Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடன் தவிர்!

கடன் தவிர்!

கடன் தவிர்!

கடன் தவிர்!

PUBLISHED ON : ஜன 13, 2024


Google News
Latest Tamil News
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பள்ளியில், 1959ல், 4ம் வகுப்பு படித்த போது, ஆசிரியர் ராமநாதன் நீதிக்கதைகளை மனதில் பதியும்படி கூறுவார். அன்றாடம் நடத்தையில், ஒழுக்கத்தை கடைபிடிப்பார். பணி ஓய்வுக்கு பின், அதே ஊரில் வசித்து வந்தார். குறைந்த அளவு ஓய்வூதிய தொகையை பயன்படுத்தி, சிறிய வீட்டில் வாழ்ந்தார்.

அன்று மாதத்தின் முதல் வாரம். அவர் வசித்த வீட்டுப்பக்கம் சென்று கொண்டிருந்தேன். டீ கடைக்காரர், சாப்பாடு வழங்கும் மெஸ் உரிமையாளர், சலவை கடைக்காரர், வீட்டு உரிமையாளர் என, பலரும் அங்கிருந்தனர். பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தார் அந்த ஆசிரியர். இதை கண்டதும், 'ஐயா... எதற்காக இப்போதே பணம் கொடுக்கிறீர்கள்...' என கேட்டேன்.

மிகுந்த தன்னடக்கத்துடன், 'எனக்கு வயதாகி விட்டது. எப்போது வேண்டுமானால் இறைவன் திருவடிகளை அடைய காத்திருக்கிறேன். அன்றாட தேவைக்கு கடைகளில் பொருட்கள் வாங்குகிறேன். அதற்குரிய தொகையை கொடுக்காமல் இறந்தால், கடன்காரன் என்ற அடைமொழி மாறாத வடுவாக ஒட்டி விடும். அதனால், முன் பணமாக கொடுத்து விடுகிறேன். ஒரு காசுக்கு கூட கடனாளியாக இருக்க விரும்பவில்லை...' என்றார்.

அவரது இறப்பில் பலதரப்பட்டோரும் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

எனக்கு இப்போது, 72 வயது; ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் நினைவை போற்றும் விதமாக எந்த பொருளையும் கடனாக வாங்குவதில்லை. இதை லட்சியமாக கடைபிடித்து வருகிறேன்.

- கே.வெங்கடகிருஷ்ணன், சென்னை.

தொடர்புக்கு: 97909 56566






      Our Apps Available On




      Dinamalar

      Follow us