்கும், அவற்றை பழக்கும் உதவியாளர்களுக்கும் மத்திய பிரதேச மாநிலம், போபால் மற்றும் ஹரியானாவில், ஒன்பது மாதங்கள் பயிற்சி தரப்படுகிறது.

இந்திய ராணுவத்தில், ஏராளமான மோப்ப நாய்கள் உள்ளன. ஒன்றின் விலை மதிப்பு, 16 லட்சம் ரூபாய் வரை உள்ளது. மோப்ப நாய்க்கு சம்பளம் உண்டு. அதற்கான உணவு செலவு, பராமரிப்பு செலவை, உதவியாளரிடம் வழங்குவர்.

மோப்ப நாய்க்கு உரிய பெயரை, அதன் பயிற்சியாளரே சூட்டுவார். மோப்ப நாய்க்கு, பெயர் சூட்டுவதற்கு சட்ட திட்டங்களை உலகில் சில நாடுகள் வகுத்துள்ளன. மோப்ப நாய், 100 சதவீதம் குற்றவாளிகளை பிடித்து விடுமா என்றால் இல்லை; அதன் திறனுக்கு ஏற்ப, 50 சதவீதமே வெற்றி கிடைக்கும்.

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற ரின்டின்டின், கே - 9 ஜெத்ரோ, கே - 9 சீக்கோ, கே - 9 ஆக்செல் போன்ற மோப்ப நாய்கள் மிக பிரபலம். மோப்ப நாய்கள், எட்டாம் வயதில் ஓய்வு பெறும். சில நாடுகளில், மோப்ப நாய்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மோப்ப நாயை தத்தெடுக்க விரும்புவதாக கூறினாய் அல்லவா... தாராளமாக தத்தெடுக்கலாம்; அதற்கு, பெங்களூரு நகர போலீஸ் உதவி கமிஷனரை அணுக வேண்டும். அதற்கான தொடர்பு எண்கள்: 080 - 25710856 /080 - 22942370. தத்தெடுக்க பல நிபந்தனைகள் உண்டு; அவற்றை கடைபிடித்தால் நீ நினைப்பது நிறைவேறும்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us