Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொன் கொடுத்த மரம்!

பொன் கொடுத்த மரம்!

பொன் கொடுத்த மரம்!

பொன் கொடுத்த மரம்!

PUBLISHED ON : மே 31, 2025


Google News
Latest Tamil News
அரசூர் கிராமம் அருகே காடு இருந்தது. அதில் பலதரப்பட்ட மரங்கள் காணப்பட்டன.

அவற்றை வெட்டி, விற்பனை செய்து வாழ்ந்து வந்தான் மாறன்.

அன்று --

மாமரம் ஒன்றை தேர்ந்தெடுத்து வெட்ட முற்பட்டான்.

'என்னை வெட்டாதே... வாழ விடு...'

மரம் பேசியதை கேட்டு ஆச்சரியமடைந்தான் மாறன்.

'நீயா என்னிடம் பேசியது...'

'ஆமாம்... ஆபத்து வரும் போது எனக்கு பேசும் திறன் வரும்...'

'சரி... உன்னை வெட்டாமல் போனால் நான் எப்படி வாழ்வது... மரங்களை வெட்டி விற்றால் தானே பணம் கிடைக்கும்; நான் உயிர்வாழ முடியும்...'

'உண்மை தான். பசுமையாக உள்ள மரங்களை வெட்டாதே... முதிர்ந்து காய்ந்தவற்றை தேவைப்பட்டால் வெட்டிக் கொள்...'

'யோசனை சிறப்பாக உள்ளது. ஏற்றுக் கொள்கிறேன்...'

மகிழ்ச்சியடைந்த மாமரம், 'எனக்கு வாழ்வு அளித்த உனக்கு பொற்காசுகள் நாளை முதல் தருகிறேன். பெற்றுக் கொள்...' என்றது.

இது கேட்டு சிரித்த மாறன், 'அது எப்படி முடியும்... நகைப்பூட்டாதே...' என்றான்.

'நான் கூறுவது நிஜம். என்னை நம்பு... நாளை வா...' என்றது மரம்.

'மரம் பேசியதே ஆச்சரியம். இதை கூறினால் யாரும் நம்ப மாட்டர்; எனக்கு புத்தி மழுங்கி விட்டதாக சிரிப்பர். இந்த விஷயத்தை இப்போதே மறந்து விடலாம்' என எண்ணியபடி புறப்பட்டான் மாறன்.

மறுநாள் -

மாமரம் அருகே சென்றான் மாறன்.

'நேற்று உதவுவதாக கூறினாய். இன்று மவுனமாய் இருக்கிறாய். ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்...'

மரம் எதுவும் பேசவில்லை. அப்போது, ஒரு மாங்கனி விழுந்தது. அதை எடுத்தபடி ஏமாற்றத்தோடு புறப்பட்டான் மாறன்.

வழியில், முதியவர் ஒருவர் பசியால் வாடுவதை கண்டான். அந்த மாங்கனியை அவரிடம் கொடுத்தான்.

வாங்கி சாப்பிட்டு பசியாறி நன்றி தெரிவித்த முதியவர், 'இந்த மாங்கனி மிகவும் ருசியாக உள்ளது. அன்றாடம் ஒன்று தருவாயா...' எனக் கேட்டு, சில பொற்காசுகளை அள்ளி கொடுத்தார்.

ஆச்சரியப்பட்டு நின்ற மாறன் முன், தான் அணிந்திருந்த மாறுவேடத்தை கலைத்தார் முதியவர்.

அது நகர்வலம் வந்த அந்நாட்டின் மன்னர் என தெரிந்தது.

திகைத்து நின்ற மாறன், மரம் கூறியதை எண்ணிப்பார்த்தான்.

அன்று முதல், மன்னரிடம் மாம்பழங்கள் கொடுத்தான்; பொற்காசுகள் பெற்று செல்வந்தனாக மாறினான். பின், மரம் வெட்டுவதை தவிர்த்து புதிதாக நட்டு வளர்க்க துவங்கினான்.

பட்டூஸ்... பிறருக்கு துன்பம் தராத செயல்களால் பெரிய நன்மை ஏற்படும்!

- பெ.பாண்டியன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us